தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


செய்து வந்த மறை விதி வழிபாடு ஏற்றது அன்று என்று எண்ணினார். தமக்கு உவப்பானவற்றையே இறைவனுக்கும் உவப்பாக எண்ணிப் படைத்தார். சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வரக்கண்டு, தம் கண்ணைப் பெயர்த்துச் சிவபெருமான் கண்ணில் வைத்து மகிழ்ந்தார்; ஆறு நாட்களில் திருவருளுக்கு இலக்கானார்; அன்பின் எல்லையாகப் போற்றப் பெறுபவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

     20. சகரர்: காசியப முனிவர் வழித் தோன்றியவர்கள்; சகரனுடைய பிள்ளைகள்; அறுபதினாயிரவர்; தமது தந்தையின் யாகக் குதிரை இந்திரனால் ஒளிக்கப் பெற்றது; அதனைத் தேடிக் கொண்டு வரப் பூமியைக் கல்லினார்கள்; கல்லும்போது, அங்குள்ள கபில முனிவர் சாபத்துக்குள்ளாகிச் சாம்பராயினர்; இவர்கள் நற்கதி அடையும் பொருட்டே கங்கை பகீரதனால் கொண்டு வரப் பெற்றது; இவர்களும் நற்கதியுற்றனர்; இவர்கள் கல்லிய இடமே சாகரம் (கடல்) எனப் பெற்றது. 

    21. சாக்கிய நாயனார்: இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தும் பேரின்பப் பேற்றை அருளவல்லது சிவலிங்க வழிபாடே எனத் தேர்ந்து, தன் சமயத்துப் புறத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமலேயே சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். கல்லையே மலராகக் கொண்டு, ஒரு நாளும் தவறாமல் வழிபட்டு, சிவபெருமான் திருவருளில் கலந்தார். சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவர்.

     22. சேரனுக்குத் திருமுகம் கொடுத்தது: மக்கள் முன்னிலையில் பாடி மகிழ்விக்காது, தன் இசை வன்மை அனைத்தையும் ஆலவாய் அண்ணலின் திருமுன்னரேயே பாடிக்காட்டுவது என்ற கொள்கையையுடைய பாணர் குல அடியார் ஒருவர், வறுமையினால் வருந்துவது கண்ட ஆலவாய் அண்ணல், அவ் அடியாருக்குப் பொருள் வழங்குமாறு "மதிமலிபுரிசை" எனத் தொடங்கும் திருமுகச் செய்யுள் ஒன்று எழுதிப் பாணரிடம் கொடுத்தனுப்ப, அத் திருமுகத்தைக் கண்ட சேர மன்னன் பேரானந்தம் உற்று, பாணருக்குப் பெருநிதி வழங்கி வர விடுத்தான். 

    23. சோழனை மடுவில் வீட்டியது: பாண்டியன் ஒருவன் தன் பொருளை எல்லாம் தெய்வத் திருப்பணிகளுக்கே செலவிட்டு, தன் நாட்டைக் காக்கும் படைகளைப் பெருக்காதிருந்தான். இவனது படைவலி இன்மையை உணர்ந்த சோழன் ஒருவன் பாண்டி நாட்டையும் தன் நாடாகச் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால் மதுரை மாநகர்மீது படை எடுத்து வந்தான். அப் போரில் சோழனும் பாண்டியனும் குதிரை மீதேறி நேருக்கு நேர் போர் செய்யும்பொழுது, பாண்டியன் குதிரைக்கு முன் ஒரு வேடன் குதிரைமீதேறி வந்து, சோழனது குதிரை முகத்தில் ஒரு வேற்படையை எறிந்தான். சோழன் வெகுண்டு, வேடனைக் குதிரையோடும் பிடிப்பதற்குத் தன் குதிரையைச் செலுத்தவே, வேடன் அஞ்சி ஓடுவான் போலப் புறங்கொடுத்து ஓடி, ஒரு நீர்நிலையில் தன் குதிரையோடும் இறங்கினான். தொடர்ந்து வந்த சோழனும் அந் நீர்நிலையில் தன் குதிரையோடு இறங்கினான். இறங்கிய சோழன் குதிரையோடு தானும் அம் மடுவிலேயே மடிந்தான். வேடனாக வந்த சிவபெருமான் காட்டில் மறைந்தருளினார்.

     24. தக்கன் வேள்வி: சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்; அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார்; பிரமன் விழுந்தான்; தக்கன், எச்சன்,


புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 22:29:42(இந்திய நேரம்)