நாயனாரது சிறப்புப் பெயரும் அடிமைத்திறத்தின் உறைப்புடைமையாகிய செம்மை நெறியும் முதனூல் பேசிற்று. அப்பெயரினை விளக்குமுகத்தால் ஊரும் பெயரும் சரிதமும் திருத்தொண்டின் வகையும் அருட்கவித்திறமும் வகை நூல் பல படியாய் வகுத்தது. இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டுகொள்க. திருமறைக் காட்டிற் கதவந்திறப்பித்த வரலாறு 1530 - 1535 பாட்டுக்களிலும், கடலிற் கல் மிதப்பித்த வரலாறு 1390 - 1393 பாட்டுக்களிலும் காண்க.
1266. (இ-ள்.) திருநாவுக்கரசு - திருநாவுக்கரசர் எனவும்; வளர் திருத்தொண்டின்...வாகீசர் - சிவபெருமானது திருத்தொண்டினது வளர்தற்கேது வாகிய நெறியில் நின்று உலகம் வாழ்வடையும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவராகிய வாகீசர் எனவும்; வாய்மை திகழ்...உறுகின்றேன் - வாய்மை விளங்குதற்கேதுவாகிய பெருமையுடைய திருப்பெயரின் சிறப்புக்களைத் (அவர் தம் சரிதம் கூறும் வகையால்) துதிக்கின்றேன்; பேருலகில்...உணராதேன் - பெரிய உலகின்கண் அதனை உரைப்பதற்கு ஒரு நாவினுக்கும் இயலாமையை உணர்கிலேன்.