தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

71-80

71-80

71
சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து
நின் வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
5
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?
பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைமகள் தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. 1

72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலர் ஆர் மலிர்நிறை வந்தென,
5
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே.
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2

73
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென,
கள் நறுங் குவளை நாறித்
தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே.
இதுவும் அது. 3

74
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே.
இதுவும் அது. 4

75
பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே மலர
தொல் நிலை மருதத்துப் பெருந் துறை,
நின்னோடு ஆடினள், தண் புனல் அதுவே.
பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது. 5

76
பைஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின்
தண் புனலாடி, தன் நலம் மேம்பட்டனள்
ஒண் தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
இதுவும் அது. 6

77
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்:
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி,
நின்னொடு தண் புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே.
முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7

78
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த,
சிறை அழி புதுப்புனல் ஆடுகம்;
எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே.
இதுவும் அது. 8

79
'புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள், இவள்?' எனப் பற்றிய மகிழ்ந!
யார் மகளாயினும் அறியாய்;
நீ யார் மகனை, எம் பற்றியோயே?
தன்னோடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றி

80
புலக்குவெம் அல்லேம்; பொய்யாது உரைமோ:
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகி,
தலைப் பெயல் செம் புனல் ஆடித்
தவ நனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.
தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:50:46(இந்திய நேரம்)