தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நூலாசிரியர் வரலாறு


நூலாசிரியர் வரலாறு
சூளாமணி என்னும் இச்செந்தமிழ்ப் பெருங்காப்பியத்தினை இயற்றியருளியவர் தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவராவார். இப்புலவர் பெருமானுடைய இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இப்புலவர் பெருமான் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்குந் தோலாதாய், (1472) என்றும் தோலாநாவிற் சுச்சுதன்' (307) என்றும் இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அச்சொற்றொடரின் அருமையை யுணர்ந்த பிற்காலத்துச் சான்றோர் இவரைத் தோலாமொழித்தேவர் என்று வழங்கலாயினர் என்று சான்றோர்கள் கருதுகின்றனர். இன்னும் இந்நூலினைப் பாராட்டுகின்ற பழஞ்செய்யுட்கள் இரண்டு இவரைத் 'தோலாமொழி' என்றும் இவர் நூலினைத் 'தோலாச்சீர்ச் சூளாமணி' என்றும் புகழ்ந்து பாராட்டுகின்றன. அவற்றுள் ஒன்று,


"திக்கெட்டும் புகழ்படைத்த திறல்விசயன்
    புயலனைய கையன் தெவ்வைக்
கைக்கொட்டி நகைக்குமிகற் கார்வெட்டி
    யரையன்வள நாடற் கேற்பப்
பொக்கெட்டும் பத்துமிலான் புகழ்த்தரும
    தீர்த்தன்மலர்ப் பதம்பூ சிப்போன்
சொற்கெட்டா வரன்தோலா மொழிசூளா
    மணியுணர்வோர் துறைகண் டோரே."
 
எனவும், மற்றொன்று,


          
"பொழிந்து பொருள்விளக்கும் போழ்ந்திருள்கால் சீக்கும்
இழிந்தவரை யேற்றி நிறுத்துஞ் - செழுந்தரளத்
தோளா மணிதொகுத்தார் போலாதே தோலாச்சீர்ச்
சூளா மணியகத்துச் சொல்"
 
எனவும் வரும்.

இச்செய்யுள்களுள் இந்நூலாசிரியர் பெயர் தோலாமொழி என்பதும் அப்புலவர் பெருமான் தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையர் என்பதும் இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தில் இருந்தவரென்பதும் அவ்வரசன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினர் என்பதும் இந்நூல் கற்போர்க்கு எண்வகைச் சுவைகளையும் பொழிந்து அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் நன்குவிளக்கி அவர்தம் அறியாமை இருளை அகற்றும் என்றும் இதனைப் பயில்வார் ஆன்றவிந்த சான்றோர் ஆதல் திண்ணம் என்றும் இந்நூலினகத்துள்ள சொற்கள் வளமிக்க முத்துக்களை ஒக்கும் என்றும் விளக்கப்பட்டிருத்தல் காண்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:43:55(இந்திய நேரம்)