Primary tabs
V
இப்பதிப்புக்குத் தமிழ்மக்கள் எத்தகை ஆதரவு நல்குதல் வேண்டுமென்று சொல்லவும் வேண்டுமோ? தமிழ்ச்செல்வர்கள் தங்களாலியன்ற உதவி புரிந்து கற்றறிந்தார் போற்றுங் கலியைத் தமிழ்நாட்டிற் பரப்புவாராக. (3-4-25.)
-----
(பாரத மித்திரன்.)
கலித்தொகை: இந்நூல்கடைச்சங்கமேறிய பனுவல்களின் பகுப்பு ளொன்றாகிய எட்டுத்தொகையுள் ஆறாவதாக வுள்ளது.
இதனுள் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஐந்திணைகளினுடைய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்களும், அவற்றின் இயற்கையணிகளும் கற்றார்களிப்புறுமாறு விளக்கப்பட்டிருக்கின்றன. ‘கற்றறிந்தார் போற்றுங் கலி’ என்பதனாலும், இவ்வுண்மை அறியலாம்.
இது, படிப்போருக்கு இன்பச்சுவையுடன் அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர், வேளாளர்களும் பிறருமாகிய ஆடவரும் மகளிரும் இளமையிலும் முதுமையிலும் அறிந்தொழுகவேண்டிய பலப்பலநீதிகளைக் கற்பித்து நன்னெறி காட்டிப் பயன்றுய்க்கச் செய்வது.
இச்செந்நெறி நூலுக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை யெழுதியிருக்கின்றார். உரையோடு கூடிய இந்நூலை சென்னபட்டினம் அரசாங்கக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ இ, வை, அனந்தராமையர் அவர்கள் பன்னெடுங்காலமாக ஆராய்ச்சிசெய்து அச்சிட்டு வருகின்றார்கள்.
கடவுள்வாழ்த்து, பாலை, குறிஞ்சி ஆகிய மூன்று பகுதியும் தொகுத்த முதற் புத்தகம் வெளிவந்து விட்டது. 145 நூல்களிலிருந்து மேற்கோள்களும் கதைகளும் எடுத்துக் காட்டி ஐயமகற்றி அச்சிட்டிருக்கின்றார்கள். இதனை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஐயரவர்களுடைய பேருழைப்பு விளங்காமற்போகாது...........(பெதர் வொய்ட்டுக்காகிதத்தில் இச்சம்புடத்தின் விலை. ரூ. 5.).....................தமிழ் மக்கள் பலரும் இச்சிறுதொகைப் பொருளைப் பொருட்படுத்தாது அனுப்பி ஒவ்வொரு காப்பி வாங்கிக்கொண்டால் ஐயரவர்கள் இதுபோன்ற பல நூல்களை அச்சிட்டு உதவிபுரிவார்களென்பது ஒருதலை. இதனாற் புகழும் புண்ணியமும் இரு பகுதியினர்களுக்கும் உண்டென்பதைத் தமிழறிஞர்கள் செவ்வனே அறியவேண்டும். (6-4-25.)
-----