Primary tabs
2. கபிலர்.
இந்நூலின் இரண்டாம் பகுதியாகிய குறிஞ்சிக் கலியின் 29 செய்யுட்களையும் யாத்தவர் மிகச் சிறந்த புலவராகிய கபிலர். இவர் பிறந்த ஊர் இன்னதென்பது பண்டை நூல்களால் தெரிய வில்லை. அது திருவாரூரென்று கபிலரகவலும் திருவாதவூரென்று திருவாலவாயுடையார். திருவிளையாடற் புராணமும் கூறும். அவ்வகவல் முற்றும் பொய்யுரை யென்பதும் இப்புராணம் அத்தகைத் தன்றென்பதும் ஆராய்ச்சியாளர் துணிபு.
இவர் பெயராகிய கபிலரென்பது பண்டைத் தமிழ் நூலில் உருத்திரமூர்த்திக்கு வழங்கும் பெயராயிருத்தலாலும் இவர் சிவ பெருமானையும் முருகனையும் பல இடத்தும் புகழ்ந்து கூறுதலானும் இவர் சைவப்பற் றுடையவரென்று கருதப்படுகிறார். ஆனாலும் பலராமன், கண்ணன், இவர்களையும் புகழ்ந்திருத்தலால் வீரசைவரல்லரென்றும் வைதிக சமயத்தவரென்றும் துணியலாம்.
இவர் அந்தணரென்பது புறநானூற்றுச் செய்யுட்களால் தெளியப்பட்ட செய்தி. இவர் அகத்திணையுள் குறிஞ்சித் திணையையும் புறத்திணையுள் பல துறைகளையும் பாடியிருக்கிறார்.
இவரது பாடலை, பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், பத்துட னெட்டெனப் பயில் கீழ்க் கணக்குமா, முத்திறநூலினும் வைத்துளர் பெரியோர்.
இவருடைய பாடல்களெல்லாம் சொற்பொருள்களால் தூயனவா யிருத்தலோடு பல பாடல்கள் உள்ளுறை முதலியவற்றாலும் சிறந்திருத்தலால் மிக இனியனவென்று மதிக்கப்பெற்றவை. இதனானே பலருரைகளில் ஆறாம் வேற்றுமைச் செய்யுட்கிழமைக்கு, ‘கபிலரது பாட்டு’ என்பது உதாரணமாகக் காட்டப்பெற் றிருக்கிறது.
பிறபுலவர் பலநாள் நினைத்தும் செய்தற்கரிய பொருட் செறிவினை யுடையனவாகும் செய்யுட்களை இவர் ஒரு நொடியிலே எண்ணா திசைக்க வல்லவரென்றும் கற்றலினும் நன்றாகிய கேள்வி மிக்கவ ரென்றும் புகழ்ந்து, நான்பகை வென்ற வெற்றியைப் பாட இப்போது அவரிலலையே யென்று ஓரரசன் வருந்தினானென்று அவன்