தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மழபுல வஞ்சி

மழபுல வஞ்சி
7
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
5
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
10
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே.
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

31
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
5
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
10
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
15
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:31:55(இந்திய நேரம்)