தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மாரியம்மன்

வைசூரி மிகக் கொடியதொரு வியாதி, அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர். இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர். தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர். இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிகொண்டிருக்கிறாள். இக்கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன, இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப் படையெடுப்பின் போது இத்தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும் பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.

மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில் இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன. வைசூரி நோயைத் தடுக்க முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்திலேயே, மாரியம்மன் பற்றிய வருணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியேயறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம்.

ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர். மாவிளக்கு ஏற்றுவதாகவும், கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், பொங்கல் இடுவதாகவும், தீச்சட்டி எடுப்பதாகவும் சபதம் ஏற்றுக் கொள்வர். மனிதனது கோபத்தைத் தணிப்பதற்காகக் கையாளும் முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர்.

அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன் புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக் கொண்டு சிலர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:55:25(இந்திய நேரம்)