Primary tabs
முகவுரை
பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள், ஐந்திணை நூற்கள் நான்கில், ஐந்திணை யெழுபது ஒன்றாகும். இஃது அகப்பொருட்டுறைகளைப் பல்லாற்றான் விளக்குமுறையில் முதன்மை பெற்ற திணைமாலை நூற்றைம்பது என்ற நூற்கு அடுத்தபடியில் வைத்து எண்ணத்தகுந்த ஏற்றத்தினைக் கொண்டுளது. இதன்கண்ணும் தொல்காப்பியர் கண்ட பல அரியதுறைகள் அழகுற்று விளங்குகின்றன. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற திணைமுறை வைப்பு இங்குக் காணப்படுகின்றது. ஒவ்வொரு திணையின்கண்ணும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைக்கும் எழுபது பாக்களை இந்நூல் கொண்டிருந்தமை கருதி ஐந்திணை யெழுபது என்ற காரணக்குறி இதற்கு வழங்கலாயிற்று. ஆயினும், பின்னர் நேர்ந்த ஏட்டுப் பிரதிகளின் சிதைவான் முல்லைக்கண் இருசெய்யுட்களும், நெய்தற்கண் இருசெய்யுட்களும் மறைய மிகுந்த அறுபத்தாறு செய்யுட்களும் கடவுள் வாழ்த்துச் செய்யுளுமே வெளிவரலாயின. அவற்றுள் இருபத்தேழு செய்யுட்கள் நேரிசை வெண்பாக்களாகவும், நாற்பது செய்யுட்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் இயலுகின்றன. கடவுள் வாழ்த்தாகக் காணப்படும் வெண்பா, சொற்போக்காலும் பொருட்போக்காலும் பிற்காலத்தே புகுந்த தொன்றெனப் புலப்படுகின்றது.
திணைமாலை நூற்றைம்பதின் தெளிவாகிய
இந்நூல் மக்களின் இன்பத்திற் குயிர்நிலையாகிய
அன்பினை எழிலும் இனிமையுமுற எடுத்தியம்பிச் செல்லுஞ்
சிறப்பினைத் தமிழ்மகனாயுள்ள ஒவ்வொருவனும்
படித்தின்புறுவது அவனுக்கேற்பட்ட பலகடமைகளிலொன்றாம்.
இன்பத்தின் தொடக்கமாகிய புணர்ச்சியினையும்
அதற்குரிய நிமித்தங்களையும் குறிஞ்சி எனக்கூறி,
அப்புணர்ச்சியாற் பெற்ற அன்பினை நெகிழவிடாது
அகத்திருத்தி அமைதலாகிய முல்லையினை அடுத்துரைத்து,
அவ்வன்பின் நிலைபேற்றினைக் கண்டறிதற்குரிய