Primary tabs
முன்பும் ஆகிய இடைப்பட்ட காலம்; ‘தீர்த்த சந்தானகாலம்’ என்பர். (ஸ்ரீபுரா. காண்க.) அஃகுதல்-சுருங்குதல். யசோதரன், இக்காப்பியத் தலைவன். (2)
அவையடக்கம்
(இ-ள்.) விளக்கினை - விளக்கை, உள்விரிந்த - அதனூடேபரவியுள்ள, புகைக்கொடி - புகை யொழுங்கு, உண்டு என - உளதென்று, எள்ளுகின்றனர் இல்லை-இகழ் கின்றவர் இலர்; (அதுபோல), உள்ளுகின்ற பொருள்திறம்-சிந்திக்கத்தக்க இந்நூலின் சிறந்த பொருளின் திறத்தை, ஒர்பவர் - உணர்பவர், எம் உரை-(இழிந்த குற்றமுள்ளதாகிய) என்னுடைய உரையையும், கொள்வர் - ஏற்றுக்கொள்வார்கள்; (ஆதலின்), கூறுதற்பாலதே - கூறுந்தகுதியுடையதே யாகும்.
திருவற நெறியை விளக்கொளிபோல ஒளி பெறச்செய்யும் இந்நூற்பொருளை நோக்கும் சான்றோர் என் சொல்லின்கண் உளவாகும் புகைபோன்ற குற்றத்தைக்கருதி இகழாமல் ஏற்பர்; ஆதலின், யான் கூறுதற் பாலதே யென்றா ரென்க.
உபமானத்தில் புகைக்கொடியைக் கூறியதற் கேற்ப, உபமேயத்தில் குற்றம் என்பது வருவிக்கப் பட்டது. குற்றம் ஈண்டுச் சொற்குற்றம் முதலியன. “சொற்பா லுமிழ்ந்தமறுவும் மதியாற்கழூஉதவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமைமிக்கார்” (சீவக,4.) என்று திருத்தக்கதேவர் கூறியது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. எள்ளுகின்றனர்: வினையாலணையும் பெயர். திறம்-தத்துவம், தன்மை யெனினுமாம். பொருள் திறம், யசோ. 4, 3-0 முதலியவற்றுட் காண்க. விளக்கினை, ’இன்’- சாரியை. (3)