தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai-தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை

திருக்குறள் தமிழ் மரபுரை

முன்னுரை

1. தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை

தமிழன் பிறந்தகம் குமரிநாடென்பதும், தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதென்பதும், இன்னும் சரிவர அறியப்படாமையால், தமிழரின் முன்னோர் கிரேக்க நாட்டுப் பக்கத்தினின்று வந்தவரென்றும், ஆரிய நாகரிகத்தைப் பின்பற்றியவரென்றும், தமிழ் பன்மொழிக்கலவையென்றும், வட இந்தியாவிலுள்ளவரெல்லாரும் ஆரியரென்றும், வட இந்தியாவிலும் சமற்கிருதத்திலுமுள்ளவையெல்லாம் ஆரியர் கண்டவையென்றும், உண்மைக்கு நேர்மாறாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது.

உலகில் மிகப் பழைமையானது குமரிக்கண்டத் தமிழ் நாடென்பதையும், முதன்முதல் தோன்றியது தமிழநாகரிக மென்பதையும், தமிழ் உலகமுதல் உயர்தனிச் செம்மொழியென்பதையும், அறிந்தா லொழிய, தமிழ் மொழி யிலக்கிய நாகரிகப் பண்பாட்டின் உண்மையான இயல்பையும் உயர்வையும் உணரமுடியாது.

2. தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள் :

உலகில் இன்பத்தை நுகரவேண்டுமென்பதே பொதுவாக எல்லா மாந்தர்க்கும் இயல்பான நோக்கம். அவ்வின்பத்திற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் சிறந்தபின்,
"தனக்கு மிஞ்சித்தானம்", "பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே". என்னும் நெறிமுறைப்படி, தான் நுகர்ந்ததுபோக எஞ்சியதை உழைக்கவியலாதவரும் துறவியருமான பிறர்க்கு அளிப்பதும் இயல்பே. இதுவே அறமெனப்படுவது. இங்ஙனம் இன்பம், பொருள், அறம், என்னும் முக்குறிக்கோள் இயற்கையாகத் தோன்றின. அறத்தைச் சிறப்பாக நோக்காது இன்பத்தையே நோக்கும் இன்பநூல்களும் இலக்கண நூல்களும் இம்முப்பொருளையும் இம்முறையிலேயே
குறிக்கும். 

"இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை" (கள. 1) 

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:04:10(இந்திய நேரம்)