Primary tabs
ஆளுவது, சிராத்த புண்ணியப் பலத்தால். கறித்தல் - கடித்தல். அவயவம் - உடலுறுப்பு. சுவர்க்கம் சென்றோர் அதனைவிட்டுப் பிரிவதற்கு விரும்புதல் அரிது ஆதலின், ‘இறப்பரும் துறக்கம்‘ என்றார். இனி, வானவர்க்கு இறப்புண்டேயன்றி வானுலகத்திற்கு அழிவின்மையின் அங்ஙனம் கூறிற்றுமாம். தீவைனையாளர் - தீ வளர்த்துச் செய்யுந்தொழிலர் எனவுமாம். (25)
(இ-ள்.) நின்ற கண்டத்து நீள் உயிர் போமது - எஞ்சி நின்ற துண்டில் நெடிதிருந்த உயிர் போவாதாகிய அந்த மீன், சென்ற தன் பிறப்பு - யசோதரனாயிருந்த தன்பிறப்பின் வரலாற்றினை, ஓர்ந்த தெளிந்தது - (பழம் பிறப்புணர்வால்) உணர்ந்து தெளிவுற்றது; (அதனால் அம்மீன்) தின்று தின்று துறக்கத்து இருத்துதல் - என் அவயவத்தை தின்று என்னைத் தேவருலகத்து நிலைபெறுத்துவ தாகக்கூறி வாழ்த்துதல், நன்று நன்று என - மிக நன்று என்று, நைந்து - வருந்தி, இறந்திட்டது - உயிர்விட்டது.
பவஸ்ம்ருதி என்னும் அவதிஜ்ஞானத்தால் தன் பழம் பிறப்பை யுணர்ந்த மீன், ‘இப்பொழுதுள்ள என் உடலையே தின்று என்னைத் தேவருலகில் என்றும் இருப்பதாகக் கூறி வாழ்த்துதல் மிக நன்றாயிருக்கிறது‘ என்று கூறி வருந்தி இறந்த தென்க.
முதலில் மீனின் ஒரு பகுதியை அறுத்து ஜீவச் சிராத்தம் செய்தனராதலின் ‘நின்ற கண்டத்து நீள் உயிர்‘ என்றார். உடலெங்கும் உயிர் பரவியுள்ளதனால், ‘நீள் உயிர்‘ எனப்பட்டது என்னலாம். நன்றுநன்று என்னும் அடுக்கு, இகழ்ச்சிக்குறிப்பு, போயது என்றும் பாடம். (26)