தருமை ஆதீனத்தை நிறுவியருளிய
ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் வரலாறு
சீரணியும் நுதலின்விழி மழுமான் நாகம்
திருந்தும்எரி பொருந்துவிடம் தெரிந்தி டாமல்
தாரணிஅன் பரையாள அவர்போல் வந்த
சைவசிகா மணிஎவர்க்கும் தலைவன் எங்கோன்
காரணியும் நெடியபொழிற் கமலை வேந்தன்
கருணைமழை பொழியும்இரு கடைக்க ணாளன்
பாரணியும் ஞானசம் பந்தன் எந்தை
பரமன்இரு சரணமலர் பரவி வாழ்வாம்.
தமிழகத்தில்
- தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கார்காத்த வேளாளர் மரபில்
சுப்பிரமணிய பிள்ளை மீனாட்சியம்மை என்ற நல்லறப் பெரியோர்கட்கு
அருந்தவ மகவாகப் பதினாறாம் நூற்றாண்டில் அவதரித்தவர், தருமை ஆதீன முதற்
குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
இவருக்குப் பெற்றோர்கள், திருஞானசம்பந்தரைப்போல் தமது குழந்தையும் சிவஞானம்
பெற்றுச் சைவம் வளர்க்கும் ஞானாசிரியனாகத் திகழவேண்டும் என்று எண்ணி
'ஞானசம்பந்தன்' என்ற நற்பெயரைச் சூட்டி வளர்த்து வருகையில், தமது குலதெய்வமாகிய
சொக்கநாதரையும் மீனாட்சியம்மையையும் தரிசிப்பதற்கு ஞானசம்பந்தருடன்
மதுரை சென்று பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி வழிபட்டனர். பெற்றோர்கள்
ஊருக்குப் புறப்படுங்கால் ஞானசம்பந்தர் தன்னைத் தொடர்ந்து நின்ற தாயும்
தந்தையுமாகிய சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, உடலுக்குத் தாய் தந்தையர்களாகிய
பெற்றோர்களுக்கு விடை கொடுத்தனுப்பிச் சொக்கநாதர் வழிபாட்டிலே ஈடுபாடு
கொண்டவரானார்.
நாள்தோறும்
பொற்றாமரைக் கரையில் அடியார்கள் சிவபூசை புரிவதைக் கண்டார் ஞானசம்பந்தர்.
தாமும் அவ்வாறு சிவபூசை புரிய