தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thiruvaasagam


 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்’
 

என்ற அடிகளது வாக்கால் உணரலாம். பின்னர், பெருமான் வந்திக்கு முத்தியளித்து மறைந்தான். பெருமான் நம்பினோரைக் கைவிடமாட்டான் அன்றோ! "பத்தி வலையிற் படுவோன் காண்க" என்ற அடிகள் வாக்கையும் நினைவு கூர்க.

அடிகளுக்காகப் பெருமான் நரியைக் குதிரையாக்கியதும், வையையில் நீரைப் பெருகச் செய்ததும், மண் சுமந்து பிரம்படி பட்டதும் உணர்ந்த பாண்டியன், மனம் மிக வருந்தினான்; அடிகளுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து, அவர் விருப்பம் போல நடந்துகொள்ள உதவினான்.

அடிகள் பின்னர் ஆலவாய் அண்ணலிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு திருப்பெருந்துறைக்கு வந்தார்; பெருமானைப் பிரிந்த பின்னர்த் தாம் படும் துயரினை எண்ணி அழுதார். அவ்வாறு அழுது பாடிய பாடற்பகுதியே திருச்சதகமாகும். அடிகள், பெருமான் அருளால் அங்கிருந்து உத்தரகோச மங்கை வந்து சேர்ந்தார். தம்மால் தனித்து வாழ முடியாது பிற்பட்டிருப்பதை எண்ணிப் பாடிய பாடல்கள் நீத்தல் விண்ணப்பம். அங்கு அவருக்கு மீண்டும் காட்சி கிடைத்தது.
 

 
‘தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கைத்
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான்’
 

என்பதனால், இவ்வுண்மை விளங்கும்.

‘தில்லைக்கு வருக’ என்ற அருள் வாக்கின்படி உத்தரகோச மங்கையிலிருந்து தில்லைக்குப் புறப்பட்டார்; வழியில் பல தலங்களை வணங்கிக் கொண்டு திருவிடைமருதூரை அடைந்தார்; அங்கே இடைமருது ஈசனைச் சிறப்பாக வணங்கினார் என்பது,
 

 
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ’

 
என்று கூறியதனால் உணரலாம். இனி, திருவாரூர் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு திருக்கழுமலம் என்னும் சீகாழிப் பதிக்கு வந்தணைந்தார். அங்கே பெருமானது காட்சி கிடைத்தது.
 
 
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்’
 

என்ற அகவல் அடி அகச்சான்றாகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 15:02:01(இந்திய நேரம்)