தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!-திருத்தணிகைப் புராண உரைநடைச் சுருக்கம்

நைமிசம்

தாமரை மலரில் எழுந்தருளியிருந்த நான்முகன் செலுத்திய தருப்பைப்புல் சென்று தங்கிய இடமாகிய * தருப்பைக் காட்டில் முனிவர்கள் பலர் தங்கி யிருந்தனர். அம்முனிவர்கள் நஞ்சு தங்கப் பெற்ற கரிய கழுத்தினையுடைய சிவபெருமானுடைய திருவடிகளை உள்ளத்தின் கண்ணே தங்கச் செய்து தவத்தைச் செய்தலோடு அப்பெருமானுடைய புகழினையும் விரும்பிக் கேட்பவர்கள். அம்முனிவர்களுடைய பெயர் பிருகு, உக்கிரசீலன், போதாயணன், பிசிங்கி, விபாண்டகன், துருவாசன், நாரதன், சுப்பிரன், புதன், சுமதி, அத்திரி, சங்கமன், அரிதகன், பவுலன், சுமுந்தரன், ஆபத்தம்பன், அகத்தியன், கருணன், அங்கிரசன், பருப்பதன், கார்த்தியாயணன், கண்ணுவன், பவுமன், பாசதரன், பராசரன், பங்கு, பப்புரு, பக்குவன், கவுசிகன், கபிலன், கலாதரன், காணன், காலன், கை வல்லியன், கவுதமன், சரபங்கன், முற்கலன், காலவன், பண்டிதோத்தமன், சவுனகன், சதானந்தன், வாரன், சாதாதபன், சமதக்கினி, சாமதக்கினி, சற்சரன், சயன், சனி, பரந்தபன், சத்தியன், தூமபன், சுகன், சத்தி, மாண்டவியன், சுதீக்கணன், இரதிதன், வாமதேவன், பரத்துவசன், வசு, சாபாலன், காண்டிப்பியன், விண்டு, விருத்தன், குண்டலன், காசிபன், தேவலன் என்பனவாகக் கூறப்பெறும். இவர்களோடு இவர்களது ஏவலைச் செய்பவர்களாகிய மாணவர்களும் பலர் இருந்தனர்.

ஒரு நாள் அந்தத் தருப்பைக் காட்டிற்குச் சூத முனிவர் எழுந்தருளினார். அவருடைய சடை கதிரவனுடைய ஒளிகளையெல்லாம் இணைத்துவிட்டதைப் போல் விளங்கியது. அவருடைய திருநுதலிலோ தீவினைகளையெல்லாம் போக்கும் தன்மையுடையதும் திங்களைப் பொடி செய்து எடுத்தாற் போன்றதுமாகிய திருநீறு விளங்கியது. கண்டத்திலோ சிவகண்மணிமாலை திகழ்ந்தது. தருப்பைக்காட்டு முனிவர்கள் சூதமுனிவரை எதிர்கொண்டு வரவேற்றுப் பாராட்டிப்போற்றினர். திருத்தணிகையின் சிறப்பினை மீண்டும் ஒருமுறை கூறவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். தருப்பைக் காட்டு முனிவர்களுடைய விருப்பப்படி சூத முனிவரும் உரைக்கலானார்.

புராண வரலாறு

திருக்கைலாய மலையானது உலகெலாம் அழிந்தொழிகின்ற ஊழிக் காலத்தினும் அழியாத சிறப்பினையுடையது. அம்மலையின் கண்ணே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார்.

*தருப்பைக் காடு - நைமிசாரணியம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:27:27(இந்திய நேரம்)