Primary tabs
கோவை வழக்கறிஞர் எம் அன்பர் திருவாளர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள், பி.ஏ. உரை கண்ட புத்தகம் ஒன்று சென்ற ஆண்டு மாசித் திங்களில் இவண் தேவாலயத்தில் அவர்களுக்கு நடைபெற்ற 60-வது ஆண்டு நிறைவுவிழாவின் போது கிடைக்கப்பெற்று இன்றுவரை வாசித்துவருகிறோம்.
இச்சைவப் பெரியார்களின் புராணத்திற்குக் காரைக்காலம்மையார் புராணம் வரை சூசனம் எழுதித் தமிழுலகத்திற்கு உதவிய ஸ்ரீ நாவலர் பெருமான் ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின் அப்பிற்பகுதிகளைப் பூர்த்திசெய்ய எப்புலவர்களும் முன் வராதிருந்த குறையை நமது பெரிய புராண உரையாசியர் முதலியார் அவர்கள் கண்ட உரையினால் நீக்க முன்வந்தது மிகவும் போற்றத்தக்கதேயாம். அச்சூசனங்கள் கற்றோர்க்கே பயன்படுவனவாயிருந்தன. இவ்வுரையோ வெனில் கற்றார்க்கும் மற்றார்க்கும் பயன் படுவனவாயிருப்பதோடு எளிய நடையில் அரிய பொருள்களை நன்கு விளக்குவனவாயும், சாஸ்திரக் கருத்துக்களையும், சகல நீதிகளையும், தற்கால ஆராய்ச்சி முறைமைக்கு ஒப்ப விளக்கம் செய்வன வாயுமிருக்கிறது. இவர்களின் சலியா முயற்சிப்பயனை உணர்ந்து நந்தமிழன்பர்கள் அனுபவிக்க வேண்டுகிறோம். இப்புத்தகம் நல்ல அழகிய எழுத்துக்களினாலும், படங்களினாலும், கட்டியிருப்பதினாலும் - ஒன்றையொன்று மிஞ்சும் வனப்பு வாய்ந்ததாகவே யிருக்கிறது.
சிவபூஜா பக்தியும், அடியார்கள் பக்தியும், சைவநூல் பக்தியும், மிகுந்த முதலியார் அவர்கள் நீண்ட நாள் அரோக திடகாத்திரராய் இருந்து சைவநூல் விளக்கப்பணிகளை மேலும்மேலும் புரிந்து வர வேண்டுமெனச் சதா திருவருளைச் சிந்திக்கின்றனம்.
_______
தூத்துக்குடி - "சித்தாந்த ஆசிரியர்"
உயர்சைவத் திருவாளர் - ந. சிவகுருநாத பிள்ளை அவர்கள்
பெரிய புராண படன முடிவு விழா மிகச் சிறப்பாக நடந்தேறியதாக அறிந்து மகிழ்ந்தேன். திரு . சேக்கிழார் திருக்கூட்டத்தாரால் 12-9-40 அனுப்பப்பெற்ற திருமுகம் கிடைத்துள்ளது. சிவஞான போதத்துக்கு ஸ்ரீமாதவச் சிவஞான யோகிகள் இயற்றிய விருத்தியுரை போலத் திருத்தொண்டர் புராணத்துக்குத் தாங்கள் இயற்றும் விருத்தியுரை சிறப்புடையது என்பது அடியேனது கருத்தாகும். முற்றும் விரைவில் முடிவுபெறக் கூத்தப்பெருமான் திருவருள் புரிவாராக.
______
தோரமங்கலம் "ஆசிரியர்" அ. வரதநஞ்சைய பிள்ளை களிகூர்ந்தியற்றிய உரைச் சிறப்புப்பாயிரம் எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
___________
1சே = எருது. கிழார் = உரியவர். எனவே, இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் எனப் பொருள்படும்.