தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

iv
பாசவதைப் பரணி

முற்கூறிய புறத்திணைச்செய்திகள் பரணிகளில் வருவதன்றி 1மதுரைக்காஞ்சி, 2புறநானூறு, 3சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்களிலும் காணப்படும்.

4பரணி யானை பிறந்த நாளாதலாலும், 5காளிக்கும் யமதருமனுக்கும் உரியதாதலாலும், 6தன்கட்பிறந்தானைப் பெருவீரனாக்கும் தன்மைதயதாதலாலும், தலைவனொருவன் பலயானைகளைக்கொன்று, காலன் பல உயிரைக் கொள்ளச் செய்து பெருவீரத்தைப் புலப்படுத்திய களவேள்வியில் காளிக்கு உவப்புண்டாகக் கூழ்சமைப்பதற்குரிய நாளாயிற்றென்று ஊகித்தறியப் படுகின்றது.


1. “பிணக்கோட்ட களிற்றுக்குழும்பின், நிணம்வாய்ப் பெய்த பேய் மகளிர், இணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப், பிணையூபம் எழுந்தாட, அஞ்சு வந்த போர்க்களத்தான், ஆண்டலை யணங்கடுப்பின், வயவேந்த ரொண்குருதி, சினத்தீயிற் பெயர்புபொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல்விளங்கிய விழுச்சூர்ப்பின், தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர.” 24-38.

2. “முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித் தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின், அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய”, “களிற்றுக்கோட் டன்ன வாலெயி றழுத்தி, விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள், குடர்த்தலை துயல்வரச் சூடி யுணத்தின, ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து, வயங்குபன் மீனினும் வாழியர் பலவென, உருகெழு பேய்மக ளயரக், குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.” 26, 371.

3. “கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக, ஆளழி வாங்கி யதரி திரித்த, வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தி....... முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப், பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை, முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇயவூன் சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச், சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத், தறக்களஞ் செய்தோ னூழி வாழ்கென.” 26 : 232-46.

4. “பரணிநாட்பிறந்தான்” (சீவக. 1813) என்பதற்கு, ‘பரணி யானை பிறந்த நாளாதலின் அதுபோலப் பகையை இவன் மதியான்’ என்று நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையைப்பார்க்க.

5. “காடுகிழவோள்........ தருமனாள்......... எனப், பாகுபட்டது பரணிப் பெயரே” திவாகரம்.

6. ‘பரணி பிறந்தான் தரணியாள்வான்’ என்ற பழமொழியும், ‘பரணி யான் பாரவன்’ (நன். சூ. 150, மயிலை.) என்னும் மேற்கோளும் இங்கே அறிதற்குரியன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 11:35:40(இந்திய நேரம்)