தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

காஞ்சி

காஞ்சி
18
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
5
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
10
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
15
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
20
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
25
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
30
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

344
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை,
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ
5
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து,
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி..................
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே.
திணையும் துறையும் அவை.
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.

351
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும்,
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும்,
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல் கண்டன்ன கண் அகன் தானை
5
வென்று எறி முரசின் வேந்தர், என்றும்,
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை
10
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின்,
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே?
திணையும் துறையும் அவை.
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:06:14(இந்திய நேரம்)