தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பிள்ளையார் பூசை

உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும், பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலத்தில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும் போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்,

 

காளையே ஏறு...
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணி பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு-(காளையே)

வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு

வட்டார வழக்கு: மேற்காண்டே-மேற்கில்; வெப்பாலை-வேம்பு; நிமித்தியம்-நைவேத்தியம்; மொகராத-முகராத; ஒரைச்சி-உரைத்து.

பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை. தீ வளர்த்து ‘ஓமம்’ வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால், தமிழ் உழவர் பெரு மக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை.

சேகரித்தவர்:
கவிஞர் சடையப்பன்

இடம்:
கொங்க வேம்பு, அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:55:08(இந்திய நேரம்)