Primary tabs
அரசி, ஐந்தாம் நரகில் பிறந்து உழன்றனளென்க.
ஐந்தாம் நரகத்தில் ஐந்து புரைகள் உள்ளன, ‘ஒன்று மூன்றைந்து மேழு மொன்பதும் பத்தோ டொன்று, நின்ற மூன்றோடு பத்து நிரையத்துப் புரைகள்‘ (மேரு. 937)என்பதை அறிக. அவ்வைந்து புரைகளிலும் மேலே மூன்று புரைகள் உஷ்ணவாசங்களும் (வெப்பமும்), கீழே இரண்டு புரைகள் சீதா வாசங்களும் (தட்பமும்) ஆதலின், ‘வெப்பமொடு தட்பம்‘ என்றார். அந் நரகம், பெரிய மலையனைய இருப்புவட்டையும் உருகச் செய்யும் உஷ்ணமும் சீதமும் பொருந்திய இடத்த தாகும். இதனை, ‘மேருநேரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தினுள்ளே, நீரெனவுருக்குஞ் சீத வெப்பங்கணின்ற கீழ்மேல்... ஐந்தாவ தன்னில்‘ என்ற (மேரு. 945) கவியானும் அதன் உரையானும் அறியலாகும். மிக்க பரிவாரங்களையுடைய அரசி இப்போது நரகத்தில் துணையின்றித் தனித்திருத்தலின், ‘ஆரும்இலள்‘ என்றார். அறத்தின் துணை பெறாதாரே அந்நரகங்களில் பிறப்பராதலின், ‘அறனுமிலள்‘ என்றார். (62)
(இ-ள்.) (அமிர்தமதி), ஆழ்ந்த குழி வீ்ழ்ந்தபொழுது - அவ்வைந்தா நரகில் பிறந்து வீழ்ந்தபொழுது, அரு நரகர் ஓடி சூழ்ந்து - அந்நரகில் முன்னரே பிறந்துள்ள பழைய நாரகர்கள் இப்புதிய நாரகனிடம் விரைந்து வந்து சூழ்ந்து, துகையா - (துன்புற) மிதித்து, எரியுள் இட்டனர் சுட்டார் - நெருப்பிலிட்டுச் சுட்டார்கள்: போழ்ந்தனர் - (வாள் முதலிய ஆயுதங்களினால்) பிளந்தார்கள்: புண்பெருக - புண்மிகும்படி, வன்தறி புடைத்தார் - வலியமுள்தடியினால் ஓங்கி அடித்தார்கள்: மூழ்ந்த வினை - (உயிரினிடம்) முன்னரே பற்றி (பந்தமாகி)யுள்ள தீவினைகள், முனியும் எனின் - சினங்கொள்ளுமாயின், முனியலரும்உளரோ - வெறாதவரும் உளரோ? இல்லை யென்றபடி.