Primary tabs
“தரவின்றாகித் தாழிசை பெற்றுமென்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசை பெற்றுமென்றவாறு. அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி முதலாயின எனக்கொள்க.......
“அஃதேல் இரண்டடியான் வருந்தாழிசை பேரெண்ணாகாவோவெனின், அதுவன்றே முதற்றொடைபெருகினன்றி எண்ணெனலாகாமையா னென்பது. இவை வருமாறு : ‘உளையாழி யோரேழு மொரு செலுவி னடங்குதலான், விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே’ என்றாற்போலப் பரணிச் செய்யுளுட் பயின்றுவருமென்பது........
“மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய்வருதலின் அது தேவபாணியாமென்றது என்னையெனின், அவையெல்லாம் காடுகெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப்பற்றி, அதனுட் பாட்டுடைத் தலைவனைப்பெய்து சொல்லப் படுவனவாதலான் அவையெல்லாவாற்றானுந் தேவபாணியே யாமென்பது.” (தொல். செய். சூ. 149, பேர்.)
“தாழிசைக் கொச்சகமாகிய பரணிச்செய்யுளும் தரவுகொச்சகமாகிய தொடர்நிலைச் செய்யுளும்”
(தொல். செய். சூ. 156, பேர்.)
பரணியில் வரும் தாழிசைகளில் சந்தமும் விரவிவரும் :
“பரணியுளெல்லாம் இரண்டடியானே தாழம்பட்ட ஓசை விராய் வருதலும் ழடுகிவருதலும் பெறுதும்”
(தொல். செய். சூ. 149, பேர்.)
என்பதனால் இது பெறப்படும்.
பரணியின் உறுப்புக்கள்
பரணியின்கண், முதலிற் கடவுள்வாழ்த்துக் கூறப்படும். பின் கடைதிறப்பு என்பது சொல்லப்படும். நூலுட் கூறப்படும் வீரச் செயலைப் பாடுதற்குப் 1பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த மகளிரையும் 2வேறுமகளிரையும் வாயிற்கதவைத் திறந்து வரும்வண்ணம் அழைப்பதாக இப்பகுதி அமைக்கப்படும். இங்ஙனம் அழைக்குங் காலம் நூலுட் கூறப்படும் விரச்செயல் நிகழ்ந்தகாலத்தை அடுத்ததெனச் சிலர்கொள்வர்; 3தக்கயாகப்பரணி முதலியவற்றில் உள்ள
1. “மீனம்புகு கொடிமீனவர் விழிஞம்புக வோடிக், கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின்”, “அலைநாடிய புனனாடுடை யபயற்கிடு திறையா, மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின்”, “மழலைத்திரு மொழியிற் சில வடுகுஞ்சில தமிழுங், குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின்” (கலிங்கத்துப்பரணி) என்பவற்றிற் பகைவர் நாட்டுமகளிர் கூறப்படுதல் காண்க
2. தக்கயாகப்பரணி முதலியவற்றைப்பார்க்க
3. தாழிசை, 44-7.