தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
58
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
5
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
10
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
15
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
20
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
25
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
30
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

60
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
5
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து,
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
10
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்,
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?
திணை அது; துறை குடை மங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.
திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:06:13(இந்திய நேரம்)