தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kadavul Vaalthu - Urai-உரை

கடவுள் வாழ்த்து

1. முன்றான் பெருமைக்க ணின்றான்முடி
    வெய்து காறு
  நன்றே நினைந்தான் குணமேமொழித்
    தான்ற னக்கென்
  றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறு
    திக்கு ழந்தான்
  அன்றே யிறைவ னவன்றாள்சர
    ணாங்க ளன்றே.

(இதன் பொருள்) முன் தான் பெருமைக்கண் நின்றான் - உலகின்கண் பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபெற்று நெறியின் கண் நிற்றற்கு முன்பே தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி ; முடிவு எய்துகாறும் - தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை எய்துமளவும் : நன்றே நினைந்தான் - பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும் நெறியினையே ஆராய்ந்துணாந்தான் ; அன்றே அந்நாளே - குணமே மொழிந்தான் - அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே மக்கட்குச் செவியறிவுறுத்தினான் : தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் - தான் தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய் ; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் - பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன்; அவன் இறைவன் - அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக் கடவுள் ஆவன் : நாங்கள் சரண் - ஆதலால் அவ்விறைவன் திருவடிகளுக்கே அடியேங்கள் அடைக்கலமாகி வணங்குவேம் என்பதாம்.

(விளக்கம்)உலகின்கண் முதன்முதலாக மெய்க்காட்சி பெற்று அக்காட்சிவழி நின்றொழுகியவன் எங்கள் புத்தபெருமானே ! என்பாள் முன்றான் பெருமைக்கண் நின்றான் என்றாள். பெருமை, ஈண்டுத் துறவொழுக்கம். என்னை?

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
 வேண்டும் பனுவற் றுணிவு”           --குறள், 21

என்பவாகலான் நிற்றலாவது - அவ்வொழுக்கத்திற் பிறழாது ஒழுகுதல்
முடிவு என்றது. பரிதிருவாணத்தை (வீடுபேற்றினை) - நன்று நன்மை
தரும் அறம் குணம் - ஈண்டு - நன்மைமேற்று, தனக்கு என்று - தான்
இன்புறுதற் பொருட்டு. ஒன்றானும் - யாதொரு பொருளையும்,

“இயல்பாகு தோன்பிற்கொன் றின்மை யுடைமை
 மயலாகு மற்றும் பெயர்த்து”         --குறள், 344

எனவும்,“விடல்வேண்டும் வேண்டியவெல்லாம் ஒருங்க”எனவும், “பிறப்பறுக்குனுற்றார்க் குடம்பு மிகை” எனவும்,“தலைப்பட்டார் தீரத் துறந்தார்” எனவும், ஓதுபவாகலான் ‘தனக்கென்று ஒன்றானும் உள்ளான்’ எனல் வேண்டிற்று அன்று ஏ: அசைகள்.

இனி, துறந்தோர் சிலர் காடுபற்றியும் கனவரை பற்றியும் மலை முழைஞ்சு புக்கிருந்தும் தனித் துறைதலும் ஒருவகையாற் றன்னலமே கருதிப் பிறர் நலம் பேணாப் பீழையுடத்து ; எம்மிறையனோ தான் மெய்யுணர்ந்து நன்றின்கண் நிலைபெற்றுழியும் அவ்வாறு தனித்திராமல் மன்னுயிரின் துன்பமெல்லாம் போக்குதல் வேண்டும் என்னும் பேரருள் காரணமாகப் பெரிதும் முயல்வானாயினன் என்பாள் பிறர்க்கு உறுதிக்குழந்தான் என்றாள். அவன் என்றது அத்தகைய சான்றோனாகிய எங்கள் புத்தபெருமான் என்பதுபட நின்றது. அவன் இறைவன், அவன் தாள் சரண் என அவன் என்பதனை முன்னுங் கூட்டுக. சரண் அடைக்கலம். அடைக்கலம் புகுதலாவது அவன் கூறிய அறநெறியிலே உறுதியாக நின்றொழுகுதல், இனி இக் குண்டலகேசிச் செய்யுளை வழிமொழிந்து வருகின்ற நீலகேசிச் செய்யுளும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அது வருமாறு.

“ஆதிதான் பெரியனா யறக்கெடு மளவெல்லா
 முதியமே யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான்
 யாதனையுந் தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான்
 போதியா னெம்மிறைவன் பொருந்தினா ருயக்கொள்வான்.                              --
நீலகேசி, குண்டல, 27

என வரும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 10:27:58(இந்திய நேரம்)