Primary tabs
‘மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்
மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’
‘தம்பொருள் என்ப தம்மக்கள்’
எனப் பலவாறு போற்றியுரைப்பர், நம் திருவள்ளுவப் பெரு மகனார்.
‘செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்’
எனவும்,
‘மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே’
எனவும் மகிழ்ந்துரைப்பர், செல்லூர் கோசிகன் கண்ணனாரும், பாண்டியன் அறிவுடை நம்பியும்.
நளனும் தமயந்தியும் உரையாடியகாலை இத்தகைய புதல்வர்களின் காட்சியைத் தாய்மைத் தன்மைபெற்ற தமயந்தியின் வாயிலாக,
‘குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தர்’ (கலிதொடர்: 66)
என்றனர்.
குழந்தைகளைக் காண்டலே ஓர் கண்காட்சி யென்றும், அதினும் குற்றமில் காட்சி யென்றுங்கூறி, அவர்தம் காட்சிக்குச் சுவை தருவது, அவரின் மழலை மாறா இளங் குதலைச் சொல் அச் சொல்லும் எழுத்துப் பெறா இளஞ் சொல்லாதல் வேண்டும். அவ்வாறு பேச அமைவது தளர்நடைப் பருவத்துக்கு முந்திய பருவமேயாகும். எனவே, அவ் வெல்லாப் பொருண்மைகளும் இலக, ‘குதலைவாய்,’ என்றும் ‘மைந்தர்,’ என்றும் போற்றியுரைத்த அறிவின் வரம்பு, ஆற்ற இனிமைமிக்கதாக அமைந்திருத்தலை ஓர்க.
நளமன்னன் சிறப்பைக் கூறுங்கால் ஆடவர்களுட் சிறந்த வீரனாகவும், அறவோனாகவும் இனிதெடுத்து மொழிவர். முதற்கண், அவனை நால்வகைப் படையுங்கொண்ட நானில வேந்தனாக அமைக்கின்றார். வேந்தர்கட்குச் சிறப்புக் கூறப்போந்த செந்நாப்போதாரும், தம் அறநூலில்,
‘படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு’