தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வல்வில் ஓரி

வல்வில் ஓரி
152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!
திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

153
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை,
அடு போர் ஆனா, ஆதன் ஓரி
5
மாரி வண் கொடை காணிய, நன்றும்
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி,
10
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக்
கூடு கொள் இன் இயம் கறங்க,
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே?
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

204
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;
5
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
10
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை,
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.
திணையும் துறையும் அவை.
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:26:56(இந்திய நேரம்)