தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathupattu-rgt-முகவுரை

முகவுரை

ஐந்திணைகளில் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறை பெற்ற
நூறு நூறு பாடல்களைத் தனித்தனிப் பெற்றுள்ளமையினால்
'ஐங்குறுநூறு' இப் பெயர் பெற்றது. இதில் அமைந்த பாடல்கள்
அகவற்பாவின் கீழ் எல்லையாகிய மூன்று அடிச் சிறுமையையும் ஆறு
அடிப் பேரெல்லையும் கொண்டவை.

நூலுக்குப் புறம்பாகிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம்
பாடிய பெருந்தேவனார். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை,
என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப்
பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர்,
ஓதலாந்தையார், பேயனார், என்னும் ஐவராவர். 

ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக
உள்ளது. இவற்றுள் ஒவ்வொன்றும் 'பத்து' என்று குறிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பத்தும் தனித்தனியான கட்டுக்கோப்பு உடையது. இது
பொருளமைப்பினாலேயோ, இதனுள் அமைந்த பத்துப் பாடல்களிலும்
ஆட்சி பெறும் ஏதேனும் ஒரு சொல்லினாலேயோ,
பெயரிடப்பட்டிருக்கின்றது. 'களவன் பத்து' 'மஞ்ஞைப் பத்து',
'தெய்யோப்பத்து', முதலியன சொல்லாட்சியினால் பெற்ற பெயர்கள்.
'பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து', 'தோழி வற்புறுத்த பத்து'
முதலியவை பொருளமைப்பால் பெற்ற பெயர்கள். 'வேட்கைப் பத்து',
'அன்னாய்ப்பத்து' முதலியன சொல்லாட்சியும் பொருளமைதியும்
பொருந்தியவை.

இத் தொகையைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
என்றும்,தொகுப்பித்தார் யானைக்கட்சேய
மாந்தரஞ்சேரலிரும்பொறையார் என்றும், நூலிறுதியில் உள்ள
பழங் குறிப்பினால் தெரியவருகின்றன. 

இந்நூலின் செய்யுள் தொகை 500. 129, 130 ஆம் செய்யுட்கள்
பிரதிகளில் காணப்பெறாது மறைந்து போயின. 416, 490 ஆம்
செய்யுட்களின் இரண்டாம் அடிகளில் சீர்கள் குறைந்து காண்கின்றன.
ஒவ்வொரு பாடலின் கீழும் கொடுக்கப்பெற்றிருக்கும் கருத்துக்கள்
பழமையானவையே. சில பிரதிகளில் மட்டும் காணப்பெற்ற
மிகைப்பாடல்கள் நூலின் இறுதியில் பின் இணைப்பாகத்
தரப்பெற்றுள்ளன.

இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இது பதவுரையாகவோ
பொழிப்புரையாகவோ அமையாது, உள்ளுறை உவமம், இறைச்சிப்
பொருள், முதலியவற்றை நன்கு விளக்கி, சிற்சில இடங்களில் மட்டும்
திரிசொற்களின் பொருளையும் புலப்படுத்திச் செல்லுகின்றது. ஒருசில
இடங்களில் இலக்கணக் குறிப்பும், சொல் முடிபு பொருள் முடிபுகளும்
விளக்கப் பெற்றுள்ளன. இந்தப்பழைய உரை 469 ஆம் செய்யுள்
வரையில்தான் இப்பொழுது கிடைத்துள்ளது: இடையிடையே சில
பாடல்களுக்கும் இவ் உரை இல்லை. அருமையாக அமைந்த சிறந்த
இந்தப் பழைய உரை நூல் முழுமைக்கும் கிடைக்காமல் போனது ஒரு
பெருங் குறையே. இந்த உரையை இயற்றிய ஆசிரியரைப் பற்றி
யாதொன்றும் அறியக்கூடவில்லை. ஆயினும், இவரது உரைப்
போக்கிலிருந்து பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர்,
முதலிய உரையாசிரியர்களை ஒத்த பெருமை உடையவர் என்று
திண்ணமாகக் கூறலாம்.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:44:47(இந்திய நேரம்)