Primary tabs
இது, ஒருவன் மனத்தில் தோன்றும் அழுக்காற்றனால் நிகழ்வது. அழுக்காறுடையான் நெஞ்சம், ஒருகாலும் நல்லனவற்றை எண்ணாது ; அஃதுடையான் நெஞ்சகம் எஞ்ஞான்றும் எரிந்து கொண்டேயிருக்கும். பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து அவரைக் கெடுக்கவே முயல்வான். இவனால் ஒரு வறிஞனுக்குக் கிடைக்கும் பயன் கெடுவதோடு, கொடுப்போனுக்கு வரும் அறமும் அழிக்கப்பெறுகின்றது. ஆதலால், இது மக்கட்பண்பொடு பட்டதல்ல. எனவே, இதுவும் கூடாதென விலக்கப்பட்டது.
(6) பிற அறங்கள் : பின்னரும் அருள், மானம், தெய்வ வழிபாடு, செங்கோல்முறை முதலிய பல்வகை அறங்களும், பெரியோர்க்குப் பிழை செய்யாமை முதலிய கடப்பாட்டோடு கூடிய அறங்களும் ஆங்காங்கே ஆசிரியரால் கட்டுரைக்கப் பெற்றுள்ளன.
இந்நூற்பயன் :
இன்னும் இந்நூலை ஊன்றிப் பயில்வார்க்கு, ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்பப் பல நயங்கள் தந்து இம்மையின்பம் பயப்பதோடு, மறுமை இன்பமும் பெற அறமுறையும் நன்கு கூர்த்தறிந்து நடத்தற்கு வழிகாட்டியுமாகும். எனவே, அவர் தெள்ளுற்ற தமிழமுதின் சுவையில் திளைத்து சீரிளமைத்திறங் குன்றாது சிறப்புடன் வாழ்வரென்பது ஒருதலை.
நன்றியுரை :
இத்தகைய அரிய பெரிய இம்மாபெருங் காப்பியத்துக்குச் சிறந்த உரைகள் பல, அவ்வக்காலப் புலமைச் சான்றோர்களால் வரையப்பெற்று வெளிவந்துள்ளன. ஆயினும் இச்சிறியேனை இதற்கு உரையெழுதுமாறு கட்டளையிட்டு இப்பணிக்கு ஊக்கிய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக ஆட்சிப் பொறுப்பாளர், உயர்திரு. வ. சுப்பையாபிள்ளை யவர்கட்கு எனது உளவமுவந்த நன்றியுடன் வணக்கமும் உரியவாகுக. இவ்வுரையெழுதத் தோன்றாத் துணையாயமர்ந்து என் உள்ளத்தினின்றும் உணர்த்தியருளிய எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை மன மொழிமெய்களால் வணங்குகின்றேன்.
சென்னை - 1,
29-10-1954.
செல்லூர்க்கிழான். செ.
ரெ. இராமசாமி,
உரையாசிரியன்.