தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிரண்டு மாதங்கள் தலயாத்திரை
முதலியவற்றிற் செலவிட வேண்டுவதாயிற்று; இடையிடையே, "மூப்புறுமத்
தளர்வாலும் முதிர்ந்து முடுகி" அவ்வப்போது நோந்த சிறியபெரிய
நோய்களாலும் பல நாட்கள் வாளா கழிந்தன; போதாக் குறைக்கு
ஐரோப்பியப் போரும் வந்தது; இவ்வெளியீட்டுக்கு நேர்ந்த இடையூறுகளின்
கணக்கில் இங்குக் குறித்தன சிலவே.

முதற்பகுதியிற் போலவே இப்பகுதியிலும் உடனின்று உதவியும்
திருத்தியும் படங்கள் எடுத்துத் தந்தும் மற்றும் பலவகையாலும்
இவ்வெளியீட்டுக்குத் துணை செய்தும் தந்த எல்லாப் பெருமக்களுக்கும் என்
நன்றி உரியது. சாது அச்சுக்கூடத்தார் இத்தனை இடையூறுகளுக்கிடையிலே,
இதனை எனது வேலையன்றித் தமது வலையாகவே கொண்டு சிறிதும்
தளராது செய்துகொடுக்கும் பேருதவி போற்றத்தக்கதாகும்.

செய்யுளணிகள் அங்கங்குத் தரப்பட்டிருத்தலின் விரிவாகச்
சேர்க்கப்படவில்லை. பெயர் விளக்கம் கண்ணப்பநாயனார் புராணத்திற்குத்
தனியாக முன்னரே கொடுக்கப்பட்டிருத்தலின் எஞ்சிய பகுதிகளுக்குமட்டும்
இப்போது தொகுக்கப்பட்டுள்ளது. சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் கண்ணப்ப
நாயனார் புராணத்திற்குரியது முன்னர் வெளிவந்துள்ளது. இப்பகுதியில்
உள்ள ஏனைய நாயன்மார்களின் சரித ஆராய்ச்சியுரை எழுதி உதவவுள்ள
எனது அரிய நண்பர் திரு. இராவ்பகதூர் - C. M. இராமச்சந்திர
செட்டியார், B.A., B.L., F.R.G.S.
அவர்கள் இப்போது கோவையில்
இல்லை; சென்னை இந்துமத அறநிலயப் பாதுகாப்புக் கழகத்தில்
(Commissioner, Hindu Religious Endowments Board Madras)

அங்கத்தினராக நியமனம் பெற்றுச் சென்னையில் தங்குகின்றார்கள்.
அவ்வேலையின் பெரும் பொறுப்புக்களுக்கிடையில் இச்சரித ஆராய்ச்சிக்
குறிப்புக்களைத் தொகுத்து எழுதியுதவுதற்குப் போதியகாலம் அவர்களுக்
கிடையாமையால் அவை இத்தொகுதியில் வெளிவர இயலாமைபற்றி
வருந்துகின்றேன். ஆனால் திருத்தொண்டர் புராணத்தில் ஆர்வங்கொண்டு
அவர்கள் செய்த பெரும் பணிகளின் பயனாகச் சிவத்திருப்பணிகள் பலவும்
செய்யத்தக்க பெரும் பதவியை பெற்றமர்ந்துள்ளதுபற்றி அன்பர்கள்யாவரும்
மகிழ்வர். மேற்கோள் நூலகராதி ஒன்று தொகுத்து சேர்க்கப்பட்டிருப்பது
இப்பகுதியைப் படிக்கும் அன்பர்களுக்கு உதவுவதாகும்.

திருநாவுக்கரசு நாயனாரிடம் பேரன்பு பூண்டு, அத்திருப்பெயரால்
வித்தியாசாலை முதலிய பல அறநிலயங்கள் வகுத்து நடத்தித், தமது
இல்லத்துக்கும் மகார்க்கும் அப்பெயர் வைத்து மகிழ்ந்து வரும்
நேமத்தான்பட்டி திருவாளர் - சி. வீ. நா. பழனியப்ப செட்டியார்
அவர்கள் திருநாவுக்கரசுநாயனார்புராண உரைத் தொடக்கத்தில் ரூ. 50.
நன்கொடை தந்து ஊக்கமளித்ததுபற்றி என் நன்றியை முன்னரே
அறிவித்துக் கொண்டிருக்கின்றேன். அப்பாசுவாமிகளின் திருவருட்டுணை
கொண்டு அடுத்த பகுதி விரைவில் நிறைவேறும் என்று நம்புகின்றேன்.

இந்த இரண்டாம் பகுதி வேலை நடந்து கொண்டிருக்கும் இடையில்
நாயன்மார்களின் திருவருட்டுணையால் இப்புராணப் பணி செய்வதன்
பயனாக அடியேனுக்குக் கிடைத்த இரண்டு பெரும்பேறுகளை இங்குக்
குறித்துவைக்க மனம் எழுகின்றது. கோவையில் பனிரண்டாண்டுகளின்முன்
தொடங்கிச் சில இடையீடுகளுடன் வாரந்தோறும் அடியேனால் நடைபெற்று
வந்த திருத்தொண்டர் புராண படனமானது இந்நகர்ச் சைவப்பிரசங்கசாலை
மண்டபத்தில் (1-9-1940) விக்கிரம ஆண்டு ஆவணித் திங்கள் 17-ம் நாள்
நிறைவேறியது; சேக்கிழார் நாயனாரது திருவுருவப் படத்தையும்
திருத்தொண்டர் புராணத்தையும் யானையின் மேலேற்றுவித்துச் சிறப்பாக
நகர்வலம் செய்விக்கப்பட்டது; திருவாவடுதுறை ஆதீனம் மகாசுந்நிதானங்கள்
பரிவட்டமும் திருவருட்பிரசாதமும் அனுப்பி ஆசீர்வதித்தருளிற்று; பல
பெரியோர்கள் இத்திருவிழாவிற் கலந்துகொண்டனர்;

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:29:46(இந்திய நேரம்)