தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அந்தி இளங்கீரனார்

அந்தி இளங்கீரனார்
71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
5
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
10
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
15
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:38:25(இந்திய நேரம்)