Primary tabs
ஐந்திணை ஐம்பதைப் போன்று ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது இந் நூல். அந் நூலோடு வேறுபாடு தெரியத் திணைமொழி ஐம்பது என்று பெயர் குறித்தனர் போலும்! இரண்டும் ஒரே வகையான அமைப்பு உடைமையினாலே, இவற்றுள் ஏதேனும் ஒன்று ஒன்றற்கு வழிகாட்டியாய் இருந்திருக்கலாம். எது எதற்கு முன் மாதிரியாய் அமைந்தது என்பது உறுதியாகச் சொல்லக்கூடவில்லை.
இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் அடைவில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இம்முறை அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாகும்.
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல்,
இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத்
திணைக்குரிப் பொருளே
என ஆசிரியர் தொல்காப்பியர் (தொல். பொருள்.14)உரிப் பொருளை வகுத்துள்ள முறையை இது பெரிதும் பின்பற்றியுள்ளது. தொல்காப்பியர் இரங்கல், ஊடல், என்று கூற, இந் நூல் ஊடல், இரங்கல், என்று கொள்கிறது. இது ஒன்று தவிர, மற்றைய திணைகளின் அமைப்பு பொருளின் போக்கிற்கு ஒத்த முறைவைப்பு ஆகும்.
இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக்கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று கருதலாம். புறநானூற்றில் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைப் பாடிய சாத்தந்தையார் (புறம்.80-82, 287) என்னும் புலவரே கண்ணன் சேந்தனாரின் தந்தையார் என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் அந்நூலின் பாடினோர் வரலாற்றில் குறித்துள்ளார். இங்ஙனம் கொள்ளுதற்குப் பெயர் ஒற்றுமை தவிர வேறு ஒன்றும் இல்லை. இது கொண்டு இருவரும் ஒருவரே என்று துணிதல் இயலாது. கண்ணஞ் சேந்தனார் சங்கச்சான்றோர்க்குப் பின் வாழ்ந்த பிற்சான்றோர் ஆதலின், புறநானுற்றில் காணும் சாத்தந்தையார் இவர் தந்தையார் ஆகார். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலின், சேந்தனாரும் கூத்தனாரும் ஒருகால் உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு.
இந்நூலில் உள்ள பாடல்கள் 50. இவை ஏனைய திணை நூல்களைப் போலவே பொருள் வளம் மிக்கவை.
யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இரவரின்,
ஊர்
அறி கௌவை தரும்