தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam - Moolamum Uraiyam



சிறப்புப் பாயிரம்
5

என்பது ஒருதலையாகவே, அவரது முன்னைப் பெயர். ஆசிரியர் சொல்லாதபோது, வரலாற்றிற்கண்ட வாகீசர் என்ற பெயர் பொருந்துவதாயின் கொள்வதற்குத் தடையில்லை என்க. அப்பெயர் பொருந்தாதென்பதற்குக் காரணம் எதுவும் காணப்படவில்லை. நாயன்மார்களின் முன்பிறப்பு வரலாறுகள் குறிக்க நேர்ந்த போது ஆசிரியர் கையாளும் மரபு பற்றி751-ல் உரைத்தவை பார்க்க. "முன்னம் மடியே னறியாமையினால்" என்ற நாயனார் திருவாக்கும் கருதத்தக்கது.

வளர் திருத்தொண்டின் நெறி வாழ வரும் - வளர் நெறியில் (உலகம் நின்று) வாழ என்க. ஆணவச் சேற்றினுள் அழுந்திய உலகம் மேலெடுக்கப்பட்டு வாழ்வடைதற்கு உரிமையுள்ளதாதலின் அது வருவித்துரைக்கப்பட்டது. நெறி - நெறியில் நின்று - நெறி கண்டு கடைப்பிடித்து என்க.
வளர் நெறி என்க. வளர்தலாவது சென்று சென்று வந்து பிறவாது பேராவியற்கை பெறுதல். "நில்லாத நிணக்குரம்பைப் பிணக்க நீங்க" என்ற நாயனாரது குறிக்கோள் காண்க. வளர்நெறி - வளர்தற் கேதுவாகிய. வினைத்தொகை எதுப்பெயர் கொண்டது. வளர் தொண்டு என்று கூட்டி ஏனைய பசு புண்ணியங்கள்போ லழிந்து ஒழியாது நிலை பெறும் தன்மைத்தாகிய தொண்டு என்றுரைப் பினுமமையும்.
திருத்தொண்டின் வளர்நெறி - சரியையாதியாக எண்ணப்படும் சிவநெறி. தொண்டுசெய்து சிவனையடையும் நெறி. "சன்மார்க்கஞ்' 'சகமார்க்கஞ்' 'சற்புத்திரமார்க்கந்', 'தாதமார்க்கம்' மென்றுஞ், சங்கரனை யடையும், நன்மார்க்க நாலவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர்" (சிவஞானசித்தி. 8 - 18) என்பது காண்க.
வாழவரும் - இந்நெறிகளில் நின்று உலகம் வாழச் செய்தலாவது அந்நெறிகளில் நடந்து காட்டி உலகை வழிப்படுத்துதல்; இந்நெறி நான்கினுள் ஆதாரமாக முதலினிற்பது தாதமார்க்கம் எனும் சரியையாகும். நாயனார் திருவுழவாரப் பணி செய்வதனை மேற்கொண்டு அதனைத் தேற்றமாகக் காட்டியது காண்க. சைவ சமய பரமாசாரியர்கள் நால்வர்களுள் சரியையினை விளக்கிக்காட்ட அவதரித்தவர் இந்நாயனார் என்று வழங்குவதும் மரபு. ஞானத்தவம் என்றதனால் சரியைமட்டு மேயன்றி அதுமுதலாக ஞானம்வரை நான்குநெறிகளையும் விளக்கினர் என்பதாம். "ஞானயே கக்கியா சரியை நான்கும் நாதன்றன் பணிஞானி நாலினுக்கு முரியன்" (சித்தி - 12 - 5). ஞானத் தவமுனிவராகிய வாகீசர் வளர்கின்ற திருத்தொண்டின் நெறி வாழும்படி திருநாவுக்கரசராக வரும் (அவதரித்த)என்று கூட்டி உரைப்பர் இராமநாதச் செட்டியார்.
வாய்மைதிகழ் பெருநாமச்சீர் - வாய்மை திகழ்தற் கேதுவாகிய திருப்பெயர் என்பதாம். வாய்மையானது விளங்குகின்ற பெருமையுடைய என்றலுமாம். "வாய்மை திறம்பா வாகீசர்" (1540), "கோதின்மொழிக் கொற்றவனார் (அப்பூதி - புரா - 12) முதலியவை பார்க்க. இந்தப் பெருநாமத்தினையே துதித்து அப்பூதி நாயனார் அரனை அடைந்த வரலாறும் கருதுக. வாய்மை என்பது சிவபோகமாகிய சிவானந்தநிலை; அது திகழ்தற் கேதுவாகிய பெருநாமமென்க. "உறக்குறு பவர்போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே" (சிவப்பிரகாசம் - அணைந்தோர் தன்மை - 2), "வறுந்தொழிற்கு வாய்மை பயன்" (திருவருட்பயன், அணைந்தோர் தன்மை - 7) என வருவன காண்க. "இலைமா டென்றிடர் பரியார்.....திருநாவுக்கரசென் போரே" (திருநாவுக்கரசர் - திருவேகாதசமாலை - 4) என்று நம்பியாண்டார் நம்பிகள் இப்பெருநாமச் சிறப்பைப் பரவுதலுங் காண்க.
உரைசெய்ய ஒருநாவுக்கு ஒண்ணாமை என்க. ஒரு நாவினால் ஒண்ணாது என்றும் ஒரு நாவுக்கும் ஒண்ணாது என்றும் உரைக்க நின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:18:08(இந்திய நேரம்)