தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thani Padalkal - TVU- ரு.தனிப்பாடல்கள்


தனிப்பாடல்கள்

அடியிலுள்ள பாடல்கள் ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் பிரதிகள் பலவற்றிற்
காணப்படவில்லை ; தென்காசிச் சுப்பையா பிள்ளையவர்கள் வீட்டுப் பிரதியொன்றில்
மட்டும் இருந்தமையின், தனியே பதிப்பிக்கப்பெற்றன.

1. உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப்
பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை 1யரவம்
காதறு கவண தேய்க்கும்
தீதுறு கள்ளியங் காடிறந் தோரே.

குறிப்பு. உள்ளார்கொல்லோ-நினையாரோ; குறுந். 16 : 1, சிள்ளென : ஒலிக்குறிப்பு. காதற்ற
கவணை ஏய்க்கும்; ஏய்க்கும்-ஒக்கும் காடிறந்தோர் உள்ளார் கொல்லோ. (பி-ம்) 1 ‘யரவும்’ (1)

2. உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
அலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்
துகில்பொதி பவள மேய்க்கும்
அகில்படு கள்ளியங் காடிறந் தோரே.

குறிப்பு. ஈந்தின்-ஈந்தினது, சிலம்பிபொதி செங்காய்-சிலம்பி நூலால் மூடப்பட்ட சிவந்த காய்.
சிலம்பி நூலுக்குத் துகிலும் ஈந்தின் காய்க்குப் பவழமும் உவமை. கள்ளியங்காடு : குறுந். 16 :
5, காடிறந்தோர் உள்ளார் கொல்லோ.

(மேற்.) அடி, 1, ‘காடிறந்தோரேஎ’ எனப் பாடங்கொண்டு செய்யுளிடத்து ஈற்றில் நின்றிசைக்கும்
ஏகாரம் மூன்று மாத்திரை பெற்று வரும் என்பர் (தொல். இடை. 38, ந,). ஒரூஉ எதுகைத்
தொடை ; இது தாஅவண்ணம் ; தாஅவண்ணமாவது இடையிட்டு வந்த எதுகையையுடையது
(தொல். செய். 99, 215, பேர்,) அடி 1-2. தொல் செய் 87, பேர்.

மு. ஆசிரியப்பா உறுப்பாகி வந்த செய்யுள் (தொல். செய். 105, பேர். இஃது ஈரசைச்சீர் நின்று
ஈரசைச்சீரொடு ஒன்றிய சிறப்பிலாசிரிய நேரசைத்தளை (யா. வி. 19). இதன் முதலடியிலே
முழுதும் நேரொன்றாசிரியத்தளை கொள்ளுமாறு சீர்களெல்லாம் நேரொடு நேராக ஒன்றி நின்றன
(யா. கா. 11, உரை); இ. வி. 718. ( 2 )

3. உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
இலவமேறிய கலவமஞ்ஞை
எரிபுகு மகளி ரேய்க்கும்
அரில்படு கள்ளியங் காடிறந் தோரே.

குறிப்பு. ஏய்க்கும்-ஒக்கும். இலவமலருக்கு எரியும் மஞ்ஞைக்கு மகளிரும் உவமைகள். அரில்-சிறுதூறு. ( 3 )

4. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளைப்
புழுங்க னெல்லின் பொரிவீழ்த் 1தென்ன
2நுண்குழிப் புற்றின் 3மண்கா லீயல்
கோல்பிடி குருட ரேய்க்கும்
4மாலுறு கள்ளியங் காடிறந் தோரே.

குறிப்பு. பொரி வீழ்த்தென்ன-பொரியை வீழ்த்தாற்போல. கோலைப் பிடித்திருக்கும் குருடரை.
ஏய்க்கும்-ஒக்கும், மால்-மயக்கம்.(பி-ம்.) 1 ‘தன்ன’ 2 ‘நுட்காற்’ 3 ‘மட்கா’ 4 ‘மால்படு’(4)

5. எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை
வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன்
சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப
இளையண் மெல்லியண் மடந்தை
அரிய சேய 1பெருங்கான் யாறே.

குறிப்பு. நணித்து.-பக்கத்திலுள்ளதாக. செல்வன்-சூரியன். கதிரும் ஊழ்த்தனன்-கிரணங்களையும்
சுருக்கினன் ; சூரியன் மறைந்தனன் என்றபடி. சேந்தனை சென்மோ-இங்கே தங்கிச் செல்
வாயாக. மடந்தை இளையள். அரிய-கடத்தற்கு அருமையையுடையன. சேய-நெடுந்தூரத்தன.
ஊழ்த்தனன், இளையள், சேய, சேந்தனை சென்மோ.

(மேற்).அடி, 3. தெரிநிலை வினைமுற்று விரிந்து வினையெச்சமாயிற்று (இ. வி. 237, 250.)
இது பாலைக்கண் தலைவியை உடனழைத்துச் செல்லும் தலைவனை மாலைக்காலத்து
இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது. (இறை. 23, உரை). மு. உடன்போயவழி மாலைக்காலமும்
சேறற்கரிய வழியும் அஞ்சுவரக்கூறி அவற்றது தீங்கு காரணமாகப் போகின்றார்க்கு வரும்
ஏதத்தைத் தலைமகனுக்குக் கண்டோர் கூறுதல் ; இதனுள் கதிரும் ஊழ்த்தனன் எனவே
பொழுதும், பெருங்கலாறு எனவே ஆற்றருமையும் பற்றிக் குற்றங்காட்டியவாறு காண்க (தொல்.
அகத், 40, ந.). கண்டோர் காதலின் விலக்கல் (இ. வி. 36).

(பி-ம்.) 1 ‘பெருங்க லாறே’ ( 5 )

6. 1அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப
வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடிய னாயினு மாக
அவனே தொழியென் னுயிர்கா வலனே.

குறிப்பு. அடும்பமல் நெடுங்கொடி-ஒருவகைக் கொடி, உள் புதைந்து-உள்ளே மறைந்து. தோழி :
விளி.

(மேற்.) மு. இது வழுவின்று நிலைஇய இயற்படு பொருட்கண் கூறியது (தொல். களவு. 21,
இளம், ; 20, ந.).

(பி-ம்.) 1 ‘அடும்பம லங்கொடி’ ( 6 )


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 16:49:36(இந்திய நேரம்)