Primary tabs
(இ-ள்.) மனம் விரி அல்குல் - தன் ஆசை போலப்பரந்த அல்குலையுடைய அமிர்தமதியின், மாய மனத்ததை - வஞ்சமான மனத்திலுள்ள காதலை, வகுத்த -(தெரிவித்தற்காகயான்) வகுத்துக் கூறிய, மாயக் கனவுரை -பொய்க்கனவின் கூற்று, பிறிது - வேறானது, தேவி - அன்னையின், கட்டுரை - சொல், பிறிது ஒன்றாயிற்று - வேறொன்றாயிற்று, எனை - என்ன ஆச்சர்யம்! என்பால் வினை உதயம் செய்ய - என்னைப் பற்றியுள்ள தீவினைகள் பலனைக் கொடுக்கத் தொடங்கினதனால், இடர் பல விளைந்த - துன்பங்கள்பல உண்டாயின; (ஆதலின்), வினைகளின் விளைவை - வினைகளின் பயனை, விலக்குநர் யாவர் - தடுத்து நீக்குபவர் யாவருளர்? என்று - என்று நினைந்து, நின்றான் - (தாய் கூறியசொற்படி) நின்றான். (எ-று.)
மன்னன், தன் ஊழ்வலியை நினைந்து தாயின் சொல்லைமேற்கொள்ளாலானா னென்க.
அமிர்தமதியின் எண்ணத்தைக் குறிப்பாலுணர்த்த யசோதரன் கூறிய கனவு வேறு, அதற்குச் சாந்தியாகச் சந்திரமதி வகுத்தது வேறு. மனைவியின் தீய செயலை, மானத்ததால் வெளிப்படக் கூறாது குறிப்பால் கனவுமேல் வைத்துக் கூறினமையின், ‘மனம் விரி அல்குல் மாய மனத்ததை வகுத்த மாயக் கனவுரை பிறிது‘ என்றான். தேவிஎன்றது, தாயை. விளைவு, பயன். பலனைக் கொடுக்க உதயமாகியுள்ள வினைகள், தவமியற்றும் தூய செயலுடைய முனிவர்க்கல்லது ஏனையோர்க்குத் தத்தம்பலனை அளித்தே தீருமாதலால், ‘வினைகளின் விளைவை யாவர் விலக்குநர்‘ என்றான். ‘வெல்வதற் கரிதால் வினையின் பயன்‘ என்பர் (164) முன்னும். மனம் - மனத்திலுண்டாகும் ஆசைக்கு ஆகுபெயர். ‘என்னை‘ என்பது, ‘ஏனை’ என்றாயிற்று. ‘விளைந்த‘ அன் சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று. (65)