தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ramanadaga Keerthanigal-பதிப்பாசிரியர் உரை


பதிப்பாசிரியர் உரை

தமிழிசை மூவருள் சீர்காழி அருணாசலக்கவிராயர் ஒருவர். இவர்
தமிழ் இலக்கிய இலக்கணப் புலமையோடு வாய்மொழி இலக்கியம் என்னும்
நாட்டுப்புற கலைகளிலும் நல்ல ஞானமுடையவர். முத்தமிழ்ப்புலமை
வாய்ந்த வித்தகர். இராமபிரானின் திருவருளால் மகாகவி கம்பனை
மானசீக ஆசிரியனாகக் கொண்டு தமிழ்த்தாய்க்கு அணிகலனாக விளங்கும்
இராமநாடகக் கீர்த்தனை என்னும் இவ்வரும்பெரும் நூலைப் படைத்துள்ளார்.

தஞ்சையின் உலகப் புகழ்பெற்ற சரசுவதி மகாலின் ஆராய்ச்சிப்
பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. தனிப்பாடல் திரட்டு, வாதவூர்புராணம்,
நல்லூர்ப்புராணம் நீதித்திரட்டு முதலிய நூல்களைப் பதிப்பிக்கும் பேற்றினைப்
பெற்றிருந்த எனக்கு இந்நூலைப் பதிப்பிக்கும் பணியைத் தந்தனர்.
கையெழுத்துப் படியை நன்கு ஆராய்ந்த பின்னும் பலகுறைகள்
இருந்தமையான் இதுவரை அச்சாகியுள்ள நூல்களில் கிடைத்தனவற்றோடு
ஒப்பிட்டுச் சரியான பாடத்தைத் தேர்ந்து செம்மைப் படுத்தினேன்.
கம்பராமாயணப் பாடல்களை அடிக்குறிப்பாகத் தர எண்ணிய நான்
அவற்றோடு வைத்து ஆராயுங்கால் பலபாக்களின் சாரமாக இந்நூலின்
விருத்தம் கீர்த்தனைகள் அமைந்துள்ளமையைக் கண்டேன். அதனான்
அவற்றை முழுமையாகத்தரின் கதைநிகழ்ச்சியைக் கற்போர் இடையீடின்றி
உணர்ந்து கொள்வதோடு கம்பனின் நயம் முழுதும் எளிய வழக்குச்
சொற்களாலும் உணர்த்த முடியும் என்பதைக் காட்டியுள்ள இவர் புலமைத்
திறத்தையும் கவிதை நயத்தையும் தெரிந்துகொள்ள இயலும் என்று எண்ணி
ஒவ்வொரு விருத்தம், திபதை, கீர்த்தனைகளிலும் வரும் ஒப்புமைப்
பாடல்களைத் தனியே ஒவ்வொரு காண்டத்தின் பின்னும் அமைத்தேன்.

பின்னர்க் கம்பராற் கையாளப்பெற்றுள்ள அரிய கற்பனைகளையும்
உவமைகளையும் பாமரரும் கண்டு சுவைக்கும் முறையில் இவர்
கையாண்டுள்ளமையின் அவற்றைத் தொகுத்து முன்னுரையில் அமைத்தேன்.
இந்நூல் நாடகக் கீர்த்தனை என்னும் பெயரால் அமைந்துள்ளமையின்
நாடகப்பாங்கில் இவர் அமைத்துக் கொண்ட கதையமைப்பினையும்
பாத்திரப்பண்புகளையும் சுருக்கமாக எழுதிச் சேர்த்தேன். இந்நூலில்
வந்துள்ள இராகம் தாளம் ஆகியவற்றை அவ்வப்பாடல் எண்ணுடன்
தொகுத்துச் சேர்த்தேன். சுருக்கமானதொரு ஆராய்ச்சி முன்னுரையோடு
இந்நூல் நிரம்புகின்றது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:44:58(இந்திய நேரம்)