தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kaar Narpathu


முகவுரை

அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது. எனவே, இது காலம்பற்றிய தொகை நூலாகும்.

காலம், இடம், பொருள், கருதி, நாற்பான்
சால உரைத்தல் நானாற்பதுவே

என இலக்கண விளக்கப் பாட்டியலார் காலம் பற்றியநாற்பது பாடலால் ஆகிய இந் நூலை முதற்கண் சுட்டியுள்ளார். இதனால் நானாற்பதில் இந்நூல் முந்தித்தோன்றியது என்று எண்ணவும் இடம் உண்டு.

கார்காலம் முல்லைத் திணைக்கு உரியபெரும் பொழுது. இந் நூல் இப் பெரும் பொழுதைக் கூறும் முகத்தால், அத்திணையின் உரிப்பொருளாகிய இருத்தல் என்பதை நிலைக்களமாகக் கொண்டுள்ளது. தலைவன் பொருள் முதலியன ஏதுவாகத் தலைவியிடம், 'கார் காலத்தில்மீண்டு வருவேன்' என்று கூறிப் பிரிந்து சென்று, உரியகாலத்தில் அவன் வாராமை குறித்துத் தலைவி பிரிவு ஆற்றாது உரைத்தலும், தோழி அவளை ஆற்றுவித்தலும், சென்ற தலைமகன் கார் கண்டு தன் நெஞ்சிற்கும் பாகனுக்கும் கூறுவதும் ஆகிய செய்திகளே இந் நூலின்கண் அமைந்தபொருள். தோழி, தலைமகள், தலைமகன், பாங்கன் ஆகியோரை உறுப்பினராக அமைத்து, ஒரு நாடகம் போல அவர்களை இந் நூலில் பேச வைத்துள்ளார் ஆசிரியர். முல்லைநிலக் கருப்பொருள்களாகிய தோன்றி, பிடா, கருவிளம், முதலியவற்றையும் ஆங்காங்கே அழகுறவருணித்துள்ளார்.

இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவரது இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர்மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத்தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார்; பலராமனைப்பற்றியும் நூலுள் கூறியுள்ளார் (19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும்.

இவர் நூலுள் வேள்வித் தீயையும்(7), கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும் (26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டைவழக்கமாகும்.

குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்,
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர, வருகதில் அம்ம!

என்பது அகநானூறு (141 : 7-11).'கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு' என்று களவழி நாற்பதும் (17), 'குன்றில், கார்த்திகை விளக்கிட்டன்ன கடி கமழ் குவளைப் பைந்தார்' என்று சீவக சிந்தாமணியிலும் (256) இவ் விளக்கீடு குறிக்கப்பெற்றுள்ளது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:42:12(இந்திய நேரம்)