Primary tabs
கணபதி துணை.
இரண்டாஞ் சம்புடத்தின்
முகவுரை.
தளருந் துயர்தீர்ப்பான் சார்ந்து--வளருந்
தொருகோட்டுக் கற்பகத்தா ளுற்றேன் கலிக்கட்
டிருகோட்டும் வெப்பொழியச் செய்து.
இந்நூலையும் இப்பதிப்பையும் பற்றிய செய்திகள் பலவும், கடவுள் வாழ்த்தும் பாலைக்கலியும் குறிஞ்சிக்கலியும் அடங்கிய முதற்சம்புடத்தின் தலைப்பில் எழுதப்பெற்றுள்ளன.
இவ்விரண்டாஞ் சம்புடத்தில் மருதக்கலியும் முல்லைக்கலியும் அடங்கியுள்ளன. இதில் முதற்சம்புடத்திற்போலவே இப்பகுதிகளிலுள்ள செய்யுட்களோ செய்யுட்பகுதிகளோ மேற்கோளாகவந்துள்ள இடங்களும் ஒத்த பகுதிகளும் ஆங்காங்கு எண்கள் முதலியன இட்டுக்குறித்திருப்பதோடு, சொல்லாராய்ச்சிக்கும் விலங்கு பறவை மரஞ் செடி கொடிகளைப்பற்றிய ஆராய்ச்சிக்கும் உதவியாக உரிய விடங்களில், சில குறிப்புக்களும் குறிக்கப்பெற்றிருக்கின்றன.
முதற்சம்புடத்திலன்றி இச்சம்புடத்தில் பிற்கூறிய குறிப்புக்களைச் சேர்த்ததற்குக்காரணம், முதற்சம்புடத்தைப் பார்த்த தமிழபிமானிகளான அன்பர்களிற் சிலர், உரையிலுள்ள சொற்கள், பண்டை இலக்கியத்துள்ளன; இல்லன; இவை இன்னசொல்லின் சிதைவு என்ற செய்திகளையும் இயன்ற அளவு தெரிவித்தல் நன்றென்றும், வேறு சிலர், உயிர்களைப்பற்றிக் கூறுமிடத்து மிருகவிசேஷம் பிக்ஷிவிசேஷம் விருக்ஷ விசேஷமென்று சிறிதும் அறிய இயலாதபடி விட்டுவிடாமல் இப்பொருள் இன்னதென்று அறியும்படி அவற்றையும் இயன்ற அளவு விளக்கல் பேருபகாரமாமென்றும் விரும்பிக் கூறியனவாகும். ஆதலால் அவற்றையும் பற்றி இயன்ற அளவு குறித்திருக்கின்றேன்.