தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

முன்னுரை
5

பழைய வரிப்பாடல்கள்

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலத்திலும் இயற்கையோடு உறவாக ஒட்டி வாழ்ந்த தமிழ் மக்கள் ஆடலும் பாடலும் நிகழ்த்தி இன்ப வாழ்வு வாழ்ந்தார்கள். பன்னீராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செழித்து ஓங்கி வளர்ந்த செந்தமிழ் மொழியின் இன்ப வளத்தினாலே வாழையடி வாழையாக இயற்கையாக மக்களின் வாழ்விலே தோன்றி வந்து கொண்டிருந்த இயற்கைப் பாடல்களுக்கு அளவே இல்லை. அவற்றின் கவிதை வளமும் உணர்வு நலமும் நளினங்களும் தமிழ் உலகத்து மக்களைப் பல்லாயிரம் யாண்டுகளாக இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்துகொண்டு வந்திருக்கின்றன. அத்தகைய இயற்கைப் பாடல்களை யெல்லாம் பெருங் கவிஞர்களும் எளிய பொதுமக்கள் முதல் எல்லோரும் பாடியும் ஆடியும் களிகூர்ந்து வாழ்ந்தார்கள். இந்த இன்பத்தை நினைத்த மாணிக்கவாசகப் பெருமான், ‘என்னை ஆளுடைய நாயகனாகிய இறைவன் எழுந்தருளி என்முன் வந்து என்னைத் தன்னோடு கலக்கச் செய்து கொண்டானென்றால் எனக்குத் தமிழ்ப்பாடலைப் பாடி ஆடிக் களிகூரும் இன்பம் கிடையாமற் போய்விடுமே’ என்று இரங்கிக் கூறும் திருவாசகப் பகுதியே தமிழ்ப் பாட்டின் திறத்திற்குப் போதிய சான்றாகும். இறைவனை யடைந்துவிட்டால் “பண்களி கூர்தரு பாடலோ டாடல் பயின்றிடு மாகாதே” என்று அடிகளின் உள்ளம் தமிழின்பத்தில் தேக்கெறிந்து பேசுகின்றது. அவ்வாறு இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்யும் பாடல்களைத் “திண்நிலை வரி” என்றும் பிரித்திருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காண்டத்தின் இறுதிக் கட்டுரையிலும் மூவேந்தர் நாட்டின் பெருமைகளைக் கூறும்போது இத்தகைய வரிப் பாடல்களும் ஆடல்களும் ஆகிய உடைமைகளும் நாட்டுக்குப் பெருமையாகக் கூறப்பெற்றிருக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 17:28:39(இந்திய நேரம்)