Primary tabs
பாடினோர் முதலியவர்களின் வரலாறு
5. ஓதலாந்தையார் : - இந்நூலின்
நான்காநூறாகிய பாலைத் திணையைப் பாடிய இவர்
கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். ஆதன் தந்தையென்பது ஆந்தையென்று மருவியதென்பது
பழைய உரையாசிரியர்களுடைய கொள்கை. பாலைத்திணை இயல்பை விளங்கப்பாடுதலில்
மிக்க
ஆற்றலுடையவர். குறுந்தொகையில் 3-ம், இந்நூலில் பாலையில் 100-ம் இவரியற்றிய
செய்யுட்கள்.
பாலைத் திணையில் பிரிதலும் பிரிதல்
நிமித்தமுமே பயின்று வருவனவாயினும், ‘தலைவி தலைவனை மணந்து அவனுடன் இனியளாய் இன்று
வரும்’ எனக்கேட்ட செவிலி அதனை
நற்றாய்க்குக் கூறும் செய்யுளை ஈற்றில் அமைத்து இத்திணைக்கு மங்கல முடிபு கொடுத்திருத்தல்
மிக அழகாயுள்ளது.
தாம் அன்பு வைத்துள்ளாருடைய அரிய பண்புகளை
நினைக்குந் தோறும், ஒருவர்க்குற்ற
வழிநடைத் துன்பம் முதலியன நீங்குமென்பதை இவர் 322, 325, 327 ஆங்கவிகள்
முதலியவற்றில் வெளியிடுகிறார்.
ஒரு காதலி தான்கருதியவனையே கணவனாகக்
கோடல் வேண்டுமென்று நினைப்பாள் ( 371 )
என்றும் ஒரு தலைவியை அவள் விரும்பும் தலைவனுக்கு மணஞ்செய்து கொடுக்க விருப்பமற்ற
தாயை, ‘அறனில் தாய்’ ( 385 ) என்றும், தீவினையை ‘அறனில் பால்’ ( 376 ) என்றும்,
அந்தணர்க்குரிய கொள்கையைக் கூறுமிடத்து ‘அறம்புரி பெருமறை நவின்ற நாவிற், றிறம்புரி
கொள்கை’ ( 387 ) என்றும், அறத்தைச் செய்வோர் அன்பைக் கருதுவது தகாது என்பதை,
‘அன்பில் அறனும்’ ( 394 ) என்றும் இவர் கூறுவதிலிருந்து அறத்தை இவர் பல படியாகப்
பாராட்டுகின்றனர் என்பது தெரிகிறது. இவர் செய்யுட்களில் சொல் நயம் பொருள் நயங்களை
அதிகமாகக் காணலாம் ; 380, 385, 391.