தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆராய்ச்சி உரை


ஆராய்ச்சி உரை

"அரிச்சந்திர புராணம்" என்னும் இலக்கிய நூல், நெல்லூர் 'ஆசுகவி' எனப் பட்டம் பெற்ற வீரகவிராசராற் பாடப்பட்டதென முன்னரே அறிந்தோம். இவர் கடவுள் வாழ்த்துக் கவிகள் பாடியிருப்பதும், அவற்றுள் முதன்மையாகப் பிள்ளையார் வணக்கம் இருப்பதும், அடுத்துச் சிவபெருமான், உமை, பிள்ளையார், முருகன், காளி, கலைமகள் வணக்கங்கூறும் கவிகள் நிறுத்தியிருப்பதும் ஆய்ந்தால் சைவசமயத்திற் சிறந்த பெரியார் எனக் கூறுதற்குச் சிறிதும் ஐயமின்று. அவை யடக்கத்தில் "புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந்தொன்றிற் சீர்கொள்வார்" எனவும், "சேரப் புன்சொல் யார்கொள்வார்" எனவும் கூறியிருப்பது தலையான பணிவைத் தக்கோர்க்கு எடுத்துக்காட்டுகிறது. தாம் பாடிய கவிகளிற் செஞ்சொல்லும் புன்சொல்லுங் கலந்ததும் இல்லை எனவும், கோத்திருப்பன யாவும் புன்சொல்லே எனவும் இழிவுபடுத்தியிருப்பது "பணியுமாம் என்றும் பெருமை" என்ற திருக்குறட்கு எடுத்துக்காட்டாக இலங்குகின்றது.

நாட்டுச் சிறப்பின் முதற்கவியில் 'திருப்பாற்கடலில் அமுதம் திரண்டு வந்ததுபோல வெண்மேகம் எழுந்தது' எனவும், 'காளகூடம் என்ற நஞ்சு அடுத்துப் பரவியெழுந்தது போலக் கருமேகம் பரந்தது எனவும் எல்லார்க்குந் தோன்றும் உவமை கூறியிருப்பது இனிமையையும் எளிமையையும் காட்டுகின்றது. 11 ஆவது கவி முதல் 21 ஆவது கவி வரை மடக்கணி வாய்ந்த கவிகள் பாடிப் பொருள் விளங்குமாறு சொற்கள் அமைத்திருப்பது புலமைத் திறத்தைக் காண்பார்க்குப் பொருத்தமானதே. மடக்கணி யமைந்த கவிகளில் ஒன்று காட்டி அதன் பொருளமைதியையுங் காட்டுவாம் :

 
"இறவங் கோங்க மிருப்பையின் பைந்துணர்
இறவங் கோங்க வெரிமின் மினியெனப்
புறவ மேய்ந்த சுரம்விட்டுப் போய்ச்செழும்
புறவ மேய்ந்தது பூம்புன லாறரோ."
'இறவங் கோங்க' என்று முதலடி வந்து, அடுத்த அடியும் அவ்வாறே வந்தது மடக்காம். 'புறவ மேய்ந்த' என்பதும் அவ்வாறே வந்த மடக்காம். 'பாலைவனத்தினின்று வெள்ளம் மருதநிலத்திற்குப் போய்ச் சேர்ந்தது' என்ற பொருள் அமைந்துள்ளது. 'இற அம் கோங்கம்' என முதலடியைப் பிரித்து, 'இறவு அங்கு ஓங்க' என இரண்டாம் அடியைப் பிரித்துப் பொருள் கூறல்

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:29:34(இந்திய நேரம்)