Primary tabs
படைத்தலைவர்களாகவும், ஞானத்தைச் சிவஞானதேசிகருடைய தண்டநாயகராகவும், நிருபகம், பொறை, சந்தோடம், விவகார பராமுகம், சாந்தம், சீலம் முதலியவற்றை அந்தத் தண்டநாயகருக்கு அடங்கிய படைத்தலைவர்களாகவும், ஞானத்தால் பாசம் நீங்கியதை ஞானவிநோதன் சேனைகளால் பாசமன்னன் அழிந்ததாகவும் உருவகம்செய்து அதற்கேற்ப வரலாற்றைத் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் குணங்களை உருவகஞ் செய்தல் வடமொழியிலும் உண்டென்பதைப் பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களால் அறியலாம் ;
“அழுக்கா றெனவொரு பாவி”,
“இன்மை யெனவொரு பாவி”,
“நாணென்னு நல்லாள்”
எனத் திருக்குறளிலும் குணங்களை உருவகப்படுத்தி யிருத்தல் காண்க.
புறப்பகையை வெல்லுதலிலும் அகப்பகையை வெல்லுதல் அரிது. அப்பகையை வென்று ஞானமுடிசூடுதல் சிறப்புடையது ; அச்செயல் உயர்ந்த வீரமாகவே கருதப்படும் ;
“ஐம்புலனும் வென்றான்றன் வீரமே வீரம்”
என்னும் பழைய பாடல் இதனை வலியுறுத்தும். ஆதலின், வீரத்தைப் பாராட்டும் பரணிப்பிரபந்தங்கள் ஞானத்தின் வெற்றியையும் பாராட்டுதல் பொருத்தமுடையதேயாகும்.
பாசவதைப்பரணி, காப்பை முதலிற் பெற்றுக் கடவுள்வாழ்த்து முதலிய பத்து உறுப்புக்களையும் 737 தாழிசைகளையும் உடையது.
இந்நூலிற் சொல்லப்படும் சிவஞானதேசிகரென்பவர் அம்மவை யம்மையாரென்பவரின் திருப்புதல்வராக அவதரித்து, மயிலத்தில் எழுந்தருளியிருந்தவரும் முருகக்கடவுள் திருவருள் பெற்றவருமாகிய பாலசித்தரென்னும் சித்தபுருஷர்பால் ஞானோபதேசம் பெற்று, அவரது கட்டளையின்படியே பொம்மையபாளையமென வழங்கும் பொம்மபுரத்தில் வீரசைவஞானாசிரியராக எழுந்தருளி இருந்தவர். அவருக்குரிய மடங்கள், பொம்மபுரம், மயிலம், காஞ்சீபுரம், செய்யூர், சிதம்பரம் என்னும் இடங்களில் உள்ளன.