தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உரை



கடவுள் வாழ்த்து

திணை :பாடாண்
துறை : கடவுள் வாழ்த்து
(துறைவிளக்கம்) என்றது, இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது.
(இலக்கண விளக்கம்)
  
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே  
  
 நாடுங் காலை நாலிரண் டுடைத்தே”     (தொல். பாடாண் 80) 
என்புழிப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.
“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப் பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப்படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.
 
நேரிசையாசிரியப்பா
 
மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் 
 
வளைநரல் பௌவம் உடுக்கை யாக 
 
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்  
 
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக 
5
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய 
 
வேத முதல்வன் 1 என்ப  
 
தீதற விளங்கிய திகிரி யோனே 
பாரதம் பாடிய பெருந்தேவனார்
(சொற்பொருள்) மா நிலம் சேவடி ஆக - பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூ நீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக - தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; விசும்பு மெய் ஆக - ஆகாயம் மெய்யாகவும்; திசை கை ஆக-திசை கைகளாகவும்; பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக-தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; இயன்ற - அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன் - நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; தீது அற விளங்கிய திகிரியோன் என்ப-குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு.
(விளக்கம்) மா-பெருமை. தூ நீர் - அலையாலே தூவப்படுநீரெனவுமாம். வளை-சங்கு. நரலுதல்-ஒலித்தல். பௌவம்-கடல். திகிரி-சக்கராயுதம்.
இதனுள் ஐம்பெரும் பூதமும் மதியமும் ஞாயிறும் திசையும் துறக்கமுமாய் அமைந்த மூவுலகமும் திருமாலினொருவடிவமேயெனவும், அவன் அவ்வடிவாக விளங்குதலால் உலகமும் உலகத்துயிர்களும் அவ்வுயிர்களாலே துய்க்கப்படும் பொருளும் அவனேயெனவும், அவனியல்பை உள்ளத்தாலுணரவல்லாரே ஆன்றோரெனவும், அவரே உயிர்களின்மாட்டுப் பேரருளுடைமையான் விரித்துக் கூறுவாரெனவும், பெரிதும் பயனெய்துமாறு கூறினாராயிற்று. ஏனைப் பூதமும் பிறவுங் கூறிய அடிகள் சிதைவுற்றமையின், வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்று.
உயிர்ப்பன்மை மெய்யாற் செய்யப்படும் வணக்கம் திருவடியிடத்ததாதலின் அதனை முற்கூறினார். மனத்தாலே கருதற்குரியானன்றிக் காண்டற்கரியனென்பார் விசும்பு மெய்யென்றார், இனி நியாய நூலார் ‘விசும்பு நீலநிறமுடையது’ என்றலின், இறைவனது நீலமேனியை நோக்கி விசும்பு மெய்யாக என்றாரெனலுமாம். உயிர்களின் நல்வினை தீவினை யறிந்து அவற்றிற்கேற்ப உதவுதற் பொருட்டு யாண்டுஞ் சான்றாகி யுறைதலால் எல்லாம் பயின்றாரென்றார்; எனவே இறைவனது உள்ளுறையாயிருக்குந் தன்மை (அந்தர்யாமித்துவங்) கூறியதாயிற்று. ஊழி திரியுங்காலத்து எல்லாம் அழியாது அளித்தற் சிறப்புக் கூறுவார் அகத்தடக்கியென அவனுறுப்பகத்தடக்கினமை கூறினார். இறைவனது பரத்துவங் கூறுவார் வேதமுதல்வனென்றார். இங்ஙனம் கூறியவாற்றால் அவ்வுருவைத் தியானம் செய்கவென்றதாயிற்று. மண் விண் பாதலம் என்ற மூன்றுலத்துக்கும் அவுணராலே செய்யப்படுகின்ற தீங்குகளைப் போக்கி விளங்குவதாலே, தீதற விளங்கிய திகிரியுடையோனென்றார்.
ஆக, ஆக, ஆக, ஆக, ஆகப் பயின்று அடக்கிய முதல்வனெனக் கூட்டுக. ஆன்றோர்: தோன்றா எழுவாய். இருவகை வாழ்த்தினுள் இது தனக்குப் பயன்பட வாழ்த்தியது.
(பெருமழைப்புலவர் ஆய்வுரை) இது ‘பிறன் கோட் கூறல்’ என்னும் தந்திரவுத்தி; என்னை? ஆசிரியர் பெருந்தேவனார் ‘இறைவனே மாயையாகவும் உயிர்களாகவும் பரிணமிப்பன்’ என்னும் வைணவர் கூறும் பரிணாம வாதம் தமக்குடன் பாடாகாதிருந்தும் அவர் சமயக் கடவுளாகக் கொள்ளப்பட்ட திருமாலுக்கு அவர் மதமே பற்றி மாநிலஞ் சேவடியாகத் தூநீர்ப்பௌவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசை கையாக மதியமொடு சுடர் கண்ணாக இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப என்றார் என்க. வைணவர் ‘இறைவனே மாயையும் உயிர்களுமாய்ப் பரிணமிப்பன்’ என்னும் கொள்கையுடையாராதலை,
  
“மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி 
  
 மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி 
  
 மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை 
  
 மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே” 
எனவரும் செய்யுளானும் உணர்க; (சிவஞான சித்தியார் பரபக்கம்: பாஞ்சயாத்திரி மதம். 7) இனி, செய்யுட் கருத்தோடு,
  
“அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்  
  
 ஏம மார்ந்து நிற்பிரிந்தும் 
  
 மேவல் சான்றன எல்லாம்” 
எனவரும் பரிபாடலையும் (4-33-5)
  
“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை 
  
 படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் 
  
 உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” 
எனவரும் திருவாய் மொழியையும் (1 : 7) ஒப்பு நோக்குக.
     இனி, இவ்வாசிரியர், ஆசிரியர் தொல்காப்பினார் “மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும்” என்று கூறிய முறைபற்றி அகப்பொருட் டொகைநூல்களுள் முதலாவதாகிய இந் நற்றிணைக்கு மாயோனையும் இரண்டாவதாகிய குறுந்தொகைக்குச் சேயோனையும் வாழ்த்தி வேந்தன் முதலிய ஏனைத் திணைத் தெய்வங்களை உலகத்தோர் முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடும் வழக்கமின்மையின் எஞ்சிய வாழ்த்துக்களைத் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமான் வாழ்த்தாகவே இயற்றியிருத்தலும் நுண்ணிதின் உணர்க. இதனால், இவர் சமயம் சைவம் ஆகும் என்பதும் இந்நூலின்கண் திருமாலைத் திணைத்தெய்வமாதல் பற்றி அச் சமயத்தார் கொள்கையையே மேற்கொண்டு வாழ்த்தினர் என்பதும் உணர்க. இனி, இயன்ற எல்லாம் பயின்று என்பதற்கு அம்மாநிலத்தே இயன்ற உயிரெல்லாம் தானேயாகிப் பயின்று என்னல் சிறப்பாகும். வேதமுதல்வன் என்றதற்கு வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பது பொருந்தும்.
 
 (பாடம்) 1. 
வேத முதலிவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:38:59(இந்திய நேரம்)