தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

xiii

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இப்புராண உரை வெளியீட்டில் இலைமலிந்த சருக்கமும், மும்மையாலுலகாண்ட சருக்கமும் சேர்ந்த இவ்விரண்டாம்பகுதி 25-12-1940ல் உரையாசிரியர் சிவக்கவிமணி - C. K. சுப்பிரமணிய முதலியார் அவர்களால் வெளியிடப்பெற்றது. அப்பகுதியின் பிரதிகள் வெளிவந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே முழுவதும் செலவாகிவிட்டன. இப்பகுதியின் பின்னுள்ள புராண உரையின் ஏனைய ஐந்து பகுதிகளையும் தொடர்ந்து வெளியிட வேண்டிய பெரும் பணியில் உரையாசிரியர் அவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டு உழைத்து வந்ததால் இப்பகுதியின் மறுபதிப்பு வேலையை உடனே கவனிக்க இயலாததாயிற்று. உரையின் இறுதிப் பகுதி வெளிவருங்காலத்தில் உரைநூலின் முதல் மூன்று பகுதிகள் செலவாகி விரும்பிவேண்டும் அன்பர்களுக்கு உரைநூலின் முழுமையும் உதவமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் இவற்றின் மறுபதிப்பு வேலைகளைத் தொடங்கி முதற்பகுதிக்கு மட்டும் 1960ல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்கள்.

இந்நிலையில் உரையாசிரியர் அவர்கள் 1961 - ஆவது ஆண்டின் தொடக்கத்தில் சிவபதமடைந்து விட்டார்கள். அதனால் இவ்வுரை நூலின் ஏனைய பகுதிகளின் மறுபதிப்பு வேலைகள் அவர்களது சீரிய மேற்பார்
வையில் வெளிவரும் பேற்றினை இழந்துவிட்டன. கால மாறுதலால் காகிதவிலை, அச்சுக்கூலி, கட்டடக்கூலி, ஏனைய பிறசெலவுகள் எல்லாம் பன்மடங்கு உயர்ந்து இவ்வெளியீட்டின் வேலையை மேலும் அரியதாக்கின. இப்புராண உரையின் ஏனைய பகுதிகளைவிட இவ்விரண்டாம் பகுதியே அளவில் மிகப் பெரியதாக அமைந்திருப்பதும் இவ்வருமைப்பாட்டுக்குக் காரணமாயிற்று. திருவருளின் துணையால் இவ்விடையூறுகளை எல்லாம் ஒருவாறு கடந்து உரை நூலின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் பதிப்பு மூன்றாண்டுகளின் முன் இரண்டு பாகங்களாக வெளியாயிற்று. இவ்விரண்டாம் பகுதியின் மறுபதிப்பு இதன் முதற்பதிப்பு வெளியாகி இருபத்தெட்டு ஆண்டுகளின் பின் இன்று வெளி வருகின்றது.

சென்னை - இராயப்பேட்டை - திரு. மு. நாராயணசாமி முதலியார் அவர்கள் தமது முருகன் அச்சகத்தில் இப்பதிப்பை மிகவும் சிறந்த முறையில் அச்சிட்டு உதவினார்கள். அவர்களுக்கு எனது கடப்பாடுடைய நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இவ்வுரை நூலின் ஏனைய பகுதிகளின் மறு பதிப்புக்களும் தொடர்ந்து விரைவில் வெளிவரத் திருவருள் துணை செய்வதாக.

சேக்கிழார் நிலயம்,

கோயம்புத்தூர்,

26-1-1968. க. மங்கையர்க்கரசி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 14:45:55(இந்திய நேரம்)