தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kachchik Kalambagam-அழைக்காம - 66



 

பனிக்காலம்

எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை

அழைக்காமல் அணுகார்வெவ் வலர்கூர மாய்வேன்
      ஐயோஎன் ஐயர்க்கு ரைப்பாரும் இல்லை
கழைக்காமன் எய்யுஞ்ச ரந்தைக்க நொந்தேன்
      கண்ணாளர் இந்தப்ப னிக்காலம் ஓரார்
குழைத்தார்பொ ழிற்கச்சி வாழண்ண லாரைக்
      கும்பிட்ட ழைப்பீர்கு ழைப்பீர்ம னத்தைப்
பிழைத்தேன லேனென்று பிச்சர்க்கி யம்பீர்
      பெண்பேதை உய்யுந்தி றம்பாங்கி மாரே.            (66)

(இ-ள்.) வெம்மை அலர் கூர - கொடிய பழி மிகுதலால், மாய்வேன் - நான் அழிவேன், அழைக்காமல் அணுகார் - தலைவரோ அழைக்காமல் வரமாட்டார், ஐயோ - அந்தோ!, என் ஐயர்க்கு - என் தலைவருக்கு, உரைப்பாரும் இல்லை - (என் நிலைமையைச்) சொல்பவரும் இல்லை, கழைக் காமன் - கரும்பின் கழையை வில்லாக உடைய மன்மதன், எய்யும் - செலுத்தும், சரம் - அம்பு, தைக்க - தாக்க, நொந்தேன் - வருந்தினேன்; கண்ணாளர் - கணவர், இந்தப் பனிக்காலம் ஓரார் - இந்தப் பனிக் காலத்தின் கொடுமையை ஆராயார், குழைத்து - தளிர்களை விட்டு, ஆர் - பொருந்திய, பொழில் - சோலை சூழ்ந்த, கச்சி வாழ் அண்ணலாரை - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரை (தலைவரை), கும்பிட்டு அழைப்பீர் - (என்பொருட்டு) வணங்கி அழைப்பீர், குழைப்பீர் மனத்தை - அவர் மனத்தை இளகச் செய்வீர், பிச்சர்க்கு - இரந்துண்ணிக்கு, பிழைத்தேன் அலேன் என்று - உயிர் பிழைத்திலன் என்று, பாங்கிமாரே - தோழிமார்களே, பெண் பேதை - பெண் பேதையாகிய யான், உய்யும் திறம் - பிழைக்கும் வழியை, இயம்பீர் - சொல்லுங்கள்.

கண்ணாளர் - கணவர் (மது மலராள் கண்ணாளர் திவ். பெரிய திருமொழி.)

குழைத்து - தளிர்த்து; குழை என்னும் சினைப்பெயரடியாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம்.

(குழை+த்+த்+உ)

பிச்சாடனர் - ஐயம் எடுப்பவர்; பிச்சா + அடனர்.

“பாங்கிமாரே! அண்ணலாரை அழைப்பீர்; மனத்தைக் குழைப்பீர்; பிச்சர்க்குப் பிழைத்திலேன்; என்று பேதை உய்யும் திறம் இயம்பீர்” என முடிக்க.

பனிக்காலத்திலே தலைவன் பிரிந்திருப்பதனால் தனக்குத் (தலைவிக்குத்) துன்பம் மிகும் என்பதை அவர் அறியாமலிருக்கின்றார்.  அவர்க்குத் தன் துன்பத்தை யுணர்த்தி அழைத்து வரவேண்டும் என்று தலைவி தோழியரிடத்துக் கூறுகின்றதாக இச் செய்யுள் அமைந்துள்ளது.

‘பிழைத்தேன் அலேன்’ என்பதற்கு, ‘நான் அவருக்கு ஒரு தவறும் செய்திலேன்’ என்று பொருள் கூறினும் அமையும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:25:27(இந்திய நேரம்)