தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மறக்கள வேள்வி

மறக்கள வேள்வி
372
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி,
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை,
5
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த,
10
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப்
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:32:37(இந்திய நேரம்)