தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


4. சோழ னல்லுருத்திரன்.

இந்நூலின் நான்காம் பகுதியாகிய முல்லைக்கலி 17 பாடல்களையும் பாடிய ஆசிரியரதியற் பெயர் உருத்திரனென்பது. உருத்திரனெனப் பட்டார் தமிழ் நூல்களுள் இன்னும் சிலருளர். அவர் சேரன் செங்குட்டுவனொடு பொருத வீரனான உருத்திரனும் கம்பராற் புகழப்பெற்ற ஓரங்கனாட்டுப் பசிப்பிணிப் பசைகஞனாகிய உருத்திரனுமாவர். இவ்வாசிரியர் சோழர்குடியிற் றோன்றியவரும் தமிழ்ப் புலமை சான்றவருமாவர்.

உருத்திரனென்னும் பெயராலும் முல்லைத் திணையைப் பாடு மிடத்து உவமைமுகத்தால் இந்திரன் பிரமன் முருகன் பலராமன் முதலியவரை ஒவ்வோரிடத்திற் கூறியிருத்தல்போலாது அந்நிலத்துக்குத் தெய்வமாகிய திருமாலைக் (கண்ணனை) கூறியிருத்தல் போலவே பலஇடத்தும் சிலபெருமானைப் புகழ்ந்து எடுத்துக் கூறுதலாலும் இவர் சிவபெருமானருளால் தோன்றியவ ரென்றும் சிவ பெருமானிடத்துப் பத்திமையுள்ளவ ரென்றும் ஊகிக்கலாம்.

குறுந்தொகை 274-ஆவது செய்யுளின் பின் அதனை இயற்றிய ஆசிரியர் பெயரைக் குறிக்குமிடத்து உருத்திரன் என்ற பெயரொன்று காணப்படுகின்றது. அஃது இவரைக் குறிப்பதென்பர். ஆனாலும் உருத்திரனென்பது அழித்தற் கடவுட்கே பெரும்பாலும் வழக்காதல்பற்றி இவன் அத்தீய தொழிலினனல்லன் என்றற்கு நன்மையென்னும் அடைமொழியை முன்சார்த்தி நல்லுருத்திரனென்று வழங்கினர் போலும். புறம் 190-ஆவது செய்யுளின்பின் இஃது இன்னவர் பாட்டு என்னுமிடத்து, ‘சோழன் நல்லுருத்திரன் பாட்டு’ என்று காணப்படுதலால் இவர் சோழர்குடியிற் றோன்றியவரென்று தெரிகின்றது. ‘அருஞ்சோழ, னல்லுத் திரன்முல்லை’ என வருதலுங்காண்க. இவர் செய்யுளென்று தெரிந்தவை இந்தப் பத்தொன்பதுமே.

ருத்திரனென்பது, உருத்திரனென்று ஆதலன்றியும் ருதிரம் ரேகையென்பன முதன் மெய்யொழிந்து உதிரம் ஏகையென்றாதல் போல உத்திரன் என்றாகி, அடைமொழியொடு சேர்ந்து நல்லுத்திரன் எனவும் இவரது பெயர் வழங்கும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:08:25(இந்திய நேரம்)