தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முகப்பு



 
முன்னுரை

vii


இச் சூழ்நிலைக்கிடையில் யசோதர காவிய ஏடொன்று கிடைக்கப் பெற்று
அதற்கு உரை கண்டு கழகத்தின் வாயிலாக வெளியிட்டேன். அது முடியும்
நிலையில் காலஞ்சென்ற, பண்டித நாவலர். திரு. ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள்
மணிமேகலையில் வரும் சமய பகுதிக்கும் தருக்கப்
பகுதிக்கும் உரை காணுமாறு பணித்தார்கள். அப்போது யான் திருப்பதி,
ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஓரியண்டல் கல்லூரியில் தமிழாசிரியனாக இருந்தது
அவ் வுரைப்பணிக்குச் சிறந்த ஆதரவாயிற்று; அங்கேயிருந்த வடநூற்
பேராசிரியர்களாலும் நூல் நிலையத்து நூல்களாலும் நான் பெற்ற நலங்கள்
பலவாகும். ஆயினும், இடையீடாகத் தோன்றிய இப் பணிகளால் பதிற்றுப்பத்து
உரைப்பணியும் புறநானூற்று உரைப்பணியும் காலத் தாழ்வு பெற்றன.

பின்னர், யான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராயச்சிப்
பகுதித் தமிழ் விரிவுரையாளனாய் வந்தேனாக, அந்நாளில் தமிழ்த்துறைத்
தலைவராயிருந்த திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, M.A., M.L., அவர்கள்
ஞானாமிர்தத்தைச் செம்மைசெய்து வெளியிடுமாறு பணித்தார்கள். அது செய்து
வருங்கால் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறை
விரிவுரையாளரான திரு T.V. சதாசிவப் பண்டாரத்தாரவர்களுடைய இனிய
நட்பைப் பெற்றுக் கல்வெட்டுகளின் வரலாற்று மாண்பும் இன்றியமையாமையும்
உணர்ந்து அவற்றைப் படித்தறிதற்கு வேண்டும் பயிற்சியும் அவர் துணையால்
பெறும் பேறுடையனானேன். அப் பயிற்சியால் சங்ககாலச் சான்றோர் பலருடைய
ஊர்களையும், பெயர் மரபுகளையும், நாட்டுவரலாறுகளையும் அறிந்து கொள்வது
இனிது இயலுவதாயிற்று; சங்க நூற் புலவர் பலரைப்பற்றிய அரிய குறிப்புகளைக்
கல்வெட்டுகளைக் கொண்டும் நேரில் சில இடங்கட்குச் சென்று கண்டும்
அறிந்து கொண்டேன்.

இச்செயல்கட்கிடையே யசோதரகாவியத்தின் சார்பாக என்னிடம்
வந்த வீடூர் திரு. பூரணசந்திரநயினார் வாயிலாகச் சூளாமணியேடுகள் நான்கு
வரப்பெற்று, அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர்
திரு. T.P. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்பால் சேர்த்தேன். அவர்கள்
திரு. வெள்ளைவாரணம் அவர்களையும் என்னையும் ஒருங்குவைத்து
அதனை ஆராய்ச்சி செய்தார்கள்.

இவ்வாறு இடையிடையே தோன்றிய தமிழ்ப்பணிகளால் மெல்ல நடந்து
போந்த சங்க நூல் உரைப்பணியும் முற்றுப்பெற்றது. பெறவும், சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார்
புறநானூற்றை வெளியிடத் தொடங்கினர்.
கைக்கடக்கமாக அமைதல் வேண்டி 1-200 பாட்டுக்களை ஒரு பகுதியாகவும்,
எஞ்சியவற்றை ஒரு பகுதியாகவும் வெளியிடக் கருதி முற்பகுதியை 1947 இல்
வெளியிட்டனர். பின்னர்ப் பதிற்றுப் பத்து உரையினைத் தொடங்கி 1950 இல்
முடித்து வெளியிட்டு இப்போது புறநானூற்று இரண்டாம் பகுதியை
வெளியிடுகின்றனர்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:35:26(இந்திய நேரம்)