தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kachchik Kalambagam-காதங் - 28




ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த

ஆசிரியத் தாழிசை.

1.     காதங் கமழுங் கடியாரு மாந்தருக்கீழ்
      நாதன் அருளாளன் நண்ணியசீர்ச் செவ்வி
      காதிற் பண்ணாருங் கவியின்ப மானுமே.
2.    பூவின் மணமார் புனிதநறு மாந்தருக்கீழ்ச்
      சேவின் மிசைத்திகழுந் தேசனமை செவ்வி
      நாவின் னமுதூறு நற்சுவையை மானுமே.
3.    மண்ணிற் சிறந்த வளமளிக்கு மாந்தருக்கீழ்
      விண்ணிற் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி
      கண்ணிணையிற் காண்பரிய காட்சியினை மானுமே          (28)

(இ-ள்.) காதம் கமழும் - காத தூரம் பரிமளிக்கின்ற, கடி ஆரும் - பூக்கள் நிரம்பப் பூத்திருத்தலால் மணம் பொருந்திய, மா தருக் கீழ் - மா மரத்தின் கீழ், நாதன் அருளாளன் - தலைவனாயிருந்தும் அருளுடையனாதலால், நண்ணிய - காண விழைவார்க்கு எளியனாக வந்து பொருந்திய, சீர் - சிறப்பை உடைய, செவ்வி - காட்சி, (விளைவிக்கும் இன்பம்).

காதில் - காதுகளாகிய பொறியிடத்து, பண்ணாரும் - இசை நிறைந்த, கவி இன்பம் - பாடல் விளைவிக்கும் இன்பத்திற்கு, மானும் - ஒப்பாகும்.

2.    பூவின் மணம் ஆர் - பூவின் வாசனை பொருந்திய, புனிதம் - தூய்மைவாய்ந்த, நறு மா தருக் கீழ் - நல்ல மா மரத்தின் அடியில் எழுந்தருளிய,

சேவின் மிசைத்திகழுந் தேசன் - இடபத்தின் மீது விளங்குகின்ற ஒளி உருவினன், அமை செவ்வி - அமைந்து எழுந்தருளி அருளும் காட்சி, காணுவார் கண்ணிற்கு உண்டாக்குகின்ற சுவை; நாவின் - நாவில், அமுது ஊறு - அமுதத்திலிருந்து ஊற்றெடுத்துச் சுரக்கின்ற, நற் சுவையை - நல்ல சுவையை, மானும் . ஒக்கும்.

3.    மண்ணிற் சிறந்து - பூவுலகத்தில் சிறப்புற்ற, வளம் அளிக்கும் - வளத்தைக் கொடுக்கின்ற, மா தருக் கீழ் - மா மரத்தின் கீழ் எழுந்தருளிய, விண்ணில் பொலிந்தான் சிவன் - உலகத்தில் விளங்குபவனாகிய சிவபெருமான், விளங்கியுறு - எல்லோரும் காணக் கோயில் கொண்டினிது விளங்கியுறுகின்ற, செவ்வி - அழகிய காட்சி, கண் இணையால் - இரண்டு ஊனக் கண்களால், காண்பு அரிய - காணுதற்கு முடியாது அகக் கண்ணால் கண்டு களித்தற்குரிய, காட்சியினை மானும் - தோற்றத்தினையே ஒக்கும்.

கடவுளுடைய ஒளி ஊனக்கண்ணால் பார்க்க இயலாது; மெய்யறிவுக் கண்ணாலேதான் பார்க்க இயலும் என்றதால் இங்ஙனம் உணர்த்தப்பட்டது.

(வி.உ.) நாதவடிவினனான இறைவன் நிறைந்த இயற்கை அருளுடையவன் என்பதும், அவ்வருளான், எல்லோரும் தன்னைக்கண்டு களிப்புற வேண்டும் என்று விரும்பி மாமரத்தின் கீழ்க் கோயில் கொண்டு எழுந்தருளினன் என்பதும், அத்தருக்கீழ் உள்ள சிவலிங்க வடிவின் காட்சி தரும் இன்பம் அவ்விறைவன் அருளைக் கொண்டு காணுவார்க்குப் பண்ணமைந்த கவி செவிக்களிக்கும் இன்பம் போன்றும், அமுதூறும் நற்சுவை நாவிற்களிக்கும் சுவைபோன்றும், தவ நிலையுற முயலுநர் முடையார் ஊனக் கண்மூடித் தம் அகக்கண்ணால் காணும் காட்சியே போன்றும் இன்பம் அளிக்கும் என்பதும் இம் மூன்று தாழிசைகளால் உணர்த்தப் பெற்றன.  செவ்வி காட்சி யென்னும் பொருளில் வருதலைச் “செவ்வியும் கொடான் இவ்வியல் புரிந்தனன்” என்னும் பெருங் - இலாவாண 9-198 அடியால் உணர்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:19:34(இந்திய நேரம்)