Primary tabs
1290. விடை கொடுத்தான் - போர் நேர்ந்தால் சிறந்த சேனை வீரர்கள் அப்போரைத் தமக்கு விடும்படித் தமது அரசினிடம் வேண்டுவர். அவர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக அரசனும் அவருக்கு கொடுப்பான்.
1298.இச் செய்யுளுக்கு நாயனாருடைய "எம்மையா ரிலையானு முளே னலேன்; எம்மை யாரு மிதுசெய வல்லரே; அம்மையா ரெனக் கென்றன் றரற்றினேற்; கம்மை யாரைத் தந்தா ராரூரையரே" என்ற திருக்குறுந் தொகைச் செய்யுளே அகச்சான்றாம்.
1299. உயிர்தாங்கி - என்றதனால் வாழ்க்கையைச் சுமையாகக் கருதினார். என்பதும் "அருள்தாங்கி" என்றதனால் அருளின் மிகுதியும் பெறப்படும்.
1302. "நில்லாத உலகியல்பு கண்டும்" - என உம்மையொடு பொருள் கொள்க. எண்ணொடு உயர்வு சிறப்பு உம்மை. உலகில் நிலையாமை காணுதல் அரிது; கண்டும் சிலவற்றைத் துறத்தலும் மிக அரிது; அறத்துறத்தல் அதனினும் அரிது.
1305. வித்தகம் - சதுரப்பாடுமாம்.
1306.ஆன்ற - நிறைந்த.
1308. ஆர்வம் - அன்பின் முதிர்வு ஆர்வம்; "அன்பீனு மார்வமுடைமை" (குறள் 74).
1315.வச்சிரம் - வச்சிராயுதமுமாம். சுடுதலாலும் வலிமையை வற்றச் செய்தலாலும்வடவனலும்; கலக்கிமலக் கிடலால் விடமும்; குடைதலாலும் அறுத்திடலாலும் வச்சிராயுதமும் உவமையாயின. நச்சரவின்விடம் என்பதில் நச்சு என்பது பெயர் மாத்திரமாய் நின்றது.
1318.பரிபவம் - (முயற்சியின்) தோல்வி.
1328.இடைந்து - தோற்று
1329.கோள் இல் பரசமயம் - பயிரின் பலன் உள்ளீடு கொண்டிருத்தல். சாவியாகப் போயின் அது கோள் இல்லதாம். அதுபோலவே பிறவி நீக்கமும் வீடுபேறும் விளையாத சமயம் என்க. "சாவிபோம் மற்றச் சமயங்கள்" (திருவுந்தியார் 31).
1330.பிணியுடன் நடுங்கி - மருணீக்கியார் அவமே நெடுநாட் கழித்து விட்டதற்கும் நோயின் கொடுமையாலும் மனமும் உடலும் நடுங்கினார். இனித் தனக்கு வாழ்வில்லை என்று பிணியும் அஞ்சி நடுங்கிற்று என்க. பிணியுற்ற உடல் நடுங்கி எனலுமாம்.
பக்கம் - 87 - 89. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) விலக்க கலீர் - கில் - இங்கு இசைவு, சம்மதம் உணர்த்தும். மறந்தறியேன் - இனி மறவேன் என்பதுமாம். அறிவு - துணிவுப் பொருளில் வரும் துணை வினை. (4) முன்னம்.....முனிந்து - முன்பு அறியாமையினால் யான் உன்னை வெறுத்து; ஆளும்பட்டேன் - ஆளாயினேன்; இனிக்குற்றம் செய்யேன் என்பது கருத்து. (5) காத்து ஆள்பவர் - திலகவதியம்மையார். காவல் இகந்தமையால் - காவலை மதிக்காமையால். கரைநின்றவர் - நீர்நிலையின் (கயம்) கரை நின்ற கயவர். சமணர். நீத்தாய கயம் புக நூக்கிடஇட - நீந்த வேண்டிய ஆழமான கயத்தில் விழும்படி உந்தித் தள்ளிவிட. நிலைக்கொள்ளும்.....யொன்றறியேன் - சூலை நோயும் சமணக் கயமும் நீங்க அறியாதது தத்தளிக்கின்றேன். ஆர்த்து ஆர்புனல் - ஒலித்து, இழிந்து நிறைந்த நீர். (பரிபாடல் 18 - 46 - வரியுரை).