Primary tabs
தாங்கள் அடைதற்குக் கூறப்பட்டுள்ள குணங்களை யெல்லாம், கண்ணினார் - (உள்ளத்தில்) கருதினார்கள்: தமது உருவினது உடலங்கள் கழிந்தன - தங்கள் உருவுடம்பு கழிந்தன, (பின்) கழிபோகத்து எண்ணில் வானுலகத்து - மிக்க போகத்தில் அளவில்லாத கற்பவுலகத்து, இரண்டாவதில் - ஈசானகற்பத்தில், இமையவர் தாம் ஆனார் - தேவர்களானார்கள். (எ-று.)
அபயருசியும் அபயமதியும் தேவர்க ளானர்க ளென்க.
அபயன் - அபயருசி, எண்ணில் இரண்டாவதின் என்று கொண்டும் பொருள் கூறலாம். குணமெல்லாம் என்றது, ‘அறிவு நற்காட்சி காந்தி சாந்தி நல்லடக்கமைந்து, பொறிகளிற் செறிவு குப்தி சமிதியும் பொருந்தியாசை, வறுவிய மனத்துத் தண்டங் காரவஞ் சன்னை வீந்தஉறுதவம்‘ (மேரு. 344) முதலியவற்றை. (97)
(இ-ள்.) (அவ்விருவரும்), அம்பொன் மாமுடி - அழகிய முடியும், அலர் கதிர் குண்டலம் - ஒளிருங் கிரணங்களையுடைய கர்ண குண்டலகங்களும், அரும் மணி திகழ் ஆரம் - அரிய மணிகள் விட்டொளிரும் ஆரங்களும், செம்பொன்மாமணி தோள்வளை - பொன்னில் மணி பதித்திழைத்த தோட்செறியும், கடகங்கள் - அஸ்த கடகங்களும், செறிகழல் முதல்ஆக - காலிற் கட்டப்படும் வீரக்கழல் முதலாகவுள்ள, நம்பும் - விரும்புகின்ற, நாள்ஒளி நகு கதிர் - ஞாயிற்றின் ஒளியையும் நகும் ஒளியுடைய, கலங்களின் நலம்-(ஷோடச) ஆபரணங்களின் நலனும், பொலிந்து - பொலிவு பெற்று, அழகு ஆர்ந்த - அழகு நிறைந்த, வம்புவான் இடு தனுஎன - புதுமையாக வானில் இடும் இந்திரதனுசு போல, வடிவு உடை-உடம்பினையுடைய, வானவர் ஆனார் - தேவர்களானார்கள்.
அவ்விருவரும் கலன் நிறைந்த அழகுடைய தேவரானாரென்க.