தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலைமலிந்த சருக்கத்துச் சரித ஆராய்ச்சியுரை


1248
பெரியபுராணம் மூலமும் உரையும்

வில்லியார் 741, ஆடவன், 741, காளையார் 757, கருமுகிலென்ன நின்ற
கண்படாவில்லியார் 810, வேடர் மன்னனார் 775, மெய்காட்டு மன்புடைய
வில்லியார் 783, மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் 790,
வனவேடர் தந்தலைவனார் 798, வனவேந்தர் 801. சிவபெருமானது கண்ணில்
குருதி நிற்குமாறு தம் கண்ணைத் தோண்டி இறைவரது கண்ணில் அப்பிய
காரணத்தால் கண்ணப்பர் என்று பெயர் பெற்றனர். இது இவருக்கு
இறைவரால் தரப்பட்டது 827. திண்ணன் பார்க்க.

கதிருச்சி - 750 - 792. வானமுகட்டின் தலையில் சூரியன்
காணப்படும் நடுப் பகல் வேளை. இது ஒரு நல்வேளையாக வேடர் கருதி
ஒழுகினர். தமிழரது நாட்கணக்குத் தொடக்கம் கதிருச்சி வேளை என்பர்
ஆராய்ச்சியாளர் திரு. S. S. பாரதியார். நண்பகல் - நள்ளிரவு -
பானாட்கங்குல் - அரைநாட் கங்குல் - ஆரிருள் நடுநாள் - அரை நாள்
யாமம் - அரையிருள் இரவு - (அரையிருள் யாமம்) முதலிய வழக்குக்கள்
காட்டுவார்.

கலயனார் 830. குங்குலியக்கலய நாயனார். அவர் புராணம் காண்க.

கலைவளர் திங்கள் 691. முழுமதி.

களிந்தி கன்னி 722. காளிந்தியென்னும் யமுனை நதி. இதன்நீர்
கருநிறங் காட்டுமென்பர்.

கன்னிவேட்டை - 696. வேடர் (தலைவன்) சிலைபயின்ற பின்
முதன்முறை காட்டுக்குப்போய்ச் செய்யும் வேட்டை.

காடன் 738 - 741-748 - 764 - 802. திண்ணனாருடன் வேட்டைக்குச்
சென்று கூடவே நின்று அவரடி பிரியா விடலைகளாயின மெய்காவலாளர்
இருவரில் இளையவன். நாகனும் திண்ணனாரும் காளத்தி காணச்
சென்றபோது இவன் முகலியின் மேல்கரைச் சோலையில் தீக்கடைந்து
வைத்தும், பன்றியினைக் காத்தும் நின்றவன். வேட்டைக் காட்டினின்றும்
பன்றியைத் தொடர்ந்து பல காதங்கள் ஓடிய திண்ணனாரைத் தொடர்ந்து
கூடவே ஓடிவந்த இருவரிலொருவன்.

கடுகாவல் செய்தல் 724. (சூழல் செய்தகான்) காட்டின் பரப்பு
முழுதும் ஒடியெறிந்தும் வார்போக்கியும் வலைதொடக்கியும் உள்ளிருந்த
மிருகங்கள் தப்பி ஓடிவிடாமல் காட்டைச் சுற்றிலும் காவல் அமைத்தல்.

காப்பு 667 - 682. குழவிகளைப் பிணி - தெய்வக்கோள் முதலியன
தாக்காது காப்பதாய்க் கையினும் - காலினும் - மார்பினும் அணியும் கயிறு,
புலி நரம்பு முதலியவற்றானியன்ற அணிவகை. இது படைக்கல முதலிய
கருவிகளுக்கும் அவற்றைப் பாதுகாக்க அணிவதுண்டு. ஆலயம் மனை
முதலியவற்றிற்குக் காப்புக் கட்டுவதும் வழக்கம்.

காளமேகம் 664. கார்மழை மேகம் 716. நீர் சுமந்த கருமேகம்.

குடுமித்தேவர் 745. காளத்தி நாதர்க்கு வேடர் வழங்கும் பெயர்.
மலையின் உச்சியில் உள்ளதனால் இப்பெயரிட்டனர் போலும். தேவர் 746 -
765.

குரவை 660. குறிஞ்சி அல்லது முல்லைநில மகளிர் கைகோத்தாடும்
ஒரு வகைக் கூத்து.

குலமுது குறத்தி 676. குறவர் குலத்தில் குழவிகளை வளர்த்தற்கு
நியமிக்கப்பட்ட மிகமூப்பும் அனுபவமுமுடைய குறத்தி. "ஈன்ற குறமகளிர்க்
கேழை முதுகுறத்தி" என்ற ஈங்கோய்மலை எழுபது பார்க்க.

குறிச்சி 657 - 674 - 687. குறிஞ்சி நிலத்து ஊர்ப்பெயர். கோற்றேன்
793 - 799. புதர்களிலும், சிறு செடி - மரக் கிளை இவற்றிலும்
ஈட்டப்பெற்றுள்ள சிறு தேன்கூடுகள்.

சந்திரன் 778. மதி 732. 778 - 732. இருசுடர் என்றதன்கீழ்ப் பார்க்க.

சிலைபயில் பருவம் 676, அரசர் - வேடர் முதலியோர் விற்கல்வி
பயிலும் பருவம். இது 12 ஆண்டு முதல் தொடங்கு மென்ப.

சிவகோசரி முனிவர் 784. பெருமுனிவர் 790. தணிந்தமனத்
திருமுனிவர் 789. அந்தணனார் 798. அருமறை முனிவர் 810. மாமுனிவர்
801, 804, 808. அருமுனிவர் 805. மறைமுனிவர் 807. திண்ணனார்
காளத்தியப்பரைக் காண்பதற்கு முன் சிவாகமங்களில் விதித்த பூசை
முறைப்படி நாணாளும் அதிகாலையிற் பொன்முகலியிற் படிந்து புனிதமாய்க்
காளத்தியப்பரை மலர் புனல் முதலியவை கொண்டு சிந்தை நியமத்துடன்
திருமஞ்சனமாட்டியும், பூச்சூட்டியும் திருவமுதூட்டியும் அருச்சித்துவந்த
முனிவர். தினமும் அவ்வாறு பூசித்த பின்னர்த்தபோவனத்திற் றவஞ்செய்யும்
மறைமுனிவர். திண்ணனார் பூசித்த பிற்றைநாள் இறைவரது திருமுன்பு
இறைச்சியும், எலும்பும், நாயடியும் கண்டு பதைபதைத்து அவற்றை மாற்றிப்
பவித்திரஞ் செய்து பூசித்தனர். இவ்வாறு தினமும் நான்கு நாட்கள் கண்டு,
இதனை மாற்றியருளுமாறு இறைவனை வேண்டினார். "நாளை அவனது
அன்பே வடிவாம் தன்மை காட்டுவேன்" என்று கனவில் இவருக்கு இறைவன்
அறிவித்து அதற்காக மறுநாள் (ஆறாவது நாள்) தமது வலக்கண்ணில்
உதிரம்பாய இருந்தனர். அதுகண்டு திண்ணனார் தமது வலதுகண்ணைத்
தோண்டி அப்பிக் குருதிநிற்கக் கண்டனர்; பின் இடது கண்ணிற் குருதிபாயத்
தமது இடது - கண்ணையும் தோண்ட ஒருப்பட்டு அம்பினை ஊன்றியபோது
இறைவன் தன் திருக்கையாற் பிடித்தும் திருவாயாற் கூறியும் தடுத்து "என்
வலத்தில் நிற்க" என்றருளினர். இவையாவும் இம்முனிவர்க்குக் காட்டுதற்கே
இறைவன் செய்தருளினர். இச்சரித நிகழ்ச்சிக்கும், அதனால், மேம்பட்டதான
அன்பின்றிறம், உலகில் விளங்கி உலகமுய்தற்கும் காரணராயிருந்த
புண்ணியமுனிவர். இவர் செய்தது ஆகம விதிப்படி உள்ள பூசையாதலின்
திண்ணனார் பூசையினை விதிக்கு மாறாகக்கண்டு அஞ்சினர். ஆயினும், அது,
இவர் பூசைமுறையினையே பின்பற்றித் தம்மைமறந்து அன்பே யுருவமாகச்
செய்யப்பட்டமையின் இறைவனுக்கு உகந்ததாயிற்றென்று கண்டனர்.
பாரத்துவாச ஆச்சிரமம் என்று வழங்குமிடம் இவர் தங்கித் தவஞ்செய்திருந்த
இடமென்று கருதப்படுகின்றது. இங்குக் குளமும் ஒன்றுள்ளது. பாரத்துவாச
கோத்திரம் சிவமறையோர் கோத்திரத்தார்கள் ஒன்று. இன்றைக்கும்
சிவமறையோர் பல கோத்திரங்கள் இங்குப் பூசைக்கு இருப்பினும்
அவர்களுள் பாரத்துவாச கோத்திரத்தார் மட்டும் காளத்திநாதரைத் தீண்டித்
திருமஞ்சன முதலியன செய்தற் குரிமையுடையவர்கள்.

சிவபெருமான் - பிஞ்ஞகன் 809, தேறுவார்க் கமுதமான செல்வனார்
811, ஆறுசேர் சடையார் 811, அத்தன் 812, அண்ணலார் 812, பரமனார் 818,
அத்தனார் 818, விமலனார் 772, 818, எம்பிரான் 819, பூதநாயகன் - 820,
எந்தையார் 788, 822, முதலவர் 822, முதல்வனார் 788, கண்ணுதல் 826,
தம்பிரான் 826, தேவதேவர் 826, விடையின் பாகர் 827, அங்கணர் 753, 827,
நாககங்கணர் 827, ஊனமு துகந்த ஐயர் 828, பிரான், 829, ஏறுயர்த்தவர் 829,
புரங்கள் செற்ற விடையவர் 650, வேதவாய்மைக் காவலர் 650, புரங்கள்செற்ற
எந்தையார் 661, தேனலர் கொன்றையார் 681, தண்ணிலா வடம்பு
கொன்றைதங்கு வேணியார் 720, செங்கணேறுடையார் 744, வள்ளலார் 751,
திங்கள் சேர்சடையார் 753, ஏகநாயகர் 754, இனிய எம்பிரானார் 771, ஐயர்
(சிவபெருமான்) 776, முனிவருமமரர் தாமுங் காணுதற் கரியார் 777,
குழையணி காதர் 778, வள்ளல் 782, அரும்பெறற் றம்பிரானார் 789,
மைதழையுங் கண்டத்து மலைமருந்து 784, வானவர் நாயகர் 785,
தேவதேவேசன் 786, பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்து 787,
தனிமுதலாம்பரன் 789, சுடர்த்திங்க ளணிந்தசடை முடிக்கற்றை அங்கணர்
789, இமையோர் தலைவனார் 798, புனற்சடிலத்திருமுடியார் 807.

சீறூர் 664 - 680. குறிஞ்சி நிலத்து ஊர். சிறுகுடி - குறிச்சி
எனவும்படும்.

சேடை - 697 - 715. தெய்வ வாழ்த்துக்குரிய அட்சதை. வேடர்
இதனை மலை நெல் லரிசியால் ஆக்கிக்கொள்வர்.

தத்தை 657 - 662. கண்ணப்ப நாயனாரது தாயார். நாகனது மனைவி.
மறவர் தாயத்து ஆன்ற தொல்குடியில் வந்தவள். பெண் சிங்கம் போல்வாள்.

தலை உவா 778. அமாவாசியை. மறைமதி என்பர்.

தனிமுதலாம் பரன் 789. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று
பன்முறையும் துணிந்த மறைமொழி. 789 உரை பார்க்க.

திங்கள்முறை வேட்டை 693. மிருகங்கள் ஊர்க்குள் மேலடர்ந்து
வராதபடி செய்ய மாதந்தோறும், அல்லது குறித்த சில மாதங்களுக்
கொருமுறை, ஊர் வேடர் தமது தலைவருடன் திரண்டு சென்று
வேட்டையாடுதல்.

திண்ணன் 666, 678, 695, 969, 700, 711, 769. கண்ணப்ப
நாயனாருக்குத் தந்தையால் இடப்பெற்ற பிள்ளைபபெயர். குழந்தைப்
பருவத்தில் தந்தை இவரைக் கையிலேந்தியபோது திண்ணென்றிருந்த
படியால் இப்பெயரிட்டான். திண்ணனார் 692 - 701 - 703 - 705 - 724 -
742 - 743 - 746 -749 - 759 - 771 - 773 - 813 - 826 - 827.
திண்ணா! 766.

திருக்காளத்தி 650 - 754 - 759. இது தென்கயிலை எனப்படும்.
கண்ணப்பர்க்குச் சிவபெருமான் அருள்செய்த மலை. சீகாளத்தி எனப்படும்.
சீ - சிலந்தி, காளம் - பாம்பு, அத்தி - யானை இவைகள் பூசித்தமையால்
இப்பெயரெய்தியது. தலவிசேடம் பார்க்க. திருமலை 744, 785, 791.
திருக்காளத்திமலை 745 - 754 - 798 - 803 - 809. காளத்தி 749,
காளத்திமலை 773, திருக்காளத்தி 811.

திருக்காளத்தியப்பர் - திருக்காளத்தி மன்னனார் 830, திருக்காளத்தி
மலையினார் 775 - 788 - 798 - 809, திருக்காளத்தி முதல்வனார் 803,
திருக்காளத்தி அடிகளார் 813, திருக்காளத்திக் கொற்றவர் 821, திருக்காளத்தி
யற்புதர் 827, கடவுள் மால்வரை 750, வள்ளலார் மலை 751, நளிர்வரை 752,
திருக்காளத்திமலை எழு கொழுந்து 754, திருக்காளத்தி நாயனார் 759,
இறைவர் வெற்பு 771, வெற்பின் முளைத்தெழு முதல் 772, தடங்காளத்தி
மலைமிசைத் தம்பிரானார் 773, குழையணி காதர் (வெற்பு) 778,
காளத்தியண்ணலார் 796, காளத்தியப்பர் 800.

தீபமா மரங்கள் 780. சோதி மரம் என்பர். இரவில் நெடுந்தூரத்தில்
தெரியக் கூடியதாக ஒளி வீசும் ஒருவகை மரம். பகலில் ஒளிதராது. யோகம்
- மருத்துவம் முதலிய கலைகளின் வழக்குக்கும் பெரிதும் பயன்படுவது.

துணங்கை 688. எழுவர் மகளிர் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து.

தெய்வப் பெருமடை - 668. தெய்வங்களுக்குப் படைக்கும்
பெருஞ்சோறு முதலியவை.

தேவராட்டி - 696, 769. வேடர் தலைவர் மரபில் அவர்களது குடும்ப
நன்மையின் பொருட்டுத் தெய்வங்கட்குப் பலியிட்டும் - தொழுதும், பரவும்
தொழிலில் வழிவழி நியமிக்கப்பட்ட குறமுது மகள். தேவராட்டி என்பது
தெய்வத்தால் ஆளப்பெற்றவள். தெய்வமேறப் பெற்றவள் - என்ற பொருளில்
வந்த பெயர். அணங்குடையாட்டி 716, அணங்கு சார்ந்தாள் 698, கடவுட்
பொறையாட்டி 714, படிமத்தாள் 698, தெய்வநிகழ் குறமுதியாள் 700,
வரைச்சூராட்டி 700, அணங்குறைவாள் 802, என்று பலவாறும்
சொல்லப்படுபவள். இவள்மேல் தெய்வம் ஆவேசித்துள்ளது என்பது வேடரது
நம்பிக்கை. பூசைக்காக அரசனால் இறைச்சி - தேன் - ஈயல் முதலிய
படிமுறை பெற்று வாழ்பவள்.

தேவுமால் 769. தேவரிடத்து மிக்க பற்றினால் மயக்கங்கொண்டு
உலகை மறத்தல்.

நாகன் 656, 661, 678, 692, 694, 802. கண்ணப்பநாயனாரின் தந்தை;
பொத்தப்பி நாட்டு மலைவேடர்க்கரசன்; உடுப்பூரில் இருந்து அரசுசெய்த
தலைவன்; வெஞ்சின மடங்கல் போல்வான்; வெகுகாலம் பிள்ளைப்பேறின்றி
வருந்தி முருகப் பெருமானை வழிபட்டுக் கண்ணப்ப நாயனாரை
மகனாகப்பெற்ற முன்னைத் தவமுடையான்; அவருக்குத் திண்ணனெனப்
பிள்ளைப்பெயரிட்டு வளர்த்து, உரியபடி வில்வித்தை பயிற்றி, அரசுரிமை
சூட்டிக், கன்னிவேட்டைக் கனுப்பினான்; அவர் அன்றைக்கே காளத்தியிற்
குடுமித்தேவரைக்கண்டு பற்றிக்கொண்டு தேவுமால் கொண்டுவிட்டார் என்று
நாணன் காடன் இவர்களாற் கேட்டுத் தேவராட்டியுடன் போய்த் தானறிந்தவா
றெல்லாம் பேதிப்பவும் அவர் தங்கள் குறிவாராமையிற் கைவிட்டு வந்தவன்.
696, 698, 702.

நாணன் 738, 741, 745, 748, 750, 757, 764, 802. திண்ணனாருடன்
கன்னி வேட்டைக்குச் சென்று அவரடிபிரியா விடலைகளாகி மெய்காவலாளரா
யிருந்த இருவரிலொருவன். நாகனுக்கும் மெய்காவலாளனாயிருந்து முதிர்ந்த
அனுபவமும் அறிவுமுடையவன்; திண்ணனாருடன் பன்றியைத்
தொடர்ந்தோடியவன்; இவனே திண்ணனாரைக் காளத்தி மலைக்கு
முன்சென்று வழிகாட்டி அழைத்துப் போய் அம்மலையின் காட்சி -
ஐந்தோசை - குடுமித்தேவர் - அவரை வழிபடுமுறை முதலியவற்றை
அறிவித்து வழிப்படுத்தி விட்டவன். மலைமேல் அவர் குடுமித்
தேவரைப்பற்றிக்கொண்ட தன்மையை உடனிருந்து அறிந்து "வங்கினைப்
பற்றிப் போகா வல்லுடும் பென்ன"த் "தேவுமால் கொண்டான்" என்று
அதனைக்காடனுக்கு அறிவுறுத்தியவன். பின்னர் நாகனையும் தேராட்டியையும்
அழைத்து வந்து அறிந்தவகை யெல்லாம் பேதித்தும் தம்குறி வாராமையிற்
கைவிட்டுப் போயினவன். நாணா! 750.

நாயனார் - 759. 772 - 817 - 824. தலைவர். யாவருக்கும்
தலைவராகிய சிவபெருமானைக் குறிக்கும் இச்சொல் அவனடியார்களாய்
உலகுக்குத் தலைவராய் உலகை ஆளுதற்குரிய பெரியோர்களைக் குறிக்க
வழங்குவது சைவமரபு. நாயனீரே! 774.

நான்முகன் - 828. இவர் ஐந்துமுகத்துடனிருந்தவர். அகந்தை
கொண்ட போது பைரவமூர்த்தி ஒரு முகத்தைக் கிள்ளிவிட்டதனால்
நான்முகனாயினர். இறைவன் செய்த தண்டனையாதலாற் கிள்ளப்பட்ட
தலையினைப் படைத்துக்கொள்ள வலியிலராயினார். தன்னால்படைக்கப்பட்ட
திலோத்தமையின் அழகைக் காணும் பொருட்டு நான்குதிக்கிலும் நான்கு
முகங்கள் கொண்டனர் என்ப. "அயனை அனங்களை அந்தகனைச்
சந்திரனை, வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ, நயனங்கள்
மூன்றுடைய நாயகனே தண்டித்தாற், சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்
சாழலோ?" என்றது திருவாசகம்.

பராய்க்கடன் - 659 - 680. தெய்வம் பரவிச் சடங்குடன் செய்யும்
நேர்ச்சிக் கடன்முறை.

பரிதி - 778. சூரியன். நவக்கோள்களுள் ஒன்று இராசக்கிரம் என்பர்.
"இருசுடர்" என்றவிடத் துரைத்தன பார்க்க. "பகலவன் மலையிற்றாழ்ந்தான்"
775. "தேரிரவி எழும்போது" 783. "துனைபுரவித் தனித்தேர்மேற் றான்றுவான்"
808.

பவித்திரமாஞ்செயல் - 788. திருக்கோயிலில் அனுசிதம் நிகழ்ந்தால்
அதனை மாற்றச்சிவாகமப்படிபுனிதம் செய்யும் சடங்கு - மந்திரம் - பாவனை
முதலியவிதிகள்.

புரங்கள் - 650. திரிபுரம் எனப்படும். பொன் - வெள்ளி - செம்பு
இவற்றாலாகிய மதில்களையுடைய பறக்குமியல்புள்ள மூன்று நகரங்கள்.
இவற்றில் அசுரர்கள் வாழ்ந்து உலகை அலைத்தனர். இவற்றைச்
சிவபெருமான் தமது புன்சிரிப்பினால் எரித்தனர். ஆனால் இவற்றுள் வாழ்ந்த
சிவனடியார்களாகிய மூவர் (தாரகாட்சன் - கமலாட்சன் - வித்யுன்மாலி
என்றவர்கள்) மட்டும் காப்பாற்றப்பட்டனர். அவர்களிருவரே இறைவன்
கோயில்வாயிற் காவலராவர். மற்றவர் திருக்கூத்திற்குக் குடமுழா முழக்குபவர்.
"மூவெயில்செற்ற ஞான்றுய்ந்த மூவரிலிருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்,
காவ லாளரென் றேவிய பின்னை யொருவ னீகரி காடரங் காக, மாவை
நோக்கியோர் மாநட மகிழ மணிமுழா முழக்கவருள் செய்த, தேவ தேவ"
என்பது நம்பிகளது (திருப்புன்கூர் (8) தக்கேசி) தேவாரம்.

பொத்தப்பி - நாயனார் அவதரித்த திருநாடு. சரித்திரக் குறிப்புப்
பார்க்க.

பொன் முகலி - 743. காளத்தி மலையின் அடிவாரஞ்சேர வடக்கு
நோக்கி ஓடும் ஆறு. தன்னுட் படிந்தார்க்கு உடற்றூய்மையும் உயிர்த்
தூய்மையும் தந்து ஈடேற்றும் புண்ணிய நதி; திருமுறைகளிற் போற்றப்பெற்றது.
சரித ஆராய்ச்சிக் குறிப்புப் பார்க்க. திருமுகலி - 747, 787, 809.
திருமுகலியாறு. 763.

மரக்கடை தீக்கோல் 748 - 793. காய்ந்த மரக்கட்டையை மற்றோர்
காய்ந்த மரத்தினுடன் விசையிற் கடைதலால் தீயினைஉண்டாகும்படி
முன்னாளில் வேடர்களுள் வழங்கியதொரு வழக்கு. தீக்கடையும் கோல்.
எரிகடையுமரணி 794.

மலமுன்று 803. ஆணவம் - மாயை - கன்மமெனப்படும் பாசங்கள்.
ஆணவம் - சகசமலம் - மூலமலம் எனப்படும். இது செம்பிற்களிம்புபோல
அநாதியே உயிர்களின் அறிவு தொழில்களை மறைப்பது. கன்மம் -
மூலகன்மம். முதலுற்பவத்தில் சூக்கும தேகம் பெறுதற் கேதுவாகியது.
அகிலாண்டேசுவரி பதிகம் பார்க்க.

மாயை இருவினைப் பயனனுபவித்தற் பொருட்டுவரும் தநு கரண
முதலியவற்றுக்கு முதற்காரணமாயிருப்பது. (803) உரைப்பகுதி பார்க்க.

முருகவேள் 659. குமார தெய்வம். குறிஞ்சிக் கடவுள். உடுப்பூரில்
இவரது திருமுன்றிலில் சேவலு மயிலும் விட்டும், தோரண மணிகள் தூக்கியும்,
மாலைகள் தொங்க வைத்தும், குரவைக் கூத்தொடு அணங்காடல் செய்தும்,
பெருவிழா எடுத்ததன் பயனாக நாகன் திண்ணனாரை மகனாகப் பெற்றான்.
உடுப்பூருக்கு இரண்டு நாழிகையளவில் உள்ள குன்றின் மேல்
தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இன்றும் பலர் சென்று வழிபட்டு
வருகின்றார்கள். கார்த்திகை நாட்களில் கோழிகள் கொணர்ந்துவிடும்
வழக்கமுமுள்ளது. இவர் முப்புரஞ்செற்ற சிவபெருமான் திருமைந்தர். மயில்
ஊர்தியுடையவர். கிரவுஞ்சமலையைப் பிளந்த வெற்றியுடைய வேலேந்திய
பெருமையுடையவர். சரிதமும் பிற சிறப்பும் கந்தபுராணத்துக் காண்க.
இவரையே போற்றும் அருணகிரியார் திருப்புகழையும் ஓதியுய்க. போரணி
நெடு வேலோன் 660. எந்தையார் மைந்தர் 661. வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி யண்ணலார் 661. மயிலுடைக் கொற்றவூர்தி
661. வென்றிவேள் 678.

மா எழுப்புதல் 726. காடு சுற்றிலும் காவல் செய்தமைத்த பின் புதர்
முதலிய மறைவிடங்களில் ஒளித்திருக்கும் விலங்குகளைப் பம்பை முதலிய
இயங்கள் முழக்கியும், கைதட்டியும், வாயாற்கூவியும் மற்றும் பலவகை
ஓசைசெய்தும், நாய்களை ஏவியும் அச்சுறுத்தி அவ்விடங்களிலிருந்து
வெளிவரச் செய்தல்.

முன்பு செய்தவம் 751. முன்பிறப்பிற் செய்ததவம். இப்பிறப்பின்
வரும் மேன்மைக்கு முன்பிறப்பின் றவம் காரணம் என்பர். 751 உரைபார்க்க.
திண்ணனாரது தந்தை நாகனும் அவரை மகனாகப்பெற முன்னைத்தவஞ்
செய்தான். தவமுன் செய்தான் 657.

மேரு 681. மகாமேருமலை. பொன்மலை என்ப. இதனை நடுவைத்துச்
சூரியன் முதலிய அண்டங்கள் சுற்றி வருவன என்பது மரபு. இதனைத் திரிபுர
சங்கார காலத்தில் சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையிலேந்தினர்
என்பன மா புராணங்கள்.

யாக்கைதன் பரிசு - 803. மாயேயங்களாகிய தநுவும் கரணங்களும்.
உரை பார்க்க.

வரைஆட்சி 695. மலைவேடர்களின் தலைவனாக அவர்களை
ஆளும் அரசுரிமை பொருப்புரிமை 699. சிலைமலையர் குலக்காவல் 702.
மரபுரிமை 702. குலத்தலைமை 703.

வனதெய்வங்கள் - 700. காடுகளில் வாழும் சிறு தெய்வங்கள். இவை
பலிகள் பெருமடை முதலியவற்றால் தம்மை வழிபட்டோரைக் காத்துச்
சிறுநன்மைகள் செய்வன என்றும், வழிபடாவிடில் தீங்கு செய்வன என்றும்
வேடர்நம்புவர். இவை மகிழப் பலியிடுவதனைக் "காடுபலி யூட்டுதல்" என்பர்.
காட்டிலுறை தெய்வங்கள் 699.

வாளிதெரிதல் 713. அம்புகள் வேட்டைக்குத் தகுதியாயுள்ள
தன்மையைச் சோதித்தல்.

வில்விழா 680. விற்பயிற்சி தொடங்குச்செய்யும் விழா - சிலைவிழவு
685.

விற் பிடித்தல் 678. வில்விழாக் கொண்டாடி நல்லாசிரியன்பால்
நல்வேளையில் வில்லைப்பிடித்துக் கலை பயிலத் தொடங்குதல்.
வித்தியாரம்பம் என்ப.

வினையிரண்டு 803. புனருற்பவத்துக் கேதுவாக உயிரான் ஈட்டப்பட்ட
அறமும் பாவமும். உரை பார்க்க.

வெறியாட்டு 662. முருகப் பெருமானைக் குறித்து ஆடும் ஆடல்
வகையுள் ஒன்று.

இலைமலிந்த சருக்கம்

சரித ஆராய்ச்சியுரை

[இராவ்பகதூர் - திரு. C. M. இராமச்சந்திர செட்டியார், B. A., B. L.,
F. R., G. S. அவர்கள் அன்புடன் உதவிய குறிப்புக்கள்]

1. எறிபத்த நாயனார்

திருப்பதி - திருக்கருவூர் :- இது ஒரு பழைய ஊர்; கொங்குநாட்டுத்
தேவாரப்பாடல்பெற்ற தலங்கள் ஏழனுள் ஒன்று. இவ்வூரில் பண்டைக்காலச்
சின்னங்கள் பல கிடைத்தன. உரோமானிய சக்கரவர்த்திகளின் நாணயங்கள்
பல தோண்டி எடுக்கப்பட்டன.

உரோமானிய அரசன் பெயர் காலம் தோண்டிஎடுக்கப்பட்ட வருடம்

     அகஸ்தஸ்        கி. மு. 41 - 14 கி. பி. 1878
     ஆண்டோனியா   கி. மு. 8 1806
     டைபீரியஸ்       கி. பி. 14 -37 1806 - 1878
     கிளாடியஸ்       கி. பி. 41 - 54 1806
     கான்ஸ்டான்டினஸ் கி. பி. 323 - 337 ...

மேலும், தாலமி என்ற கிரேக்க ஆசிரியர் தமதுநூலில் ‘கேரபோத்
ரோஸ்' என்ற இராச்சியத்திற்கு ‘கரௌரா' என்ற ஊர் தலைமை நகர் என்று
கூறியிருக்கின்றார். இம்மொழிகளைச் ‘சேரபதி', ‘கரூர்' என்று சிலர் பொருள்
கொள்ளுகின்றனர். இதைக்கொண்டு சில ஆராய்ச்சியாளர்கள் கேரள அல்லது
சேர நாட்டிற்கு இக்கருவூர் தலைமை நகராக இருந்தது
எனஎழுதியிருக்கின்றார்கள். சேர நாட்டுத் தலைநகர் இக்கருவூரோ அல்லது
மலையாளநாட்டுக் கொடுங்கோளூரோ என்பது இன்னமும் வாதத்திற்குட்பட்ட
ஒரு செய்தியென்பர். இவ்வூர்த் தலபுராணத்தில் இதனை வஞ்சுளாரணியம்
என்று குறித்திருப்பதும், புகலூருக்கடுத்த ஆறு நாட்டார் மலையில்
ஒருபழைய எழுத்தில் காணும் கல்வெட்டில் வஞ்சி என்ற மொழி இருத்தலும்
இங்கே கவனிக்கத் தக்கவையாமெனவுங் கூறுவர்.

இனி, இவ்வூர் ஆலயத்தில் இருந்த கல்வெட்டுக்களில் (ஆலயம்
புதுப்பித்த போது அவை அழிக்கப்பட்டன) வஞ்சி என்ற பெயர்
காணவில்லை. பழைய கல்வெட்டுக்களெல்லாம் சோழர்களுடையவையே.
சேரர் கல்வெட்டு ஒன்றும் இல்லை. இராஜேந்திரதேவன் (1052 - 1062),
வீரராஜேந்திரன் (1064 ...1070), விக்கிரமசோழன் (1118 - 1135), குலோத்துங்கன்
III (1178 - 1216) முதலியவர்களுடைய கல்வெட்டுக்கள் இருந்தன. கொங்கு
நாட்டில் மற்ற இடங்களில் இருப்பதைப்போல் கொங்கு சோழர்களுடைய
கல்வெட்டுக்களும் இங்கு இல்லை. ஆகவே கொங்கு நாட்டின் மற்றப்
பகுதிகள் சோழர்களுடைய ஆட்சியில் இருந்தபோது கருவூர்ப் பிரதேசம்,
தஞ்சை, உறையூர்ச் சோழர்களின் நேர்முக ஆட்சியிலே இருந்தது
எனல்வேண்டும். அக்காரணத்தினால்தான் புகழ்ச் சோழநாயனாரும் திறை
வாங்குவதற்காகத் தம் தலைநகரான உறையூரிலிருந்து கருவூருக்கு நேரில்
வந்து இருந்தார் போலும்!

நாடு :- கொங்கு நாடு. ஆனால் அதற்கு இராஜேந்திரன் காலத்தில்
அதிராசராச மண்டலம் என்றும், விக்கிரமன் காலத்தில் வீரசோழ மண்டலம்
என்றும், குலோத்துங்கன் III காலத்தில் சோழ கேரள மண்டலம் என்றும்
பெயர் கொடுக்கப்பட்டிருந்தது என்று அவர்களது கல்வெட்டுக்களால்
அறிகிறோம்.

உள்நாடுகள் :- கருவூர் இருக்கும் நாட்டிற்கு வெங்கால நாடு என்று
பெயர். இது கொங்கு மண்டலத்து 24 நாடுகளில் ஒன்று என்று கொங்கு
மண்டல சதகம் கூறும். இந்நாட்டில் கணவதி நல்லூர், நெல்வாய்ப்பள்ளி, பாக்கூர், புன்னம்
ஆந்தனூர் முதலிய ஊர்கள் உண்டு. தட்டையூர் நாடு என்ற மற்றொரு
நாடும் உண்டு. அதில் மன்னரை, கேரளபள்ளி, தேவனபள்ளி முதலிய
ஊர்கள் உண்டு. இவ்வூர்களைக் கருவூர் ஆலயத்திற்குத் தேவதானமாகக்
கொடுத்திருந்தார்கள் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

ஊர் :- கருவூர். இதற்குக் குலோத்துங்கன் III காலத்தில் முடிவழங்கு
சோழபுரம் என்ற பேர் இருந்தது.

கோயில் :- ஆனிலை என்பது. சுவாமிக்கு கருவூர்த் திருவாநிலை
மகாதேவர் என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எந்தக் கல்வெட்டிலும்
பசுபதீசுவரர் என்று கூறப்படவில்லை. ஆகவே இவ்வடமொழிப் பெயர்
தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பே ஆகும். சுவாமியின் கர்ப்பக்கிருகம்,
அம்மன் கர்ப்பக் கிருகம், மொட்டைக் கோபுரம் இவைகளில் பழங்காலக்
கல்வெட்டுக்கள் இருந்தபடியால் அப்பாகங்கள் மிகப் பழையவை எனப்படும்.
இக்கல்வெட்டுக்களில் கண்ட இராஜேந்திரன் வீரராஜேந்திரன் இவர்களுடைய
மெய்க்கீர்த்திகள் சோழ சரித்திரத்திற்குச் சிறந்த ஆதரவுகளாக இருக்கின்றன.
இக்கல்வெட்டுக்களில் இறை, வரிசிற்றாயம், எலவை, உகவை, மன்றுபாடு,
தெண்டம், குற்றம், எறச்சோறு, கூற்றரிசி முதலிய வரித்திட்டங்களைப்பற்றி
அறியலாம். மேலும் சாசனங்கள் எழுதும் போது நிலத்தின் விவரத்தில்
"உடும்போடி, ஆமைதவழ், புற்று எழுந்த இடம், சுற்றுப்புல், பேரக முற்றூட்டு,
மேனோக்கிய மரம், கீணோக்கிய கிணறு" முதலிய வாசகம் கண்டு
எழுதுவதுண்டு என்பதை இக்கல்வெட்டுக்களால் அறியலாம்.
இச்சொற்றொடர்களினின்றும் முன்னாளில் வழங்கிய தமிழின் சுவையும்
காணப்படும். மேலும் ஒரு கல்வெட்டு, கண்மாளர்களுக்குச் சில
உரிமைகளைக் கோனேரின்மைகொண்டான் (வீரசோழன்) கொடுத்ததாகக்
கூறுகிறது. அவ்வுரிமைகள் அதுவரை அவர்களுக்கு இல்லைபோலும்! அவை:
நன்மை தின்மைகளில் இரட்டைச்சங்கு ஊதுதல், வீட்டிற்குச் சாந்து பூசுதல்,
புறப்படும்போது பாதரக்ஷை அணிதல் முதலியன'. மேலும் மற்றொரு
கல்வெட்டில் தேவகன்மிகளுக்கு (கோயில் சிப்பந்திகள்)வீட்டிற்கு
இரட்டைமாடி கட்டுதல், இரட்டைக் கதவு வைத்தல், பூவினால் அலங்கரித்தல்
முதலிய உரிமைகள் கொடுக்கப்பட்டனவாம்!.

மேலும் கி. பி. 1618-ல் எழுதப்பட்ட கருவூர்ப்புராணத்தில் எறிபத்தர்
சருக்கம், புகழ்ச்சோழர் சருக்கம் இரண்டும் இருத்தல் காண்க.
இச்சரித்திரங்கள் பெரியபுராணத்தை ஏறக்குறைய ஒட்டியே பாடப்பட்டிருக்கின்றன.

(இதன் விரிவைச் "செந்தமிழ்ச் செல்வி" 12-ம் சிலம்பில் காண்க.)

2. ஏனாதி நாயனார்

திருப்பதி - எயினனூர் :- சோழநாட்டில் அரிசிலாற்றங்கரையில்
உள்ள ஓர் ஊர். எயில் என்றால் மதில் அல்லது அரண்; எயினன் மதில்
கொண்ட அரணுக்கு அதிபன்; அவனூர் எயினனூர் ஆகும். பண்டைத்
தமிழில் எயினர் என்பது பாலை நிலத்து மக்களின் பெயர். அவர்களுடைய
பெண்மக்களின் பெயர் எயிற்றியர். பாலைக்கு எயில் அவசியம் அல்லவா?
ஆனால் இந்த எயினனூர் பாலை நிலத்தில் இல்லை; மருத நிலத்தில்
உள்ளது. மருத நிலத்தில் இருக்கலாம் என்பதற்குக் காஞ்சியைச் சுற்றியுள்ள
நாட்டிற்கு எயில் நாடு எனப் பெயர் இருத்தலாற் கண்டு கொள்க.

ஏனாதி என்ற மொழி பண்டைத் தமிழ் மன்னர் அளித்து வந்த ஒரு
சிறந்த பட்டத்தின் பெயர். அதற்கு அறிகுறியாக ஒரு மோதிரமும்
அளிப்பார்கள். அதற்கு ஏனாதி மோதிரம் என்று பெயர். இதனைப்
பண்டைய தமிழ் நூல்களில் விவரமாகக் கண்டு கொள்க. இப்பட்டத்தைப்
பற்றிக் கல்வெட்டு ஆதாரமும் உண்டு. சென்னைக்கடுத்த திருவொற்றியூரில்
அம்மன் சந்நிதிக் கடுத்த ஒரு கல்தூணில் 237/1912 என்ற இலக்கமிட்ட
கல்வெட்டில் பெருமாள் சுந்தரபாண்டிய
தேவனின் நிமித்தம் ஏனாதி மேற்குடையான் பெரிய நாயன் என்ற
பொத்தப்பிராயன் என்பவன் "எல்லாந் தலையான பெருமாள் திருவாசல்"
என்ற வாசலைக் கட்டினதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இச்சுந்தர
பாண்டியன் 1251 - 1264 கி. பி.யில் இருந்தவன். ஆகவே அக்காலத்தில்
ஏனாதிபட்டம் தரித்த ஒரு பொத்தப்பிராயன் (கண்ணப்பர் சரிதம் காண்க.)
இருந்திருக்க வேண்டும். அவன் திருவொற்றியூரில் அம்பாள் சந்நிதியில்
திருப்பணி செய்தவன். நாயனார் புகழ் அக்காலத்தில் பரவி யிருந்தது.

3. கண்ணப்ப நாயனார்

             1. நாடு : - பொத்தப்பி நாடு

கண்ணப்ப நாயனார் அவதரித்த நாட்டின் பெயர் பொத்தப்பி நாடு
என்று சேக்கிழார் பெருமான் குறித்திருக்கின்றார். இப்பெயர் அதன்
தலைநகரா யிருந்த பொத்தப்பி என்ற ஊரினால் வந்தது எனலாம். பொத்தப்பி
என்ற ஊர் தற்காலத்திய கடப்பை ஜில்லாவில் புல்லம்பேட்டை
தாலூக்காவில் உள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூர் வடபெண்ணை நதியின்
(உத்தரபிநாகிநி) உபநதியாகிய செய்யாற்றின் (தெலுங்கில் செய்யேறு) மேல்
கரையில் இருக்கின்றது. இவ்வூருக்கு அருகில் செய்யாறு தெற்கே இருந்து
வடக்கே ஓடிச் சித்தவட்டம் தாலூக்காவில் வட பெண்ணையுடன் கலக்கிறது.
பொத்தப்பியில் ஜனத்தொகை 1875-ல் 2188-ம், 1915-ல், 1453-ம், ஆக
இருந்தது. இவ்வூர் அரக்கோணம் - குண்டக்கல் இருப்புப்பாதையில்
இராசம்பேட்டை என்ற நிலையத்திலிருந்து வடக்கே 15 கல்லில்
இருக்கின்றது. வசிப்பதற்கு இனிமையான ஊர். பண்டைய நாட் சரிதப்
பெருமை கொண்டது. இது சுமார். கி. பி. 1000 முதல் கொண்டு இந்நாட்டு
அரசரின் தலைநகராக இருந்து வந்தது. இதனை 7 நூற்றாண்டுகள் வரை
பற்பல அரச மரபினர்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தார்கள். முதன்
முதலில் இவ்வூரை இராசதானியாகக் கொண்ட அரசவம்சம் தெலுங்கு சோடர்
என்ற சோழவம்சக் கிளையினர். இவ்வூரில் இரண்டு பண்டைய ஆலயங்கள்
உண்டு. ஒன்று மூலத்தானேசுரம் என்ற சிவாலயம். அது கி. பி. 1193-ல்
தெலுங்கு சோழரால் புதுப்பிக்கப்பட்டது. மற்றொன்று கோபாலசுவாமி கோயில்
என்ற பெருமாள் கோயில். அது கி. பி. 1459-ல் மாட்ல அரசன்
அனந்தராமராஜு என்பவனால் தாபிக்கப்பெற்றது. அவ்வரசனே "காகுஸ்த
விஜயம்" என்ற தெலுங்கு நூலைப்பாடியவன். அவ்வூரிலிருந்த பண்டைக்
காலத்துக் கோட்டை அழிந்து கிடக்கின்றது. சகம் 1001ல் இராமசோடராஜனும்,
1180-ல் மனுமசித்தனும் ஆண்டார்கள். மனுமசித்தன் தெலுங்கு மகாகவி
திக்கனசோமயாஜியை ஆதரித்தவன். குலோத்துங்கசோழன் III-ன் கீழ் குறுநில
மன்னனாக இந்நாட்டை ஆண்டவன் மதுராந்தகப் பொத்தப்பிச்சோழ சித்தி
அரயன். பிறகு விஜய நகரத்தாரும் பின்னர் மாட்ல அரசர்களும் ஆண்டு
வந்தனர். சகம் 1800-ல் மாட்ல மன்னன் குமார காந்தராஜன் ஆலயத்தின்
ஒரு பகுதியைப் புதுப்பித்தான்.

நாட்டின் பரப்பு :- அடியில் கண்ட ஊர்கள் அவைகளிலுள்ள
ஆலயக் கல்வெட்டுக்களைக் கொண்டு பொத்தப்பி நாட்டைச் சார்ந்தவை
என அறிகிறோம். 1. அத்திராலா என்ற பரசுராமீசுவரர் ஆலயம், 2.
குண்டலூரு :- அகத்தீசுவரர் ஆலயம். 3. கொத்தமல்லி :- பொத்தப்பி
நாட்டுக் கொத்தமல்லி. 4. நந்தலூரு :- மேற்பாக்கை நாட்டு நிரந்தனூர்
(பழைய பெயர்) 5. தங்கடூர் :-சித்தேசுவரர் ஆலயம்.

இவைகளைத் தவிர சித்தவட்டம், நெல்லூர் முதலியகைவளிலுள்ள
ஆலயங்களிலும் பொத்தப்பி நாடு குறிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய
விவரங்களிலிருந்து பொத்தப்பிநாடு தற்காலப் புல்லம்பேட்டை தாலூக்கா
முழுவதையுமே அடக்கிக்கொண்டிருந்தது என்று கூறலாம். தஞ்சைச்
சோழமன்னர்கள் காலத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த தெலுங்குநாடு
அதிராஜேந்திர மண்டலம் என்ற பெயரால் வழங்கிற்று. அதன் கிளைநாடு
ஒன்றிற்குப் பாக்கைநாடு என்று பெயர். அது
தற்காலக் கடப்பை, நெல்லூர் ஜில்லாக்களைக்கொண்டிருந்தது. கடப்பைப்
பாகம் மேற்குப் பாக்கை நாடென்றும், நெல்லூர்ப்பாகம் கீழ்ப்பாக்கை
நாடென்றும் வழங்கி வந்தது. மேற்பாக்கை நாட்டின் ஒரு பிரிவிற்கு
பொத்தப்பிநாடு என்ற பெயரும் இருந்தது. இந்நாடு காளத்தி நாட்டிற்கு
அடுத்தது என்பதைக் கவனிக்க.

அரசபரம்பரை : - முன்னமே கூறியபடி சுமார் கி.பி. 1000-ல்
தெலுங்கு சோழர்கள் பொத்தப்பி நாட்டை ஆண்டு வந்தனர். அதுவேயன்றிப்
பாக்கை நாடு முழுவதுமே அவர்கள் வசப்பட்டிருந்தது. சோழர் என்ற
தமிழ்ப்பதம் சோடர் என்று தெலுங்கில் வழங்கிவந்தது. இவர்கள் தஞ்சைச்
சோழர்களின் கிளையினராக இருந்து தெலுங்குநாட்டு இராஜப்பிரதிநிதிகளாய்ச்
சென்றிருக்கவேண்டும். பின்னர் அவர்களே வம்ச பரம்பரையாக ஆள
ஆரம்பித்தனர். முதல் முதலில்தாசவர்மன் பாகராஷ்டிரத்தைக்
கைப்பற்றிக்கொண்டு பொத்தப்பியைத் தலைநகராக்கிக் கொண்டு
ஆண்டுவந்தான். அவனுடைய சந்ததியார் மதுராந்தகப்பொத்தப்பிச் சோழர்
என்ற பட்டம் வைத்துக் கொண்டனர். இவ்வம்சத்தார் தஞ்சைச் சோழர்களான
குலோத்துங்கன் 1. விக்கிரமன், குலோத்துங்கன் 2, இராஜ ராஜன் 3 இவர்கள்
காலங்களில் (11, 12, 13 நூற்றாண்டுகள்) குறுநில மன்னர்களாக
விளங்கினார்கள். சோழ அரசர்கள் பெருமை குறையவே பொத்தப்பிச்
சோழர்கள் மேன்மை பெற்றனர். அவர்களில் திக்கன் பொத்தப்பிச் சோழன்
பிரக்கியாதி அடைந்தான். அவன்மகன் மனுமசித்தி கலாவினோதனாகித்
திக்கன சோமயாஜியை ஆந்திரபாரதம் எழுதச் செய்தனன். பின்னால் இந்நாடு
வாரங்கல் வசமாகி, இவ்வூர் கி.பி. 1350-ல் முகமதியர்களால் பிடிக்கப்பட்டு
அவர்கள் வசமாயிற்று. பின்னர் விஜயநகரத்தார் ஆளுகைக்கு உட்பட்டது.
அவர்கள் ஆட்சியில் மாட்ல மன்னர்கள் இந்நாட்டின் குறுநில
மன்னர்களானார்கள். பொத்தப்பிச் சோழர்கள் காலத்தில் காளத்தி, திருப்பதி
முதலிய பிரதேசங்களை யாதவராயர்கள் ஆண்டுவந்தனர்.
இவ்விருவம்சங்களுக்கும் விவாக சம்பந்தம் உண்டு.

நிலப்பான்மை :- இந்நாடு ஒரு செழிப்பான பள்ளத்தாக்கில்
அமர்ந்திருக்கிறது. இப்பள்ளத்தாக்கின் வழியாகத்தான் தற்காலத்தில்
அரக்கோணம் - கடப்பை இருப்புப் பாதை ஓடுகிறது. இதன் மேற்கில்
சேஷாசலம் மலைத்தொடரும் கிழக்கில் பல சிறு மலைத்தொடர்களும்
இருக்கின்றன. செய்யாற்றுப் பாய்ச்சல் இந்நாட்டைச் செழிப்பாக்குகிறது.
மலைத்தொடர்களும் அடுத்தே இருப்பதால் காடுகள் அடர்ந்திருக்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பிரதேசத்தில் காடுகள் அடர்ந்து இருந்தன.
அவைகளில் வேடர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். அருகிலுள்ள
காடுகளில் மிருகங்களை வேட்டையாடிப் பிழைப்பது அவர்கள் தொழில்.
இப்போதும் அவ்வேடர்களின் வம்சத்தினர் இந்நாடுகளில் ஏராளமாக
வசிக்கிறார்கள். வேடர் - என்ற தமிழ்ப்பதம். பேடர் - என்று
கன்னடத்திலும், போய - என்று தெலுங்கிலும் வழங்கி வருகிறது. வேடர்
குலத் தலைவர்கள் அந்நாட்டு மலைக்கோட்டைகளுக்குத் தலைவர்களாக
இருந்துவந்தார்கள். அவர்களைத் தமிழ் நாட்டுப் பண்டைய நாள் வேளிர்கள்
போன்றவர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய வீரச் செயல்களைப்
பற்றிப் பல சரிதங்கள் உண்டு. இக்குலத்தில் அவதரித்தவர் கண்ணப்ப
நாயனார். இக்காலத்திலும் அந்நாயனாரை வேடர்கள் உச்சியின்
மேற்கொண்டு பூசித்து வருகின்றனர். மைசூர் நாடடு ஹிரியூரில் வேடர்
குலத்தார்கள் கண்ணப்ப நாயனார் திருமடம் கட்டிக் கொண்டாடி
வருகிறார்கள். ஆகவே, கன்னடநாட்டிலும் நாயனார் பெருமை
பரவியிருக்கிறது அல்லவா?

மக்கள் :- முன் காலத்தில் அந்நாட்டு மக்களிற் சிறந்தவர்கள்
வேடர்கள் என்று சொன்னோம். அவர்களுடைய பழக்க வழக்கங்கள்
குறிஞ்சி நிலத்திற்கு ஏற்றனவாக இருந்தன. வேடர்கள் இக்காலத்திலும்
தங்கள் பண்டைப் பழக்க வழக்கங்களை விடாமல் போற்றி வருகிறார்கள்.
தமிழ்ச் சில்லாக்களில் தெற்கே
செல்லச் செல்ல அவர்களுடைய நாகரீகம் மிகத்தாழ்ந்து நிற்கிறது.
மலையாளத்தில் வேடர்கள் இப்போதும் அனாகரீகாக இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அந்த வகுப்பிற்கு இணையாக இருக்கும்
வேட்டுவர்கள் நாகரீகத்தில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அம்பலக்காரர்
என்ற மற்றொரு வகையாரும் முன்னேற்றம் அடைந்தவர்களே.
அம்பலக்காரர்களும் வேடர்களும் கண்ணப்ப நாயனாருடைய வம்சத்தினர்கள்
என்று தங்களைப் பெருமைப்படுத்திப் பேசிக் கொள்கிறார்கள். தெலுங்கு
போயர்களோ தாங்கள் வால்மீகி ரிஷியினுடைய சந்ததிகள் என்று
சொல்லிக்கொள்ளுகிறார்கள். முன் காலத்தில் பொத்தப்பிநாட்டு மக்கள்
தமிழ்மொழி பேசினவர்களாக இருக்க வேண்டும். வேடர்கள்
தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு இப்பால் ஏற்பட்ட கல்வெட்டுக்களிலே
பெரும்பாலும் தமிழ் மொழி வழங்கப்பட்டிருக்கும்போது 2000 ஆண்டுகளுக்கு
முந்திக் கண்டிப்பாகத் தமிழ் மொழியையே அந்நாட்டார் வழங்கி இருக்க
வேண்டும் அல்லவா? ஊர்ப்பெயர்கள் மக்கள் பெயர்கள் எல்லாம் தமிழ்
மயமாகவே இருக்கின்றன. மேலும் ஆறுகளின் பெயர்களும், மலைகளின்
பெயர்களும் தமிழ் மொழிகளே. பெண்ணையாறு செய்யாறு (சேயாறு)
இவைகளைக் காண்க. சேய் + ஆறு = சேயாறு - முருகக் கடவுள் ஆறு
எனப்பொருள்படும். முருகக்கடவுள் வேடர்களின் குலதெய்வம் அல்லவா?
பொத்தப்பிச் சிவரலயத்தின் சுவாமியின் பெயர் மூலத்தானேசுவரர் என்றால்
அதுவும் தமிழ் மயமன்றோ?

               2. நாயனாரின் ஊர்

கண்ணப்ப நாயனாருடைய குடும்பத்தார் வசித்த ஊர் உடுப்பூர் -
என்று பெரிய புராணம் கூறுகிறது. பொத்தப்பிநாட்டு ஊர்களின் பெயர்களில்
உடுப்பூர் என்ற பெயர். இப்போது கிடைக்கவில்லை. ஆனால் உடுக்கூர் -
என்ற பெயர் ஒன்று அங்கே காண்கிறோம். இது இராசம்பேட்டைக்கு
அருகில் உள்ளது. உடுப்பூர் என்ற பெயரே உடுக்கூர் என்று திரிந்தது
போலும். இவ்வூர்க்கு மேல் புறத்தில் மலைகளும் காடுகளும்
அடர்ந்திருந்தபடியால் அவர்கள் தலைவனான நாகன் அங்கே வேட்டையாடி
வசித்து வந்திருத்தல் வேண்டும். அந்நாடு அக்காலத்தில் தமிழ்நாடாக
இருந்ததினால் வேடர் மக்கள் நாகன், தத்தை, காடன், காணன், திண்ணன்
என்ற தமிழ்ப் பெயர்களையே இட்டு வந்திருக்கலாம். திண்ணனார்
வேட்டையாடிக் காதங்கள் பல சென்று பொன்முலியாற்றை (சுவர்ணமுகி)
அடைந்ததினால் அவ்விரண்டு இடங்களுக்கும் நடுவில் 40 கல் தூரம்
இருந்திருக்க வேண்டும். இப்போதும் பொத்தப்பிநாட்டு உடுக்கூருக்கும்
சீகாளத்திக்கும் 40 கல் தூரம்தான் இருக்கிறது.

               3. பொன்முகலியாறு

இதனைச் சுவர்ணமுகி என்று வடமொழியிலும் தெலுங்கிலும்
வழங்குவார்கள். கல்வெட்டில் வடமொழியில் கனகமுகரி என்று
கண்டிருக்கிறது. இந்த ஆறு சிற்றூர்ச் சில்லாவில் திருமலையின் மேற்குச்
சரிவில் உற்பத்தியாகிச் சந்திரகிரிக்கு அருகில் ஓடித் திருப்பதிப்
பள்ளத்தாக்கின் வழியாகக் கிழக்கே ஓடிப்பிறகு வடகிழக்கே திரும்பிச்
சீகாளத்திக்கு அருகில் பாய்ந்து, பிறகு வடகிழக்காக ஓடி துகராச
பட்டினத்தருகில் கடலில் பாய்கிறது. இதன் நீளம் ஏறக்குறைய 50, 60 கல்
இருக்கலாம். இது கண்ணப்பநாயனார் சரிதத்தினாலும் தேவாரப்
பதிகத்தினாலும் சிறப்புப்பெற்றது. "சந்தமா ரகிலொடு" என்ற சம்பந்தர்
பதிகத்தில் இந்நதியின் சந்தனம், அகில், சாதி, தேக்கு முதலிய மரங்கள்
உந்திக்கொண்டு வெள்ளம் செல்லும்காட்சி எடுத்தாளப்பட்டுள்ளது.
காளத்திக்கருகில் இந்நதி உத்தரவாகினியாக ஓடும் பெருமைகொண்டது.
கங்கை நதியே இந்த ஆறாக வந்ததாகச் சீகாளத்திப் புராணம் கூறும்.
அப்புராணமே கல்வெட்டிற் கண்ட மணி
கங்கை என்ற பெயருக்குக் காரணமாக இருக்கலாம். அதன் கரையில்
உள்ள ஆலயத்திறைவற்கு மணிகங்கேசுவரர் என்று பெயர் உண்டு.
அவ்வாற்றின் கிழக்கில் சிறு குன்றுகளின் அருகில் உள்ளது காளத்தி நகரம்.

                 4. சீகாளத்தி

இவ்வூர் இரண்டு குன்றுகளுக்கு இடையில் அழகாக அமைந்திருக்கிறது.
வடக்கே உள்ள குன்றின்மீது துர்க்கையின் ஆலயமிருக்கின்றது. தெற்கே
உள்ள குனறின்மீது கண்ணப்பேசுவரர் ஆலயம் உள்ளது.
கண்ணப்பதேவரால் பூசிக்கப் பெற்றமையால் அப்பெயர் ஏற்பட்டது.
கண்ணப்பர் உருவம் ஒரு சிறு ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணப்பர் மலைக்கு மேல்புறமாகக் காளத்ததீசுவரருடைய பெரிய ஆலயம்
உள்ளது. காளத்ததீசுவரர் வாயுலிங்கம் என்பது யாவரும் அறிந்த செய்தி.
ஆலயத்திற்கு வடகிழக்கில் இரண்டு பெரிய கோபுரங்களும் ஒரு பெரிய
இரதமும் இருக்கின்றன. ஆலயத்திற்குத் தென்புறத்தில் காசி விசுவநாதர்,
மணிகண்டேசுவரர் (மணிகங்கேசர் என்பது கல்வெட்டு) ஆலயங்கள்
இருக்கின்றன. மணிகண்டேசர் ஆலயத்துச் சுவரில் பல கல்வெட்டுக்கள்
இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் (202/92) சுண்ணப்பதேவர் சரிதம்
வரையப்பட்டிருக்கிறது. கண்ணப்பர்மலையின் ஒரு சரிவில் பிரமனுடைய
ஆலயம் இருக்கின்றது. பிரமதேவர் ஆலயத்தின் வடபுறத்தில் சிவ
வடிவங்களைப் பாறையில் செதுக்கியிருக்கிறார்கள். அதற்குத் தெற்கில்
அகத்தீசர் ஆலயமும் மலைக்கு எதிர்புறத்தில் பாரத்துவாச தீர்த்தம் என்ற
கிலமாகிய குளமும் உண்டு. ஊர் நடுவில் வரதராஜர் கோயிலும் காளத்திச்
சமீன்தாரன் அரண்மனையும் இருக்கின்றன. கல்வெட்டுக்களின்படி
காளத்திக்கு மும்முடிச்சோழபுரம், கண்ணப்பபுரம் என்ற பெயர்கள் இருந்தன.

                5. காளத்தீசர் ஆலயம்

இது பெரிய ஆலயம். இதனைச் சில ஆண்டுகளுக்கு முன்
தேவகோட்டை நகரத்துச் செட்டி மக்களில் திரு. இராமநாதன் செட்டியார்
குடும்பத்தார் புதுப்பித்தார்கள். அவர்கள் சீரணோத்தாரணம் செய்வதற்கு
முன்னும் பின்னும் பல கல்வெட்டுக்களை அதிகாரிகள் பிரதி எடுத்து
வைத்திருக்கிறார்கள். அக் கல்வெட்டுக்களிலிருந்து பல அருமையான
செய்திகளை நாம் அறியலாம்.

கல்வெட்டுக்களைப் பதித்த அரசவம்சத்தினர்கள் :-
(1) சோழர்கள் - இராஜராஜன் (958 - 1012)முதடல் இராஜராஜன்lll
(13 நூ. வரை). (2) வாரங்கல்காகாதியர் - 12, 13 நூ- அரசன் - கணபதி, (3)
தெலுங்கு சோழர்கள் (1000 - 1250) மதுராந்தகப் பொத்தப்பிச் சோழர்கள்.

(4) யாதவராயர்கள் - 12, 13 நூ, (சீகாளத்திப் புராணப்படி யாதவராயர்
காளத்தி ஆலயங்களைக் கட்டினார்) (5) கண்ட கோபாலர் (1250-83) (6)
விஜயநகரத்தரசர்கள் ஹரிஹர (சகம் 1325) முதல் சதாசிவராயர் (1491) சகம்
வரை.

  6. திருக்காளத்தியில் உள்ள கல்வெட்டுக்களில் காணும்
                 குறிப்பிடத்தக்க முக்கிய செய்திகள்

(1) இராஜராஜன்! காலத்தில் (கி. பி. 958) காளத்திக்கு மும்முடிச்
சோழபுரம் என்றுபெயர் கொடுக்கப்பட்டு, அப்பெயர் 16-ம் நூற்றாண்டுவரை
வழக்கத்தில் இருந்தது. 86/1922 கல்வெட்டுப்படி ராஜேந்திர சோழ
மண்டலத்துத் திருவேங்கட கோட்டத்து ஆற்றூர்நாட்டுத்
திருக்காளத்தியான மும்முடிச் சோழபுரம் என்று இவ்வூர்ப் பெயரைக்
காண்கின்றோம். (2) காளத்தீசர் ஆலயத்தில் உள்ள மணிகண்டேசர்
ஆலயமும், மண்டபமும், படிகளும் வீரராஜேந்திரன்ll-ல்ஆண்டில்
கட்டப்பட்டதாக 197/1903 கல்வெட்டுக் கூறுகிறது. ஈசன் பெயர் மணி
கங்கையுடைய நாயனார் என்று காண்கிறோம். (கி. பி. 1189 என்று
ஊகிக்கப்படுகிறது). இவ்வாலயம் முந்தியே இருந்ததை அவ்வரசன்
புதுப்பித்திருக்கவேண்டும். ஏனெனில் மற்றொரு பழைய கல்வெட்டினால்
அது இராஜராஜன்l காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. (958 கி. பி.) (3)
குலோத்துங்க அரசனுடைய 32 ஆண்டிலே தியாகசமுத்திரப் பேட்டை
வீமரசன் என்ற தலைவன் ஆலாலசுந்தர நந்தவனத்தைப் பாதுகாப்பதற்காக
இரண்டு ஆட்களை நியமிப்பதற்கு 800 குழி நிலத்தைத் தானம் செய்தான்.
ஆகவே சுந்தரமூர்த்திகள் பெயராலே இவ்வூரில் ஒரு நந்த்வனம்
இருந்ததென அறிகிறோம். (4) பொத்தப்பிச் சோழர்களுடைய கல்வெட்டுக்கள்
இவ்வாலயத்தில் இருக்கின்றன. அவர்களுடைய ஆதீனத்தில் இவ்வாலயம்
இருந்திருக்கவேண்டும். (11, 12, 13 நூற்றாண்டுகள் விக்கிரமன், இராஜராஜன்
காலங்கள்.) பொத்தப்பிநாடும் 133/22-ல் குறிக்கப்பட்டிருக்கிறது. (5)
விஜயநகரத்து அரசன் கிருஷ்ணதேவராயர் உதயகிரி, அட்டகங்கி, வினு
கொண்ட, பெல்லம்கொண்ட, கொண்டவீடு முதலிய இராச்சியங்களைக்
கைப்பற்றி, ஒரிசா நாட்டுப் பிரதாப ருத்திரன் மகன் வீரபத்திரனையும், குமார
ஹம்மீர பாத்ரன் மகன் நரஹரிதேவனையும் ராயசூர் மல்லாகானையும்
சிறைசெய்தும், மன்னித்துவிட்டும், வெற்றி வீரனாகக் (சகம 1438-ல்) காளத்தி
விஜயம்செய்து, காளத்தீசனை வணங்கி, அங்கு நூற்றுக்கால் மண்டபத்தையும்
பெரிய கோபுரத்தையும் கட்டினார் என்று 196/1903 கல்வெட்டுக் கூறுகிறது.
கி. பி. 1516. (6) கிருஷ்ணதேவராயர் (1435. சகம் = 1513 கி. பி. 151/24)
காளத்தி நாதருக்கு அபரிமிதமான இரத்தினங்களும் பிரபாவலி,
ஆபரணங்கள் முதலியவைகளையும் தந்திருக்கிறார். அச்செய்தி பல
கல்வெட்டுக்களில் விவரமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. (161, 165, 185) (7)
விஜயநகரத்து அச்சுதராயன் 1454-ல் (கி. பி. 1532)(157/24) காளத்திநாதர்
ஆலயத்தில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு பலகிராமங்களைத் தானம்
செய்தான். (8) அவ்வச்சுதராயன் அரசி வரதாம்பிகையும்,
மகன்சிக்கவெங்கிடாத்திரியும் காஞ்சியில் முத்துத்துலாபாரம் செய்ததாக 2455
கல்வெட்டுக் கூறுகிறது. (178/24) (9) காளத்திக்கு அருகிலுள்ள ஒருமலைக்குக்
கயிலை மலை என்றும் (177/1922 -சகம் 1458) "Kailasagri Forest" - Govt.
Records (Rev.) மற்றொரு மலைக்கு ரிஷபக்குன்று (இடபக்குன்று) என்றும்
(184/22 சகம் 1443) பழைய பெயர்கள் வழங்கி இருந்தன. இடபக்குன்றில்
இளையநாயனார் ஆலயம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது.
சகம் 1443 (1521 கி. பி.) (10)) சகம் 1462-ல் (கி. பி. 1540) இராமாபட்டரையின்
கல்லாலடியில் அறுபத்துமூவர் மண்டபத்தில் வீரேசுரத்தம்பிரானார்
பிரதிமை தாபித்துக் கோயில் எழுப்பினதாகக் கண்டிருக்கிறது. (11)
ஆலயத்திற்குள் கண்ணப்ப தேவருக்குத் தனி ஆலயம் உண்டு. அதில் 8
கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் கிருஷ்ணதேவன் அச்சுதராயன்
இவர்கள் காலத்தியவை. ஆகவே அவ்வாலயம் விஜயநகரத்தார் காலத்தில்
தான் ஏற்பட்டிருக்கவேண்டும். 1449முதல் 1467 வரை (12) மேலும்
ஆலயத்தில் கண்ணப்பதேவர் வெண்கலப்பிரதிமை ஒன்றும் அவரது சிற்பம்
ஒன்றும் இருக்கின்றன. (723-D of 1921, 22 & 726-d of 1921,22).
(723) -D of) 1921, 22 726 - D of 1921, 22).வெண்கலப் பிரதிமையின்
உருவம் சர்க்கார் அறிக்கை 1921 - 22பக்கம் 3-ல் காண்க.

                7. கண்ணப்ப நாயனார்

இவரது பெயர் காணும் கல்வெட்டுக்கள் சிலவே கிடைத்திருக்கின்றன.
இராஜாதிராஜச் சோழன் 5-ம் ஆண்டில் 1திருக்கண்ணப்பதேவர் பெயராலே


1. திருக்கண்ணப்பதேவர் என்றபெயரால் இந்நாயனார் வழங்கப்பட்டனர் என்பது இவரது சரித்திரங்கூறும் பதினோராந் திருமுறையிலுள்ள திருமறங்களிரண்டும் இப்பெயராலே அமைந்திருப்பதனாலும் அறியப்படும்.
கமுகுத்தோப்பு ஒன்று வைப்பதற்காகப் பூதானம் செய்யப்பட்டது. (125/22)
என்று காளத்திக் கல்வெட்டொன்று கூறுகிறது. திருப்பதிக்கடுத்த
யோகிமல்லாபுரத்தில் உள்ள பரசுராமீசர் ஆலயத்தில் ஒரு கல்வெட்டில்
திருக்கண்ணப்ப தேவர் காவணம் என்ற பெயர் குறித்து, அதன்
மாகேசுவரர்க்குப் பூதானம் செய்ததும், திருக்கண்ணப்ப தேவர்
ஆராதனைக்குப் பூதானம் செய்ததும் கண்டிருக்கிறது. (No. 36. திருப்பதி
தேவஸ்தானக் கல்வெட்டு-270/04)

"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு
9-வது தைம் மாசத்து ஜயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடித்
திருவேங்கடக் கோட்டத்துத் திருக்குடவூர் நாட்டுப் பிரமதேயம் திருச்சுகனூர்
பிப்பிலாதீசுரமுடைய மகா தேவர்க்கு.......சாளுக்கி வீரசிங்கதேவரான
யாதவராயற்கு திருக்கண்ணப்பதேவர் திருக்காவணத்திலே சிமகேசுவரற்கும்
தானத்தாளர்க்கும் திப்பிலாதீசுவரமுடையார் கோயில் தானத்தார் அறிவித்த
இடத்து.....சையும் திருச்சுகனூர் சபையாரையும்.......திருக்கண்ணப்பதேவர்
திருக்காவணத்
திலே........... கல்வெட்டுப்படி..... திருக்கண்ணப்ப தேவர்க்கு,
திப்பிலாதீ சுவரர்கோயில் மகேசுவரரும்....இப்படிக் கல்வெட்டித்
திருவிட்டுக்குடுத்தபடி........."

இக்கல்வெட்டின்படி முந்தி ராஜ ராஜ l-23-ம் ஆண்டில் செய்த
உபயத்தை நடத்தாமல் இருந்ததைப்பற்றி, ராஜ ராஜ lll 9-வது ஆண்டில் வீர
நரசிங்கயாதவராயன் முன்பு வழக்குத்தொடர, அவர் விசாரித்து அந்தப்
பணத்தைக் திருப்பிக் கொடுக்கும்படி கட்டளையிட்ட விவரம் கண்டிருக்கிறது.
தொகை கண்ணப்ப தேவர்க்குக் கொடுக்கப்பட்டது. மேலும் (202/83)
காளத்தியில் உள்ள வடமொழிக் கல்வெட்டு ஒன்றில் கண்ணப்பர் சரிதம்
விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது.

அவ்வடமொழிச் சுலோகங்களின் சுருக்கம்:

4. "வேடர் தலைவன் குஞ்சியிற் சூடப்பெற்ற மலர்கள் பூதபதியின்
மௌலியில் அணியப்பெற்றன. அவ்வேடனால் உதவப்பட்ட இறைச்சி
பூதகணங்களுக்கு அச்சத்தை விளைவித்தது.

5. அவன் கண்ணைப் பறித்து ஈந்தது - பக்தியில் முதிர்ந்தவர்க்கும்
வியப்பைத் தந்தது. அவனது உமிழ்நீர் சம்புவின் சுத்தியின் பொருட்டுச்
செய்யப்பட்ட அபிஷேக நீராயிற்று.

6. பிரமனது தலையும், நாகமும், சந்திரனும், வேடர்தலைவன்
கால்செருப்பும் காளத்தி நாதனுக்குப் பேரணிகளாயின.

7. அடுத்தடுத்துவரும் அலைகளுடைய கங்காநதியை ஒத்தும்
வாரணத்தால் முகக்கப்பட்டதுமான கனகமுகரி (சுவர்ண முகலி - பொன்
முகலி) யின் மூலத்து வடவிருக்ஷமே தன்யம் செய்ததென்னலாம்.

8. காளமும் (பாம்பு) அத்தியும் (யானை) ஆற்றும் நித்திய பூசனையில்
கனகமுகரியும் அதன் போக்குக்குத் தடையாய் நி்ன்ற சங்கரன் மலையும்
அணியும் ஆடையும் ஆயின.

9. ஒரு கண்ணைப்பறித்து உதவி மற்றொன்றையும் அதிவேகமாய்த்
தோண்டநினைத்தளவில் பெண்ணொரு பாகனது வளையணிந்த இடக்கை
அதற்குத் தடையாய் நின்றது.

10. எரி முகத்த அம்பு கைநின்று வழுவவும் அக்கைக்குப்
புரமெரித்தோனது மேருவைத் தனுவாகக் கொண்டதும் திரிதசர்க்கும் (தேவர்)
காணவொண்ணாபடி உயர்த்தப்பட்டதுமான கை ஆதரவாயிற்று."
(வடமொழிப் பத்ம புரா - உத், காண் - 144 சருக்கம், (சு. 20 - 98)-ல்
கண்ட சரிதம் கண்ணப்ப நாயனார் சரிதம் போன்றுள்ளது.)

மேலும் தஞ்சைசில்லா திருவலஞ்சுழிக் கபர்த்தீசர் ஆலயத்தில்
இராஜராஜர் ll-22-வது ஆண்டில் (628/02) திருநாவுக்கரசர், திருவாதவூரடிகள்,
திருக்கண்ணப்ப தேவர் பிரதிமைக்குப் பூதானம் செய்ததாகக்
கண்டிருக்கிறது (26-3-1158). புதுக்கோட்டைச் சீமை திருவரன்குளத்து
ஹரதீர்த்தேசுவரர் ஆலயத்தில் (261/1914) கண்ணப்பநாயனார் உருவத்தைச்
சகம் 1378 வைகாசி 20-ல் பிரதிட்டை செய்ததாகக் கண்டிருக்கிறது.
இன்னமும் இவ்வாறான பிற் காலத்துப் பிரதிட்டைகள் பல இருக்கின்றன.

கண்ணப்ப தேவரது பழமை :- கண்ணப்பதேவருடைய அன்பின்
பெருமையை மணிவாசகனார், சம்பந்தர் முதலிய சைவப் பெரியார்களும்
நக்கீரர் முதலிய சங்கப் புலவர்களும், அருளிச் செய்ததிலிருந்தே அவர்காலம்
மிகப் பழமையானதென்று அறியலாம். தமிழ்மொழியே யன்றி வடமொழியிலும்
அவரது கீர்த்தி பராட்டப்பெற்றிருக்கிறது. ஆதிசங்கரர் தம் சிவானந்த
லஹரியில்,

 
"மார்க்கா வர்த்தித பரதுகா பசுபதே ரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புரரிபோர் திவ்யாபிஷேகாயதே
கிஞ்சித் பட்சித மாம்ஸ சேஷ கபலம் நவ்யோப ஹாராயதே
பக்தி : கிம் நகரோதி அஹோ வனசரோ பக்தாவதம்சாயதே!

என்று சுலோகத்தினால் அவரைப் பாராட்டியிருக்கிறார். இதில் சம்பந்தரது
தேவாரக் கருத்தே உள்ளதையும் காணலாம்.

    

 
"வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட மாடிமலை தன்னை வினவில்
வாய்கலச மாகவிழி பாடுசெயும் வேடன்மல ராகுநகனம்     
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா
ளத்திமலையே"

- திருவிராகம்4.

 ஆதிசங்கரர் கி. பி. 788-ல் இருந்ததாகச் சிலரும், கி. மு. 41-ல்
இருந்ததாகப் பலரும் கூறுகின்றனர். கி. மு. 41ஆக இருந்தால் கண்ணப்பர்
அதற்குப் பல்லாண்டுகளுக்கு முந்தியிருத்தல் வேண்டும்.1 மேலும்
2பெருந்தலையூர் - முதலான பல பண்டைய ஆலயங்களில்
கண்ணப்பருடைய சரித உருவங்களைக் காண்கிறோம். அவைகளும்
அவருடைய பழமையை எடுத்தாளுகின்றன.

4. குங்குலியக்கலய நாயனார்

திருப்பதி - திருக்கடவூர் :- அமிர்தகடேசர் ஆலயத்தில் 38
கல்வெட்டுக்களும், திருக்கடவூர் மயானத்துப் பிரமபுரீசர் ஆலயத்தில்
13கல்வெட்டுக்களும் உள்ளன. அவைகள் பெரும்பாலும் சோழ பாண்டிய
மன்னர்கள் காலத்தவையே.


1. பஞ்ச பாண்டவர்களில் ஒருவராகிய அருச்சுனர் கண்ணப்பராக
அவதரித்து முத்தியடைந்தனர் என்று புராணங்களால் அறியப்படுதலாற் கண்
ணப்பர்
காலம் கலியுகத்தின் தொடக்கமாம் என்பர்.

2. பெருந்தலையூர் - இத்தலம் கோயமுத்தூர்ச்சில்லாவில் பாவனி
தாலுகாவில் பவானிக்கு அருகில் உள்ளது. அங்குப் பழைய சிவாலயமுண்டு.
அதில் கண்ணப்பருடைய திருவுருவமும், அர்ச்சுனருடைய திருவுருவமும் பழங்
கால முதல் ஒருசேர வைத்துத் தாபித்துப் பூசிக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டு
ப்பக்கம் கண்ணப்பரைத் தலைவராகக் கொண்டு போற்றும் வேட்டுவர் என்ற
சாதியார் மிகவுள்ளார்கள்.
இராச ராஜச் சோழன் l (985/1013) முதல் இராஜராஜன் lll (1216 - 1248)
வரை சோழர்கள் 13 நூற்றாண்டுப் பாண்டியர்கள், கிருஷ்ணதேவராயன்
(1509 - 1535) இவர்கள் கல்வெட்டுக்களே முக்கியமானவை.
இக்கல்வெட்டுக்களில் பூதானச் செய்திகள் குறிக்கப்பட்ட போதிலும்
அடியிற்கண்ட குறிப்புக்கள் ஆராயத்தகுந்தன.

நாடு :- சோழ வம்சத் தொடக்கத்தில் உய்யக் கொண்டான் வளநாடு
என்றும், பிற்காலத்தில் ஜயங்கொண்ட சோழ வளநாடு என்றும் பெயர்
வழங்கியது.

உள்நாடு :- முதலில் அம்பர் நாடு என்றும், பின்னர் ஆக்கூர் நாடு
என்றும் வழங்கியது. திருஅம்பர், திரு வாக்கூர் என்ற இவ்விரு ஊர்களும்
அருகில் உள்ளன. தலைமை நகர் மாற்றத்தினால் நாட்டின் பெயரும்
மாறினது போலும்.

ஊர் :- ‘படைமேவிய திருக்கடவூர்', ‘உட்படை மேவிய திருக்கடவூர்'
என்று காண்கிறோம். "உட்படை மேவிய" என்றிருத்தலால் இங்குப்
பெருஞ்சேனையின் ஒரு பிரிவை அரசன் வைத்திருக்கலாம் (Contonment
Station) என்று சாசன ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் எண்ணுகிறார்கள்.

சுவாமிபெயர் - காலகால ஈசுவரர். ஆலயம் - திருவீரட்டானம்.
இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகள் - காலகாலதேவர்,
கூத்தாடுதேவர், குலோத்துங்கச்சோழீசர் விக்கிரமசோழீசர் (அவ்வவ்வரசர்கள்
ஸ்தாபித்தவை). இப்போது வழங்கும் வடமொழிப் பெயர் கல்வெட்டுக்களில்
இல்லை. திருமயானத்துச் சுவாமியின் பெயர் திருமயானமுடைய நாயனார்
என்பதே.

சிலசெய்திகள் :-

1. குலோத்துங்கன் lll காலத்தில் ஆலயப்பணியில் புதிதாக அமர்ந்த
இரண்டு சிவாசாரியர்கள் நீக்கப்பட்டுப் பரம்பரைச் சிவாச்சாரியர்கள்
நியமிக்கப்பட்டனர்.

2. குலசேகரபாண்டியன் காலத்தில் மன்னனுடைய தம்பிகளுக்கு
நிலங்களைப் பிரித்துக்கொடுத்த காரணத்தினால் கலகம் ஏற்பட, அரசன்
அவைகளை மீட்டுக்கொண்டான். கலகமும் தீர்ந்தது.

3. கிருஷ்ணதேவராயன் (1509) காலத்தில் நடந்த இராயச்சூர் யுத்தத்தில்
போர் செய்த கடவூர் ஆபத்சகாயர் என்ற பிராமணன் இவ்வாலயத்தில்
திருப்பணி செய்தது.

4. காலகாலன் ஈழத்து அரையன் என்ற கவி அப்பொருள்பற்றிய
செய்யுள்களாக இரண்டு கட்டளைக்கலித்துறைக் கவிகளைப் பாடிக்
கல்வெட்டிற் பதிப்பித்தார்.

5. குலோத்துங்கன் காலத்திற் புலியூர்க்கோட்டம் குன்றத்தூர்
சேக்கிழார்
அம்மையப்பன் பராந்தக தேவனான கரிகால்சோழ பல்லவராயன்
என்பவர் இவ்வாலயத்திற்குப் பூதானம் செய்தார். குன்றத்தூர் சேக்கிழார்
என்ற பெயர் குறிப்பிடத்தக்கது.

6. குலோத்துங்கன் 26 ஆண்டு (25/06) கல்வெட்டின்படி கடவூர்ச்
சபையார் ஒரு நிலத்தைத் தானம் செய்து அதை விளைநிலமாகத் திருத்திக்
குங்குலியக்கலய நாயனார் திருநாள் நிபந்தங்களுக்காக( அடியார்கள் அமுது
உண்ணச் செய்ய) ஏற்பாடு செய்யும்படி உத்தரவு இட்டார்கள். இங்கே
நாயனார் பெயர் குறித்திருப்பது நோக்கத்தக்கது.

7. திருமயானமுடைய பெருமாள் ஆலயத்தில் குலோத்துங்கன் lll
காலத்தில் ஆலயத்தில் வீணை வாசிக்கவும், வேதம், திருஉத்திரம் இவைகளை
ஓதவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

     5. மானக்கஞ்சாறர்

திருப்பதி - கஞ்சாறூர் :-இது மேலைக்காழி, தலைஞாயிறு என்ற
பெயர்களைக் கொண்ட கருப்பறியலூர் (வைத்தீசுவரர் கோயிலுக்கு 4 கல்லில்
உள்ள ஒரு ஊர்) என்பது சிலர் கருத்து. இதன் வாயு மூலையில் ஒரு கல்லில்
விட கஞ்சாறு என்ற ஒரு சிறு ஊர் இருக்கிறது. இது ஒரு வைப்புத்தலம்.
இதனையே மானக்கஞ்சாறர் அவதாரத் தலம் என்பர். ஆனால் இது
வடகஞ்சாறு என்றிருத்தலால் தென்கஞ்சாறு ஒன்று இருத்தல் வேண்டும். அது
இப்போது வழக்கில் இல்லை. என்றாலும் ஆனதாண்டவபுரத்தில்
கீழ்ப்பகுதியில் பஞ்சவடீசர் ஆலயம் ஒன்று இருக்கிறது. இத்தலம்தான்
கஞ்சாறூராக இருக்கக்கூடும் என்று அங்குப் புதையலில் அகப்பட்ட
விக்கிரகங்களில் அறியக்கூடும். (இப்புராணத் தலவிசேடத்தினுட்காண்க.)

இனி, கஞ்சாறன் என்ற பெயருள்ள இரண்டு கல்டெ்டுக்கள்
கிடைத்துள்ளன. செங்கல்பட்டு நத்தம் சண்பகேசுவரர் ஆலயத்தின் (262/1912)
கல்வெட்டின்படி இராஜேந்திரச் சோழன் (1017-1043) மூன்றாவது ஆண்டில்
பரமேசுவர மங்கலத்துச் சம்வத்ஸர வாரியச்சபையார் இராஜேந்திரச்சோழன்
மண்டபத்தில் (சதுஸ்ஸாஸி) கூடி நிலத்தீர்வையை நிச்சயித்தார்கள்.
நிலத்தீர்வை விதித்த உத்தியோகத்தன் பெயர் "கஞ்சாறன் ஐயன் சூரியன்"
என்பது. மேலும் திருவொற்றியூரில் ஒரு கல்வெட்டின்படி (188/1912)
கங்கபல்லவன் விஜயகெம்ப விக்ரம வர்மன் முதலாவது ஆண்டில் சோழ
வளநாட்டு இந்தளூர்நாட்டுக் கஞ்சாறூர் கிராமத்துக் கஞ்சாறன் அமர்நீதி
என்ற பல்லவதரையன் திருவிளக்கு வைப்பதற்காகப் பொன்தானம் செய்தான்.
இதனால் சோழநாட்டில் கஞ்சாறூர் இருந்ததென்றும் அவ்வூரான் ஒருவன்
கஞ்சாறன் அமர்நீதி என்ற பெயரை வைத்துக்கொண்டான் என்றும்
தெரிகிறது. இதில் கஞ்சாறன் என்பது அவனது ஊரையும், அமர்நீதி என்பது
அவனது பேரையும் குறிப்பனபோலும். அவன் அமர்நீதி நாயனாரிடம் அன்பு
செலுத்திய மரபினன் போலும்.

[தென்னாற்காடு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சிவன் கோயிலில் கோபுரத்தே
உள்ள படிமத்தின்மேல் "இஃது இக் கோயிலுக்குத் திருப்பதிகம் விண்ணப்பம்
செய்து விடைபெற்ற தம்பிரான் தோழர் மானக்கஞ்சாறனது உருவம்"
என்று வரையப்பட்டுள்ளது. (M. E. R. No. 255 of 1916) என்று எனது
அருமை நண்பர் வித்துவான் மா. இராசமாணிக்கனார் B.O. L. அவர்கள்
எழுதி உதவியுள்ளார்கள். இதனால் அக்காலத்தில் நாயன்மார்களது
பெயர்களை மக்கள் தங்களுக்குச் சூட்டி வழங்கிய மரபு காணப்படும் -
உரையாசிரியர்.]

6. அரிவாட்டாயர்

திருப்பதி - கணமங்கலம் :- இது சோழநாட்டுத் திருப்பதி. மிகவும்
செழிப்புற்றது. திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 2 1/2 கல்லில் உள்ள
தண்டலைச்சேரி என்ற ஊருக்கு 1/2 கல்லில் இருந்த ஓர் ஊர். இப்போது
கணமங்கல மேடு என்ற ஒரு திடல் மாத்திரம் பேரளவில் இருக்கிறது.
தண்டலைச்சேரி என்பது தண்டலை நீணெறி என்ற பாடல் பெற்ற
மாடக்கோயில். இவ்வாலயத்திற்குத் திருஞான சம்பந்தநாயனார் அருளிச்
செய்த தேவாரப்பதிகத்தின் சொற் சிறப்பினையே சேக்கிழார்
கணமங்கலத்திற்கு எடுத்தாண்டு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. (புராண
உரை பார்க்க.)

இங்கு அவதரித்த அரிவாட்டாயனாரைப் பற்றிய கல்வெட்டுக்கள்
கிடைக்க வில்லையாயினும் அவரது பெயரை இட்டு வழங்கிய சில
சிவனடியார்களின் செயல்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள்
கிடைத்திருக்கின்றன. தஞ்சை ஜில்லா கும்பகோணம் தாலூக்கா
திருப்புறம்பயத்தில் உள்ள சாக்ஷீசுவர சுவாமி ஆலயத்தில் கண்ட ஒரு
கல்வெட்டில் (344/27) "அரிவாட்டாயன், திருத்தொண்டன், வன்றொண்டன்,
சண்டேசுவரன், இயற்பகை, கோட்புலியார், விறன்மிண்டன்,
அணுக்கநம்பி என்ற பெயர்கள் வாய்ந்த அடியார்கள் திருப்புறம்பய
நாயனாருக்கு ஐப்பசி பங்குனித் திருவிழாக்களிலும், திருவேட்டை, தீர்த்தம்
இந்நாட்களிலும் நிவந்தங்களுக்கு நிலதானம் செய்ததாகக் கண்டிருக்கிறது.
இக்கல்வெட்டு ஒரு அரசனுடைய 13வது ஆண்டில் பொறிக்கப்பட்டது.
இதன்மேல் கல்வெட்டு விக்கிரமனுடைய கல்வெட்டானதினால் இதுவும் 12வது
நூற்றாண்டினதாக இருக்கலாம். ஆகவே, பெரிய புராணம் எழுதிய பிறகு
சிறிது காலத்திற்குள்ளாகவே இப்பெயர்களை மக்கள் இட்டுக்கொள்வது
வழக்கத்திற்கு வந்துவிட்டது எனலாம். மேலும் தாயன் என்ற பெயர் வேறு
கல்வெட்டுக்களிலும் காணலாம். தாயன் கணமுடையான்
(திருச்சி-திருவெறும்பியூர் (744/1914), தாயன் சிங்கன் (மதுரை, பெரிய
குளத்துச் செப்புச் சாசனம் 1301/1907), தாயன் திருச்சிற்றம் பல முடையான்
(திருச்செங்காட்டாங்குடி 58/1913) என்ற பெயர்கள் கிடைத்திருக்கின்றன.
இப்பெயர்களில் தாயன் கணமுடையான் என்றது குறிப்பிடத்தக்கது. (விரிவை
சித்தாந்தம் 12 மலரில் காண்க.)

7. ஆனாய நாயனார்

திருப்பதி - மேன்மழநாட்டுத் திருமங்கலம் :- நாடு - மழநாடு.
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடபாகம். இந்நாட்டு
அந்தணர்க்கு மழநாட்டுப் பிரகச்சரணம் என்று பெயர் உண்டு. இந்நாடு
மேன்மழநாடு - கீழ்மழநாடு என்ற இருபிரிவுகள் கொண்டது.
மேன்மழநாட்டிற்குத் திருத்தவத்துறை (லால்குடி) தலைநகரமாகவும், கீழ்மழ
நாட்டிற்கு மழபாடி தலைநகரமாகவும் இருந்தன. இவைதவிர மழகொங்கு
என்று ஒருபிரிவும் இருந்ததாகச் செப்பேடு ஒன்று கூறும்.

உள்நாடு - மழநாட்டில் வெள்ளையூர்க் கண்டம், பாச்சில் கூற்றம்,
இடையாற்று நாடு, கலார்க்கூற்றம் முதலிய பல பிரிவுகள் இருந்தன. நாட்டுப்
பெயர்கள் பல சோழர்கள் காலங்களில் பலவாறு மாறின. இனி, மழநாட்டில்
பாச்சில் ஆச்சிராமத்தில் கொல்லி மழவன் என்ற தலைவன் இருந்த செய்தி
திருஞானசம்பந்த நாயனார் சரிதத்தில் காண்க. இந்நாட்டுத் தலைவர்களுக்கு
மழவர், மழவராயர் என்ற பெயர் உண்டு.

ஊர் - மேல்மழநாட்டுக் கலார் கூற்றத்தில் உள்ள திருப்பதி
திருமங்கலம் ஆகும். அது ஒரு மூதூர்.

ஆலயம் - பழையது. இதில் 13 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
அவை ராஜராஜன் l (983-1013) காலம் முதல் ராஜராஜன் lll (1238)
வரையிலும், பின் மதுரைநாயகர் (1567) காலத்தும் உள்ளன.

சுவாமி - பரசுராமீசுவரம் உடையார். திருமழுவுடைய நாயனார்
என்றும் காண்கிறோம். தற்காலப் பெயராகிய சாமவேதீசர் என்ற பெயரே
காணவில்லை. (பரசு - மழு; மழுவிலிருந்து மழவர் - மழவநாடு என்ற
பெயர்கள் வந்திருக்கலாம். மழு - உழவுக்கருவி. மழவர் - உழவர்
என்றலுமாம்.)1 (விரிவு - சித்தாந்தம் - 12 மலரில் காண்க).


1. இத்தலத்தில் பரசுராமர் பூசித்துத் தாய்க்கொலைப்பழி நீங்கினர்
என்பது தலமான்மியம். சிவபெருமான் மழுவேந்தியவர். பரசுராமரும்
தவஞ்செய்து பரசுபெற்றவர். தலவிசேடமும் விறன்மிண்ட நாயனார் புராணமும்
பார்க்க.


புதுப்பிக்கபட்ட நாள் : 11-01-2019 18:51:05(இந்திய நேரம்)